சென்னை, நெல்லையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்கள்!

public

சென்னை மற்றும் நெல்லையில் இன்று (ஜூன் 10) தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், 2 மற்றும் 4ஆவது வெள்ளிக்கிழமைகள் வேலைவாய்ப்பு வெள்ளியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 10ஆம் தேதி (இன்று) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 30 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, ப்ளஸ்- 2, ஐ.டி.ஐ, டிப்ளோமா, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஜூன் 10) காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பணி நியமனம் பெறுபவர்களுடைய வேலை வாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுபவர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் முகாமில் கலந்து கொள்ள வருகின்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி தகவலை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *