<ரத்தம் சிந்திய வெற்றி!

public

ஆக்ரோஷமான அந்த விளையாட்டுத் திடலில் இத்தனை துர்சம்பவம் ஒன்றை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. டிபோர்டிவோ அணியுடன் ரியல் மேட்ரிட் அணி மோதிய லா லிகா கிளப் போட்டியில் ஆரம்பம் முதலே ரியல் மேட்ரிட் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், டிபோர்டிவோ அணியின் அட்ரியன் லோபஸ் 23ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அதிர்ச்சியைக் கொடுத்தார். 2018ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து ரியல் மேட்ரிட் அணி ஒரு வெற்றியும் பெறவில்லை. அத்துடன் பல போட்டிகளில் தோல்வியும், டிராவும் எதிர்பாராமல் நிகழ்ந்ததால் புள்ளிப் பட்டியலிலும் பின்பகுதியில் இருந்தது. எனவே, இந்தப் போட்டியில் கண்டிப்பான வெற்றியை எதிர்பார்த்திருந்த அவர்களுக்கு முதல் கோல் அதிர்ச்சியைக் கொடுத்தது.

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் ஆடிய ரியல் மேட்ரிட் அணி வீரர்களின் அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. கவுண்டர் அட்டாக்கில் (Counter Attack) சிறந்த அணிகளில் ஒன்றான ரியல் மேட்ரிட்டின் முயற்சி 33ஆவது நிமிடத்தில் பலனளித்தது. முதல் கோலை நாக்கோ அடித்தார். ஆட்டம் சமநிலை அடைந்ததால் இரு அணியினரும் தடுப்பாட்டத்தில் இறங்கினார்கள். ஆனால், அதிவேக கால்பந்தாட்ட ஓட்டக்காரர்களில் ஒருவரான கேரத் பேல், 42ஆவது நிமிடத்தில் அடித்த Lob ஷாட் எவ்வித அட்டகாசமும் செய்யாமல் வளைந்துசென்று கோல் கம்பத்துக்குள் விழுந்தது. அந்த சமயத்தில் ரொனால்டோ கீழே விழுந்ததற்காக பெனால்டி ஷூட் கேட்டு கோல் கீப்பரின் கவனத்தைத் திசைதிருப்பிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த சில நிமிடங்களில், அதாவது 58ஆவது நிமிடத்தில், கார்னரிலிருந்து உதைக்கப்பட்ட பந்தை மிகவும் பொறுமையாகத் தலையால் முட்டி மீண்டும் கோல் அடித்தார் கேரத் பேல். ஆட்டம் முழுவதிலுமே டிபோர்டிவோ அணியின் கோல் கீப்பர் ருபேன் இவான் மார்டினெஸ் மிக வேகமாக ஆடிக்கொண்டிருந்தார். இப்படி முதல் முப்பது நிமிடங்களுக்குத் தங்களது கோல் தடுக்கப்பட்டதுமே மிகவும் மெதுவான Lob ஷாட் அல்லது ஹெட்டர் வகையான ஷாட்களையே ரியல் மேட்ரிட் அணியின் வீரர்கள் பயன்படுத்திவந்தார்கள்.

கேரத் பேல் இரண்டு கோல் அடித்ததும், மற்றவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கும் வேலைக்கு நகர்ந்துவிட்டார். அவர்களில் முக்கியமானவர் ரொனால்டோ. ஆனால், பல வாய்ப்புகளை கோல் கம்பத்திற்கு அருகிலிருந்தே தவறவிட்டுக்கொண்டிருந்த ரொனால்டோ ஒரு கோல் வாய்ப்பை லூகா மோட்ரிடுக்குக் கொடுத்தார். யாரும் எதிர்பாராத சமயத்தில் Heal Pass மூலம் மோட்ரிடுக்கு கொடுக்கப்பட்ட பந்தை, கச்சிதமாக கோல் போஸ்டில் கீழ் கார்னருக்கு உதைத்துக் கோலாக்கினார். அதன் பின் ரொனால்டோ மிகவும் பொறுமையாக எதிரணி வீரர்களிடமிருந்து பிரியத் தொடங்கினார்.

கேரத் பேல் அடித்த ஹெட்டர் கோல் கிட்டத்தட்ட ரொனால்டோவுக்குச் சொந்தமானது. ஆனால், அவரை மூன்று பேர் சூழ்ந்து நின்று எகிறாமல் விட்டுவிட, சுதந்திரமாக இருந்த கேரத் பேல் பறந்துவந்து அந்த கோலை அடித்தார். எனவே, பந்தை கவுண்டர் அட்டாக்கில் விரட்டி வரும்போது செகெண்ட் மேனாக இல்லாமல், கடைசியாக வந்துகொண்டிருந்தவருக்கு 78ஆவது நிமிடத்தில் அடித்தது ஜாக்பாட். எவ்விதத் தொந்தரவும் இல்லாமல் நேரடியாக அவர் காலிடமே வந்த பந்தை திருப்பிவிட்டது மட்டுமே அவர் செய்த வேலை. அந்த உத்வேகத்துடன்தான் 84ஆவது நிமிடத்தில் பறந்துவந்த பந்தையும் கோலாக்க முயன்றார். அவர் நினைத்தது போலவே பந்து கோல் போஸ்டுக்குள் சென்றாலும், டிபோர்டிவோ அணியின் ஃபெபியன் ஸ்கார் அப்பந்தைத் தடுக்க நினைத்து உயர்த்திய அவரது வலது கால் ரொனால்டோவின் நெற்றியைப் பதம்பார்த்தது.

கீழே விழுந்து துடித்த ரொனால்டோவுக்கு முதலுதவி செய்ய அவரது டீம் விரைவதற்குள் நெற்றியிலிருந்து வடிந்த ரத்தம் முகமெங்கும் பரவி, வெள்ளை உடையையும் சேர்த்து நனைத்தது. 5-1 என நான்கு கோல்கள் முன்னிலையில் இருக்கும்போது இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும், அவசரப்பட்டுவிட்டோம் என்ற உணர்வும் அதற்குப் பிறகு ரொனால்டோ வெளிப்படுத்திய உணர்வுகளின் வாயிலாகத் தெரிந்தது. ஆனால், சிறிய அளவில் தள்ளிவிட்டால்கூட ஆக்ரோஷமாகச் சண்டைக்குச் செல்வதையும், கோபத்தை வெளிப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்ட ரொனால்டோ ஃபெபியனைக் கைகொடுக்கச் சொல்லி எழுந்து அவரைக் கட்டியணைத்தது அவரிடத்தில் காணப்பட்ட பெரிய மாற்றம்.

அதன் பிறகு, 88ஆவது நிமிடத்தில் முதல் கோல் அடித்த நாக்கோ, கோல் கீப்பருக்கு மிக நெருங்கிய இடத்தில் நின்றுகொண்டு திடீரெனத் திரும்பி கோல்கீப்பரின் கால்களுக்கிடையே அடித்து கோல் கணக்கை முடித்துவைத்தார்.

19 போட்டிகளில் 10 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகள் பெற்று நான்காவது இடத்தில் 35 புள்ளிகளுடன் இருக்கிறது ரியல் மேட்ரிட் அணி. ரொனால்டோ மருத்துவர் ஆலோசனையுடன் வீட்டில் ஓய்வெடுத்துவருகிறார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *