ரம்ஜான்: அதிகாலையிலேயே வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை!

public

ரம்ஜான் நோன்பு மற்றும் வெயில் காரணமாக வாக்குப்பதிவை அதிகாலையிலேயே தொடங்க கோரிய மனு தொடர்பாக உரிய முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 ஜூன் 5 அல்லது 6 தேதிகளில் ரம்ஜான் பண்டிகை நடைபெறவுள்ளது. இதற்காக வரும் மே 6ஆம் தேதி இஸ்லாமியர்கள் தங்களது நோன்பு காலத்தை தொடங்கவிருக்கின்றனர். இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டியும், வெயிலின் தாக்கம் காரணமாகவும் வாக்குப்பதிவை தற்போதைய நேரத்தைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்பாகவே தொடங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

வழக்கறிஞர்கள் முகம்மது நிஜாமுதின் பாஷா , ஆசாத் ஹயாத் தாக்கல் செய்துள்ள மனுவில், ”அனைத்து சமூக மக்களும், குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினர், தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்ய ஒரு வசதியான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். சட்டப்பிரிவு 14ன் படி ஜனநாயக நடைமுறையில் அனைவருடைய சம பங்கேற்பும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

”அடுத்த சில நாட்களில், பிகார், டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், ஹரியானா, உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வரவிருக்கும் காலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த கடுமையான வெப்ப காலங்களில் முஸ்லீம் மக்கள் வரிசையாக வாக்குச் சாவடியில் நின்று வாக்களிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ரம்ஜானை முன்னிட்டு, பெரும்பாலானோர் அதிகாலையில் உணவு அருந்தி பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கிவிடுவார்கள். பின்னர் நாள் முழுவதும் நோன்பு இருப்பதால், வெயிலில் சென்று வாக்களிப்பது சிரமம்.

ஆகவே, 5ஆம், 6ஆம் மற்றும் 7ஆம் கட்ட வாக்குப் பதிவை காலை 7 மணிக்குத் தொடங்குவதற்குப் பதிலாக 2 மணி அல்லது 2.30 மணிநேரம் முன்கூட்டியே தொடங்க வேண்டும். அதாவது, அதிகாலை 4.30 மணி அல்லது 5 மணிக்கு வாக்குப்பதிவைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தித் தேர்தல் ஆணையத்திடம் கடந்த திங்கள் கிழமை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வாக்குப்பதிவை முன்கூட்டியே தொடங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் இன்று (மே 2) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *