11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர் சொல்லும் காரணம்!

public

பீகாரில் 11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறியவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 1.59 லட்சமாக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ளது.

ஒருபக்கம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், மற்றொரு பக்கத்தில் ஒருவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ஓரை கிராமத்தில் பிரம்மதேவ் மண்டல் என்பவர் வசித்து வருகிறார். இவர் போஸ்ட்மாஸ்டராக வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். இவர் கடந்த ஜனவரி 2ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்றபோது அங்குள்ள சுகாதாரத் துறையினர் சந்தேகத்தின்பேரில் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர், தான் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டதாகவும், தொடர்ந்து மார்ச், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா ஒரு டோஸ் எடுத்துக்கொண்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும், செப்டம்பர் மாதம் மட்டுமே மூன்று முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அவருடைய அடையாள அட்டைகளுடன், அவரின் நெருங்கிய உறவினர்களின் அடையாள அட்டை மற்றும் செல்போன் எண்களை வைத்து தடுப்பூசி செலுத்தி வந்துள்ளார். டிசம்பர் 30, 2021க்குள் 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், 12 வது முறையாக செலுத்த முற்படும்போதுதான் சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்துவிட்டனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் வைரலானது. ஒருவர் எப்படி 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என்ற அதிர்ச்சியில் இதுகுறித்து பீகார் சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, சுகாதாரத் துறையின் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது எஃப்ஆர்ஐ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும் கொரோனா தடுப்பூசி போடும்போது, மிகவும் நன்றாக உணர்ந்ததாக அவர் கூறுகிறார். தடுப்பூசி நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, தனக்கு பல பிரச்சனைகள் இருந்ததாக கூறும் அவர், குறிப்பாக முழங்கால்களில் வலி அதிகமாக இருந்ததாகவும், ஒவ்வொரு தடுப்பூசிக்குப் பிறகும், எந்தவகையான வலியையும் உணரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த தடுப்பூசியை கொண்டு வந்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பதினொரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டது தவறு என்றாலும், அதன்மூலம் மக்களுக்கு அவர் சொல்லும் செய்தி நன்மையானதாக உள்ளது. பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்பும், தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிருக்கு ஆபத்து வரும் என்ற வதந்தியை நம்பி பலரும் தயக்கத்தில் உள்ளனர். ஆனால், தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், தன் உடம்பில் இருந்த வலி அனைத்தும் நீங்கிவிட்டதாக அவர் கூறும் செய்தி தயக்கம் காட்டும் மக்களுக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *