Bஆரம்பமானது அசுரன் பயணம்!

public

தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 26) தொடங்குகிறது.

தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணிகளில் ஒன்றாக வலம் வருகிறது தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து இவர்கள் இணைந்து பணியாற்றும் படம் அசுரன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் நேற்று (ஜனவரி 25) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

தனது சிறப்பான நடிப்பால் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மஞ்சு வாரியர் தமிழில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கரிசல் எழுத்தாளரான பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. 70களின் பின்னணியில் கரிசல் வட்டாரக் கிராமம் ஒன்றில் நாவலின் கதை பயணிக்கிறது. சிறிய நிலத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தும் குடும்பம் வசதி படைத்த ஒருவருக்கு தங்கள் நிலத்தை விற்க மறுக்கிறது. அந்தப் பகை காரணமாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுவனை வசதி படைத்தவர்கள் கொலை செய்கின்றனர். அந்தக் கொலைக்கு கொல்லப்பட்ட சிறுவனின் தம்பி பழி தீர்ப்பதும் அதன் பின் தலைமறைவாகி தனது தந்தையுடன் காடுகளில் சுற்றித் திரிந்து நீதிமன்றம் செல்வதும் நாவலில் கதையாக விரிகின்றன.

வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கினாலும் தனது திரைக்கதையில் வித்தியாசம் காட்டக் கூடியவர் வெற்றிமாறன். லாக்கப் நாவலை சமகாலப் பின்னணிக்கு மாற்றி புதிய சம்பவங்களைச் சேர்த்து முற்றிலும் புதிய படைப்பாக விசாரணை திரைப்படமாக கொடுத்துள்ளார். அந்தவகையில் கதை சொல்லும் முறை, கதாபாத்திரங்கள், கதை நடைபெறும் காலம் ஆகியவற்றை வெற்றிமாறன் மாற்றியமைக்க வாய்ப்புகள் உள்ளன.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை தாணு தனது வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப் சுப்பாராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *