வேலைக்காக புலம்பெயர்வோரின் புகலிடமாகும் தென்மாநிலங்கள்!

public

வளர்ந்த மாநிலம் என்று சொல்லப்பட்டு வருகிற குஜராத்திலிருந்து லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டுக்கு வேலைதேடி வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இந்திய மக்கள் வேலை நிமித்தமாக நாட்டிற்குள் தங்கு தடையின்றி நடமாடுவதும், புலம்பெயர்வதும் அதிகரித்து இருக்கிறது என்கிறது 2016-17ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை. பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருக்கும் பகுதிகளிலிருந்து கிளம்பி, வளர்ந்த அல்லது வளரும் பகுதிகளுக்கு வேலைதேடி மக்கள் புலம்பெயர்கிறார்கள்.

இவ்வாறு புலம்பெயர்பவர்கள் அதிக அளவில் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்து வருபவர்கள் என்றும், அவர்கள் நோக்கி செல்லும் மாநிலங்களில் முதன்மை இடங்களில் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு உள்ளது. இதுதவிர கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களும் இந்தப்பட்டியலில் இருப்பது தெரியவருகிறது.

2001-2011 வரையிலான காலத்தில், புலம்பெயரும் உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் சராசரியாக 4.5 விழுக்காடு வளர்ந்திருக்கிறது. இது 1991-2001 வரையிலான காலத்தில் கண்ட வளர்ச்சி 2.4 விழுக்காடு மட்டுமே. இந்தியாவின் மொத்த உழைப்புப் படையில் புலம்பெயர்ந்தவர்களின் பங்கு 2011இல் 10.5 விழுக்காடு; இது 1991 மற்றும் 2001 ஆண்டுகளுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வெறும் 8.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது . ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 2000க்கு பின், வேலை சார்ந்த புலம்பெயர்வு ஆண்டுக்கு 5 கோடி முதல் 9 கோடி வரை இருந்து வந்துள்ளது.

பெரிய மாநிலங்களுள் தமிழ்நாடு, புலம்பெயர்ந்து வருபவர்களின் புகலிடமாக மாறியிருப்பதால் அது தொடர்பான இரண்டு முக்கியமான போக்குகளை கவனிக்க வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வந்து ஆலைத் தொழில், கட்டிட வேலை முதல் உணவகங்களில் சமையல், சுத்தம் செய்யும் வேலைகளில் இருப்பவர்கள் பலரும் உத்தரப் பிரதேசம், ஒடிசா, பிகார் மற்றும் ஆந்திராவிலிருந்து வருபவர்கள் என்ற பொதுவான கருத்து ஒன்று உண்டு.

இது உண்மை என்றபோதும், வளர்ந்த மாநிலம் என்று கருதப்படும் குஜராத்திலிருந்து ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் தமிழகத்திற்கு வேலை தேடி வருகின்றனர் என்கிறது ஆய்வறிக்கை. இரண்டாவதாக, புலம்பெயர்ந்து இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில்தான் சென்று குவிகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஒரு மாநிலத்திற்குள் புலம்பெயர்வு என்பது தொழில்மயமாதல், நகரமயமாதலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் பிரதிபலிப்பு என்றாகும்போது, அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், அரசின் மீதான சுமை அதிகமாகிறது. புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு, தங்க அடிப்படை வசதிகள் கொண்ட இடம், சுகாதார வசதி, சமூகப் பாதுகாப்புத் தொகை, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி போன்றவற்றை உறுதி செய்தல் என ஏராளமான சவால்கள் நம்முன் உள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *