தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்துடனேயே போட்டியிட்டோம்!

public

சல்மான் குர்ஷித் நேர்காணல் தொடர்ச்சி

**நிஸ்துலா ஹெப்பர், சந்தீப் புக்கான்**

2ஜி விவகாரத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கூட்டுப் பொறுப்பாக எடுத்துக்கொள்ளாமல், அதைத் தனிப்பட்ட தொலைத் தொடர்புத்துறை அமைச்சரின் பிரச்னையாக கை கழுவிவிட்டதாக மத்திய முன்னாள் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆங்கில இதழான , ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியைக் காலையில் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சி இதோ…

** 2ஜி விவகாரத்தில் ஊழலுக்கான சட்ட முகாந்திரம் ஏதுமில்லை என்று தெரிந்தும், ஒட்டுமொத்த அரசுக்கே பதற்றம் எப்போது ஏற்பட்டது? கணக்குத் தணிக்கைக் குழு அறிக்கைக்குப் பிறகா?**

ஆம்… கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால், 2012ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசாங்கத்தில் இருந்த நாங்கள் தற்காத்துக்கொள்ளுதலுக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளத் தவறிவிட்டோம். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும்போதே கருத்து ரீதியாக நாங்கள் காங்கிரஸின் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டோம்.

**அப்படியானால் கடைசி இரண்டு வருடங்களாக மன்மோகன் அரசு ஒரு காபந்து அரசைப் போன்றுதான் செயல்பட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா?**

அன்று எதிர்க்கட்சியான பாஜகவினர் எங்கள் அரசைக் கொள்கை முடக்கம் ஏற்பட்டுவிட்ட அரசு என்று விமர்சித்தார்கள். அவர்கள் நாடாளுமன்றத்தை நடத்தவே விடவில்லை. நாடாளுமன்றம் மூலம் நாங்கள் மக்களுக்கு விளக்கம் அளிக்க முயன்றோம். ஆனால் அவர்கள் நாடாளுமன்றம் தொடங்கியதுமே கூச்சலையும் இரைச்சலையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள். நாங்கள் பின்வாங்கிவிட்டோம். நாங்கள் என்னென்ன செய்ய நினைத்தோமோ அத்தனையும் முடக்கப்பட்டன. அன்று உண்மையிலேயே நாங்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருந்தோம்.

எனக்கு இது தனிப்பட்ட முறையிலும் மிகவும் துயரகரமானது. ஏனெனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் வரலாற்றுப் புகழ் மிக்க சாதனைகளைப் படைக்கப்பட்டன. ஆனால் அப்போது நான் அந்த அரசில் பங்குபெற்றிருக்கவில்லை. அதேநேரம் நான் பங்குபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் ஆட்சியின் (2009-2014) முடிவில் நாங்கள் மக்களிடம் சென்றபோது மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு எங்களிடம் எந்த நல்ல விஷயங்களும் நினைவுக்கு வரவே இல்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாங்களே மறந்துவிட்டோம், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை மறந்துவிட்டோம். ஜவஹர்லால் நேரு நகர மேம்பாட்டுத் திட்டத்தை மக்களிடம் கொண்டுசெல்ல மறந்துவிட்டோம். காரணம் ஒரு பக்கம் பாஜகவும் இன்னொரு பக்கம் கெஜ்ரிவாலும் எங்களைச் சிதைத்துவிட்டார்கள்.

**அரவிந்த் கெஜ்ரிவால் அப்படி என்ன செய்துவிட்டார்?**

அரவிந்த் கெஜ்ரிவாலும், அவரது கட்சியினரும்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை முற்றிலும் சிதைத்தவர்கள். அவரை எப்படிக் கையாள்வது என்று உண்மையிலேயே எங்களுக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. எங்களிடம் இருக்கும் மிக மூத்த அனுபவஸ்தரான பிரணாப் முகர்ஜியேகூட கெஜ்ரிவாலின் அணுகுமுறைகளால் சற்றே நிலைகுலைந்துபோய்விட்டார். ஒரு நாள் இரவு 11 மணிக்கு பிரணாப்ஜி என்னை போனில் அழைத்தார். ‘சல்மான், இந்த கெஜ்ரிவால் மிகவும் வரம்பு மீறிப் போய்க்கொண்டிருக்கிறார். உடனே பத்திரிகையாளர்களை அழைத்து பதிலடி கொடுங்கள்’ என்று சொன்னார். நான் முதல் முறையாக இரவு 11 மணிக்கு மேல் பத்திரிகை நண்பர்களை அழைத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் தடித்த விமர்சனங்களுக்கு பதில் சொன்னேன்.

**கெஜ்ரிவாலை உங்களால் ஏன் கையாள முடியவில்லை?**

மூச்சுவிட முடியாத அளவுக்குப் பிரச்சினைகள் இருக்கும்போது எங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லை. அன்றைய நிலையில் சுமார் 12 அல்லது 13 அமைச்சர்கள் ஊழல் புகார் சுமத்தப்பட்டிருந்தார்கள். இந்த இக்கட்டான நிலையில்தான் நிர்பயா பிரச்சினை வெடித்தது. டெல்லி முழுதும் போராட்டம் வெடித்தது. உண்மையைச் சொன்னால் ரஷ்ய அதிபர் புதின் ஹைதரபாத் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரோடு ஏற்பாடு செய்யப்பட்ட டின்னருக்குக்கூட மத்திய அமைச்சர்களான எங்களால் செல்ல முடியவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி ஒரு அசாதாரணமான சூழலை உங்களால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. நாங்கள் மத்திய அமைச்சர்கள்தான், ஆனால் எதுவும் செய்ய முடியாதவர்களாக இருந்தோம். நாங்கள் எதைத் தொட்டாலும் அது தவறாகவே போனது.

**நடப்பு விஷயங்களுக்கு வருவோம். உத்தரப் பிரதேசத்தில் எஸ்.பி. -சமாஜ்வாதி கூட்டணி உருவாகி பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனால், அதில் காங்கிரஸ் இடம்பெறுமா என்பது பற்றி எந்தப் பேச்சும் இல்லையே? உங்கள் நிலை என்ன?**

நாங்களும் அந்தக் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று நான் விரும்புகிறேன். சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி வலிமையான கூட்டணிதான். ஆனால், பாஜகவுக்கு இன்னும் பல சரிவுகளைக் கொடுக்க வேண்டிய தேவையிருப்பதால் காங்கிரஸ் அந்த அணியில் சேரும்போது இன்னும் வலுவான அணியாக அது மாறும்.

**தமிழாக்கம்: ஆரா**

[2ஜியை எதிர்கொள்ளத் தவறிவிட்டோம்: சல்மான் குர்ஷித் நேர்காணல்!](http://minnambalam.com/k/2018/06/05/18)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *