விதிமீறல் ஷேர் ஆட்டோக்களுக்கு தடை: உயர்நீதிமன்றம்!

public

மதுரையில் விதிகளை மீறி அனுமதி இல்லாமல் இயங்கும் ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்து அவைகளைத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று ஜூலை 25ம் தேதி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு பேருந்துகளை மட்டும் சார்ந்து இல்லாமல் ஷேர் ஆட்டோக்களையும் பயன்படுத்திவருகின்றனர். இந்த ஷேர் ஆட்டோக்கள் ஒரு கட்டத்தில் புற்றீசல் போல பெருகி போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் மாறிவருகின்றன. இதற்கு காரணம் பல ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்துத்துறை அனுமதி இல்லாமல் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் விதிகளை மீறி ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும், அதிக அளவில் பயணிகளை ஏற்றுவது, அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் கூறி, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று ஜூலை 25ம் தேதி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சத்யா புஷ்பநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரையில் மொத்தம் 7,900 ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன என்று தெரிவித்தார். மேலும், இதில் 2016 ஜூன் மாதம்வரை விதிமீறலில் ஈடுபட்டதாக 915 ஆட்டோக்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், விதிமீறல்களுக்காக 1 கோடியே 67 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, 2016 ஜூன் மாதத்துக்கு பிறகு விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், மதுரையில் விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோக்கள் மற்றும் அனுமதி இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களின் உரிமத்தை ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து, 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வரை விதிமீறல் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 2 வாரங்களுக்குள் மண்டல போக்குவரத்து அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *