நீதா அம்பானி – நடுத்தரக் குடும்பத்திலிருந்து சக்தி வாய்ந்த பெண்

public

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் இந்திய உறுப்பினர் பதவிக்கு நீதா அம்பானியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் பிரேசிலில் நடைபெறும் கூட்டத்தில் இவரை அதிகாரப்பூர்வ உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிகிறது. அப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியப் பெண் இவர்தான்.

52 வயதாகும் நீதா அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவி ஆவார். இவர்,ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் இருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை சமீபத்தில் வெளியிட்ட, ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இவரது பெயர் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது அப்பா ரவீந்திரபாய் தலால் பிர்லா நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றியவர். மும்பையில் இருக்கும் நர்சி மோஞ்சி கல்லூரியில் பிகாம் படித்தவர். இவரது அம்மா ஒரு குஜராத் நாட்டுப்புற நடனக்கலைஞர் என்பதால் இவர், ஐந்து வயது இருக்கும்போதே நடனம் கற்றுக்கொண்டார். குறிப்பாக பரதநாட்டியம் சிறப்பாக ஆடக்கூடியவர். ஒருமுறை நவராத்திரி விழா நிகழ்ச்சி ஒன்றில் இவர் ஆடியதைப் பார்த்த பிரபல தொழில் அதிபர் திருபாய் அம்பானி அதனை வெகுவாக ரசித்தார். பின்னர் இவரைப் பற்றி விசாரித்து, போன் நம்பர் கண்டுபிடித்து, மறுநாள் காலை போன் செய்திருக்கிறார்.

போனை எடுத்தவர் நீதா அம்பானி. “ஹலோ நான் திருபாய் அம்பானி பேசறேன்” என்றது எதிர்முனை. உடனடியாக போனை “டொக்” என்று வைத்துவிட்டார். அவர் மீண்டும் போன் செய்து, “ஹலோ நான் திருபாய் அம்பானி பேசறேன்” என்றிருக்கிறார். யாரோ நம்மை கலாய்க்கிறார்கள் என்று நினைத்த நீதா, “நீங்க அம்பானின்னா, நான் எலிசபெத் டெய்லர்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

அடுத்தமுறை நீதாவின் அப்பாதான் போனை எடுத்து பேசியிருக்கிறார். ”உண்மையாவே அம்பானிதான் போன் பண்ணியிருக்கார். நீ இனிமே அவர்கிட்ட ஒழுங்கா பேசு” என்று கூறவேதான் இவர் அதை நம்பி அவரிடம் பேசியிருக்கிறார்.பின்னர், நீதாவை தனது அலுவலகத்துக்கு அழைத்திருக்கிறார். அந்த சந்திப்பின்போது இவரது படிப்பு மற்றும் பொழுதுபோக்கு குறித்தெல்லாம் இயல்பாக விசாரித்த அவர், “என்னுடைய மகன் முகேஷைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்கிறார். அதன்பிறகே, முகேஷும் இவரும் சந்தித்து பேசி காதலித்து கைபிடித்திருக்கிறார்கள்.இது காதல் திருமணம் போல தோன்றினாலும் ஒருவகையில் அரேஞ்ச் மேரேஜ் தான். திருமணமான போது நீதாவுக்கு இருபது வயது தான்.

எல்லா பெண்களையும் போலவே, திருமணமான உடன் தனது வேலை, குடும்பத்தை மட்டுமே பார்த்துக்கொள்வது என்று நினைத்திருக்கிறார். அப்போது படல்கங்கா பகுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. அப்பகுதியில் பள்ளியே இல்லாததை கவனித்த நீதா அம்பானி, பள்ளி தொடங்கும் ஐடியாவை முகேஷிடம் தெரிவித்திருக்கிறார். அந்தப் பள்ளியில் சில காலம் ஆசிரியராக இருந்திருக்கிறார். பின்னர் இஷா, ஆகாஷ், அனந்த் அம்பானி என்ற மூன்று குழந்தைகளுக்குத் தாயாக, ஒரு ஆசிரியராகவே தன் பெரும்பாலான நாட்களைக் கழித்திருக்கிறார். இந்த சமயத்திலெல்லாம் மீடியாவில் இவரது பெயர் அடிபடாமலேயே இருந்திருக்கிறது.

முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன்ஸ் என்ற ஐபிஎல் அணியை 2008-ம் ஆண்டு வாங்கினார். இந்த அணியை நிர்வகிக்கும் பொறுப்பு நீதா அம்பானியின் வசம் வந்தது. ஆனால், இவருக்கோ கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அதுமட்டுமல்லாமல் விளையாட்டின்மீது அவருக்கு பெரிய ஆர்வம் இல்லை. ஆனால், அதன்பிறகு கிரிக்கெட்டில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தினார். குறிப்பாக ஓராண்டுக்கு அவர் வீடு, கிளப் என எந்த இடத்தில் டிவி பார்த்தாலும் அங்கு கிரிக்கெட்தான் இருக்கும். அதேபோல ஐபிஎல் போட்டி நடக்கும்போதெல்லாம் ஸ்டேடியத்துக்குச் சென்றுவிடுவார். அப்போதுதான் ஊடகங்களால் இவர் அதிகமாக கவனிக்கப்பட்டார். போட்டி நடக்கும்போது வீரர்களுடனே இருந்து உற்சாகப்படுத்துவார். முதல் இரண்டு சீசன்களில் சொதப்பிய மும்பை இந்தியன்ஸ், மூன்றாவது சீசனில் இறுதிப்போட்டி வரை வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அணி 2013 மற்றும் 2015-ல் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது.

அதேபோல ஆரம்பத்தில் நஷ்டக்கணக்கு காட்டிக்கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ், பிறகு ஓரளவு சீரானது நீதா அம்பானியால்தான். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பள்ளிகள், மருத்துவமனை, அலுவலகம் மற்றும் ஐபிஎல்லை நிர்வகித்து வருகிறார். இவரது வசதிக்காகவே நகரக்கூடிய அலுவலகத்தைப் பிரத்யேகமாக உருவாக்கி இருக்கிறார்கள். இவர் பள்ளியில் இருந்தால் அது பள்ளிக்கு சென்றுவிடும். ஐபிஎல் போட்டியில் இருந்தால் ஸ்டேடியத்துக்கு செல்லும் என்று இவர் எங்கு போனாலும் அந்த அலுவலகமும் கூடவே செல்லும்.

அலுவலகத்தைப் பார்ப்பதைப் போலவே குடும்பத்தையும் சிறப்பாக வழி நடத்தி வருபவர் நீதா. இவர் எங்கு இருந்தாலும் குழந்தைகளின் மீது ஒரு கண் இருக்கும். “என் குழந்தைங்க எங்கே போனாலும் என்னிடம் சொல்லிவிடுவார்கள். அன்ந்த் இப்போது கமத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார். குழந்தைகள் என்ன செய்தாலும் இவருக்கு உடனுக்குடன் தகவல் வந்துவிடும்.

இவரின் பெறும் முயற்சியால் 2010-ம் ஆண்டு ரிலையன்ஸ் ஃபவுண்டேசன் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக இருக்கும் இவர், ஊரக வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், நகர்ப்புற புதுப்பித்தல் மற்றும் கலை, கலாச்சார மேம்பாட்டுக்காகப் பணியாற்றி வருகிறார். இந்த அமைப்பு கடந்த 2012-ம் ஆண்டு சத்யமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியைத் தயாரித்ததை குறிப்பிட்டு சொல்லலாம்.

தற்போது நீதா அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் 4ஜி சேவையான ஜியோ சேவைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இது சந்தையில் ஏற்கனவே இருக்கும் ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரண நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த நீதா, குடும்பத்தை மட்டுமே கவனித்த நிலைமாறி, ஆசியாவின் சக்தி வாய்ந்த பெண்மணியாக மாறியிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

– ஸ்வரா வைத்தீ�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *