மேலும் 500 மில்லியன் டாலர்களை கோரிய இலங்கை!

public

1948ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவலின் போது சுற்றுலா துறையில் ஏற்பட்ட தடையால் அந்நியச் செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டது. உணவு மற்றும் அடிப்படைத் தேவைகள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையை மக்கள் எதிர்கொண்டனர். இதற்கிடையே கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

இலங்கையில் பொருளாதார நிலை மோசமடைந்து கொண்டிருக்கும் நிலையில் மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிடம் தற்போது மேலும் 500 மில்லியன் டாலர்களை எரிபொருள் இறக்குமதிக்கு இலங்கை அரசு கோரியுள்ளது. இந்தியாவுக்கான இலங்கை உயர் அதிகாரி மிலிந்த மொரகொட வருகை தந்த போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மேலும் 500 மில்லியன் டாலர்கள் எரிபொருள் இறக்குமதிக்கு கோரியதாக கூறப்படுகிறது.

இலங்கையில் அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக 1 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியது இந்தியா. அதில் 200 மில்லியன் டாலர்கள் எரிபொருள் இறக்குமதிக்காக பயன்படுத்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளுக்கு இந்தியா கொடுத்த கடனில் 700 மில்லியன் டாலர்கள் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில், “இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்தியா வழங்கிய ஆதரவிற்கு நான் எமது நாட்டின் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதை எதிர்நோக்குகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *