திரைத் துறையின் தாரகை: திரைப் பிரபலங்கள் புகழஞ்சலி!

public

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி என இந்தியத் திரையுலகில் கோலோச்சியவர் நடிகை ஸ்ரீதேவி. திடீரென அவர் காலமானது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பிரதமர் மோடி முதல் கடைக்கோடி தமிழ் சினிமா ரசிகர் வரை தங்களது ஆழ்ந்த வருத்தங்களைப் பகிர்ந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஸ்ரீதேவிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், இளையராஜா, சிவகுமார் உள்ளிட்டோர் பேட்டியிலும், வைரமுத்து உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களின் மூலம் ஸ்ரீதேவியோடு இணைந்து பணியாற்றி அனுபவங்களை பகிர்ந்திருக்கின்றார்கள்.

**இந்திய சினிமாவுக்கே இழப்பு- ரஜினி**

3 மாதங்களுக்கு முன்புதான் ஸ்ரீதேவியை சந்தித்தேன். எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரை இழந்தது நெருக்கமான நண்பரை இழந்தது போல இருக்கிறது. இயக்குநர் கூறுவதை கேட்டு, கேமரா முன்னால் மின்னல் வேகத்தில் நடிப்பை வெளிப்படுத்துவார். யாரிடமும் கோபப்படாதவர். இந்திய சினிமாவுக்கே இழப்பு. ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு வந்த பின் மும்பை செல்வது குறித்து முடிவு செய்யப்படும்.

**கன்னி மயிலெனக் கண்டேன்-கமல்**

ஸ்ரீதேவி ஒரு அற்புதமான நடிகை. உச்ச நட்சத்திரம். இவையெல்லாம் விபத்துகள் அல்ல, படிப்படியாக முயன்று முயன்று அந்த குழந்தை நடந்துவந்த பாதை. குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். அவருக்கு 15, 16 வயது இருக்கும்போது நான் சந்தித்தேன். அப்போது அவர் குழந்தைத் தனம் மாறாத பெண்ணாகத்தான் இருந்தார். நான் அவருக்கு கிளாஸ் லீடர் போன்றவன். இருவரும் ஒரே பள்ளியில் படித்த உணர்வுதான் எனக்கு இருக்கிறது. அது உண்மையும் கூட. மூன்று முடிச்சு படத்தில் அவருடன் நடிக்கும்போது இயக்குநர் பாலசந்தரின் உத்தரவின்பேரில் கூட நடிக்கும் நடிகராக மட்டுமல்லாமல், நடனம் கற்றுக்கொடுப்பது, அசைவுகள் கற்றுக்கொடுப்பது என அவருடனான நட்பு தொடங்கியது. அவருடன் நான் நடித்த 27 படங்கள் என்பது வாழ்நாளில் ஒரு சிறிய பகுதி போன்றது. அவரது வாழ்வின் பகுதிவரை நான் அவருடனேயே பயணித்துக் கொண்டிருந்தேன்.

பிறகு அவர் இந்தியில் பெரிய நட்சத்திரமானபோது கூட, அவருடன் நான் நடித்தேன். அதன்பிறகு இருவரும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கினோம். தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ள பெண்மணி அவர். அந்த குணாதிசியம் எங்கள் இருவருக்கும் பொதுவானது என்பதால், எங்கள் நட்பு வியப்பும், ஆச்சரியமும், பாசமும் கொண்டதாகவே இருந்தது. போன மாதம் அவரைச் சந்தித்த போது கூட கண்களில் அந்த வாஞ்சை தெரிந்தது. அவருக்கும் எனது கண்ணில் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கண்ணதாசன் எழுதிக்கொடுத்த தாலாட்டுப் பாடல்தான் காலையிலிருந்து என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த தாலாட்டுப் பாடலைத்தான் அவருக்கு நாம் இப்போது பாட வேண்டும். நல்ல கலைஞரை இழந்துவிட்டோம். ஆனால், அவர் விட்டுச் சென்ற உத்வேகம், அதுபோல் இன்னும் பல தமிழ் கலைஞர்களை உருவாக்கும். தமிழ்நாட்டிற்கு இந்திய அளவில், உலக அளவில் பெருமைசேர்த்த பெரும் தாரகை அவர்.

**அழகு முகம் மறைந்துவிட்டது- வைரமுத்து**

ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது.

ஒரு நடிகை என்பவர் பெண்ணினத்து உணர்ச்சிகளைப் பிம்பப்படுத்துகிறார். பலகோடிப் பெண்களின் உணர்ச்சிகளைத் தன் ஒற்றை முகத்தில் ஒளிபரப்பியவர் ஸ்ரீதேவி. கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் அவர்முகம்.

‘மூன்றாம் பிறை’யில் நான் எழுதிய நரிக்கதை பாடலைப் பாட வந்தபோது அவரை முதல்முறை பார்த்தேன். நானெழுதி அவர் கடைசியாகப் பாடி நடித்த புலி படத்தின் பாட்டு வெளியீட்டு விழாவில் கடைசியாகப் பார்த்தேன். தெற்கில் உதித்து வடக்கை வெற்றிகொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது.

அரைநூற்றாண்டு காலம் திரையில் இயங்கினாலும் ஒரு நூற்றாண்டின் கலைப் பணியை ஆற்றிய ஸ்ரீதேவியை இந்தியக் கலையுலகம் மறக்காது. ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை. திரைக்கலைஞர்களுக்கு மரணமில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், கலை அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

**மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது- சிவகுமார்**

குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி. 16 வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. அதன் பிறகு மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள்.

ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீதேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. நானும் ஸ்ரீதேவியும் கவிக்குயில், மச்சானை பார்த்திங்களா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம்.

இந்தியில் உச்சம் தொட்ட நடிகை. சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்க்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

**சினிமா உலகிற்கு பெரும் இழப்பு-இளையராஜா**

ஸ்ரீதேவியின் அதிக படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். பாலசந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல இயக்குநர்கள் ஸ்ரீதேவியிடம் இருந்த திறமையை வெளியே கொண்டு வந்தார்கள். ஸ்ரீதேவியிடம் திறமை இருந்தது, அதனால்தான் அது சத்தியம் ஆனது. குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலேயே ஸ்ரீதேவியை அறிவேன். லவகுசா படத்திற்கு இசையமைக்கும் போது ஸ்ரீதேவியை அருகில் பார்த்தேன். குழந்தை நட்சத்திரத்திலேயே மிகவும் பிரபலமான நபராக இருந்தார். தனது நடிப்புத் திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர். ஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகிற்கு பெரும் இழப்பு

இவர்கள் போன்று திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் ஸ்ரீதேவியோடு துபாய் நிகழ்ச்சிக்கு வராமல் போன முதல் மகள் ஜான்வி கபூர், துபாயில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த ஸ்ரீதேவியின் இறந்த செய்தி அறிந்து படப்பிடிப்புத் தளத்தில் கதறி அழுதிருக்கிறார். ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வர அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் சென்றிருக்கிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *