கொரோனா பீதி: அரசு பேருந்தில் வேப்பிலை கட்டிய கிராம மக்கள்!
கொரோனா பரவாமல் தடுக்க கோவையில் அரசு பேருந்து ஒன்றில் கிராம மக்கள் வேப்பிலைக் கட்டி, மஞ்சள் தெளித்த சம்பவம் நடந்துள்ளது.
நாடு முழுவதும் இன்று சுய ஊரடங்கு அமலில் இருக்கும் என்றாலும் மற்ற தினங்களில் பொதுமக்கள் ஏதோ ஒரு முக்கிய காரணத்துக்காக வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கொரோனாவைத் தடுக்கும் விதமாகப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டாலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்று வரும் பயணிகள் சற்று அச்சத்திலேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில்தான் கொரோனா பீதி எதிரொலியாகக் கோவையில் அரசு பேருந்து ஒன்றுக்குக் கிராம மக்கள் வேப்பிலைக் கட்டி மஞ்சள் தெளித்த சம்பவம் நடந்துள்ளது.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவை மண்டலத்தில் 300க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பேருந்துகளில், இருக்கைகள், கம்பிகள் என அனைத்துப் பகுதிகளுக்கும் சுகாதார பணியாளர்கள் சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் கோவை காந்திபுரத்திலிருந்து பேரூர், மாதம்பட்டி வழித்தடத்தில் நாதே கவுண்டன்புதூர் வரை இயக்கப்படும் அரசு பேருந்து 14இல், கொரோனா அச்சத்தால் மக்கள், வேப்பிலை, துளசி கொத்து ஆகியவற்றைப் பேருந்து முழுவதும் கட்டியுள்ளனர். இதுமட்டுமின்றி பேருந்தின் படிக்கட்டுகள் மற்றும் உட்புற பகுதிகளில் மஞ்சள் கரைசலைத் தெளித்துள்ளனர்.
பழங்காலம் முதல் வேப்பிலை, துளசி, மஞ்சள் ஆகியவை கிருமிநாசினிகளாகக் கருதப்பட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற ஒரு செயலை நாதே கவுண்டன்புதூர் மக்கள் செய்தது ஒரு பக்கம் வியப்பாக இருந்தாலும், மறுபக்கம் அவர்கள் எந்த அளவுக்கு கொரோனா வைரஸுக்கு அச்சமடைந்து இருக்கின்றனர் என்பதை அந்தப் பேருந்தின் புகைப்படங்கள் உணர்த்துகிறது.
**-கவிபிரியா**
�,”