லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து : நீதிமன்றம் தீர்ப்பு!

public

புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

2006-11 ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக நீதிபதி ரகுபதி இருந்தபோது, அந்த ஆணையம் முன்னாள் முதல்வர் கலைஞர், முன்னாள் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பியது.

அந்தச் சம்மனை ரத்து செய்யக்கோரியும், ஆணையம் அமைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அப்போது ஆணைய சம்மனுக்கும், விசாரணை நடைமுறைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையங்கள் அமைக்கப்படுவதும், அதற்கு மக்களின் பணம் வீணடிக்கப்படுவதாகவும் அதிருப்தி தெரிவித்து, ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

கலைஞர் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானதையடுத்து, அவர் வழக்கு மட்டும் முடிக்கப்பட்ட நிலையில், ஆணையத்தை எதிர்த்த தங்கள் வழக்குகளை வாபஸ் பெறுவதாக ஸ்டாலின், துரைமுருகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவற்றை ஏற்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணை ஆணையம் என்பதே கண் துடைப்பு நாடகம் என்று கருத்து தெரிவித்ததுடன், ஆணையம் திரட்டிய ஆவணங்கள் மற்றும் தகவல்களை தமிழக அரசு பரிசீலித்து குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் குற்றவியல் விசாரணை நடத்தலாம் என பரிந்துரைத்தார்.

நீதிபதி பரிந்துரையின் அடிப்படையில், புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையம் விசாரித்த மற்றும் திரட்டிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புதுறைக்கு மாற்றி 2018 செப்டம்பர் 24ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்பு நவம்பர் 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பரிந்துரைப்படி ஆவணங்களைத் தமிழக அரசு முறையாகப் பரிசீலிக்காமல் நேரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அவசரகதியில் மாற்றியுள்ளதாக இருவர் தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டது.

அப்போது அரசு தரப்பில், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்கவும், வழக்கு தொடர்பான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கவும், அந்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடந்த ஆகஸ்டு 3ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆணையம் திரட்டிய ஆவணங்களை ஆராய்ந்தபோது, புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டதில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கட்டிட முறைகேட்டில் 629 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எளிதில் விட்டுவிட முடியாது என்றும் குறிப்பிடப்பட்டது. லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, கடந்த நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் அந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று (டிசம்பர் 13) காலை தீர்ப்பு வழங்கினார்.

விசாரணை ஆணையம் தனது விசாரணையை முழுமையாக முடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், விசாரணையின்போது திரட்டப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு என குறிப்பிட்ட நீதிபதி புஷ்பா சத்யநாராயணா லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு மாற்றிப் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக தீர்ப்பு வழங்கினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *