டிஜிட்டல் திண்ணை: மாதவனை இயக்குவது யார்? : தீபா குடும்ப விரிசல் பின்னணி!

public

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.

“ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் சமாதிக்குப் போனார் சசிகலா. அதற்கடுத்த நாள் அமைச்சர்கள் சிலருடன் ஜெ. சமாதிக்குப் போனார், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதும் மீண்டும் ஜெ. சமாதிக்குப் போனார் சசிகலா. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின் பன்னீர் மனம் வெதும்பி ஜெ. சமாதிக்குப் போனார். எம்.எல்.ஏ.,க்களை சமாதனம் செய்யப் புறப்பட்ட சசிகலா, ஜெ. சமாதிக்குப் போய்விட்டுத்தான் கூவத்தூர் போனார். மறுபடியும் ஒருநாள் இரவு பன்னீர் ஜெ. சமாதிக்குப் போனார். பின்னாடியே தீபாவும் போனார். பெங்களூரு ஜெயிலுக்குப் போவதற்குமுன்பும் ஜெ.சமாதிக்குப் போனார் சசிகலா. அவரை ஜெயிலுக்கு அனுப்பிவைத்துவிட்டு துணை பொதுச்செயலாளர் பொறுப்பையேற்ற டி.டி.வி.தினகரனும் சமாதிக்குப் போனார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும் ஜெ.சமாதிக்குப் போனார். பட்ஜெட் உரையுடன் ஜெ. சமாதிக்குப் போனார் நிதியமைச்சர் ஜெயக்குமார். தீபாவின் கணவர் மாதவனும் இப்போது ஜெ. சமாதிக்கு வந்துவிட்டார். ‘மக்கள் விருப்பத்துக்கேற்ப புதிய கட்சி தொடங்குவேன். உண்மையான அதிமுக தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’ எனவும் ஜெ. சமாதியில் நின்று அறிவித்திருக்கிறார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தொடங்கியதில் இருந்தே தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையில் மன வருத்தம் தொடங்கிவிட்டது. ’பேரவை எல்லாம் வேண்டாம்… கட்சியாகவே ஆரம்பிக்கலாம்’ என்று மாதவன் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை தீபா கேட்கவில்லை. பேரவை தொடங்கியபிறகு நிர்வாகிகளாக யாரை நியமிக்கலாம் என்று மாதவன் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். அந்த லிஸ்ட்டில் இருந்த யாரையும் பேரவைக்கு நிர்வாகிகளாக போடவில்லை. தீபா ஒரு தனி லிஸ்ட் தயார் செய்து நிர்வாகிகள் பெயரை அறிவித்துவிட்டாராம். அதுவும் நிர்வாகிகள் பெயரை அறிவித்த அன்று மாதவனும் வீட்டில்தான் இருந்திருக்கிறார். பெயர்களை அறிவிக்கும்வரையிலும் அந்த லிஸ்ட்டை மாதவனிடம் காட்டவில்லையாம். இதில் மாதவன் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம். ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவித்ததும், அப்போதும் சில ஆலோசனைகளை மாதவன் சொன்னாராம். அதையும் தீபா கேட்கவில்லை. கடந்த 14ஆம் தேதி இரவு தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையில் கடுமையான சண்டை வந்திருக்கிறது. வீட்டின் கதவுகள் சாத்தியிருந்தபோதும், அவர்கள் இருவரும் போட்ட சத்தம் வெளியில் கேட்டிருக்கிறது. தீபா வீட்டுக்கு வெளியே காத்திருந்தவர்கள், ‘அம்மாவுக்கும் ஐயாவுக்கும் ஏதோ சண்டைபோல இருக்கு…’ என்று பேசியபடியே அங்கிருந்து கிளம்பிவிட்டார்களாம்.

‘அம்மாவோட அண்ணன் பொண்ணு நான்தான். என்னைப் பார்க்கத்தான் கூட்டம் வருது. நான் சொல்றதைத்தான் கட்சிக்காரங்க கேட்பாங்க. வர்ற கூட்டமெல்லாம் உங்களைப் பார்க்க வருதுன்னு நினைச்சுக்காதீங்க. பேரவையை நான் பார்த்துக்குறேன். அதுக்குள்ள நீங்க தலையிடாதீங்க…’ என்று தீபா வெளிப்படையாகவே மாதவனிடம் சொல்லிவிட்டாராம். அதுதான் மாதவனை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘நான் சொல்ற எதையும் நீ கேட்கவே மாட்டியா?’ என்று அவரும் டென்ஷனில் கத்தியிருக்கிறார். 15ஆம் தேதி மாலை வீட்டிலிருந்து கிளம்பிப் போனவர் திரும்பவும் தீபா வீட்டுக்கு வரவே இல்லையாம். வீட்டுக்கு நிர்வாகிகள் வந்தபோது மாதவன் நிறையப் பேருடன் நெருங்கிப் பழகி பேசியிருக்கிறார். அதில் முக்கியமானவர் கோபிநாத் என்பவர். அவர்மூலமாக மேலும் சில நிர்வாகிகளுடன் பேசி, கடந்த 17ஆம் தேதி காலை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு வீட்டில் ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார் மாதவன். அதில் பேசிய சில நிர்வாகிகள், ‘நீங்க கட்சி ஆரம்பிங்க… கூட்டம் வரும்’ என்று உசுப்பேற்றியிருக்கிறார்கள். இந்தத் தகவல் தெரிந்து மாதவனை தொடர்பு கொண்டிருக்கிறார் தீபா. ஆனால் அவர் தீபாவின் போனை தவிர்த்துவிட்டாராம். கோபிநாத் எண்ணுக்குத் தொடர்புகொண்டு, ‘போனை அவர்கிட்ட கொடுங்க…’ என்று தீபா சொல்லியிருக்கிறார். வேறுவழியில்லாமல் கோபிநாத் போனை மாதவனிடம் கொடுத்திருக்கிறார். போனை வாங்கியதும் மாதவன், ‘நான் கொஞ்சம் வேலையா இருக்கேன். முடிச்சுட்டு வீட்டுக்கு வர்றேன்…’ என்று சொன்னாராம். அதன்பிறகு, போன் பேசியபடியே அங்கிருந்து நகர்ந்திருக்கிறார் மாதவன். அன்று இரவுதான் அதாவது, நேற்று இரவு திடீரென பத்துப் பேருடன் கிளம்பி ஜெயலலிதா சமாதிக்குப் போய் வணங்கிவிட்டு புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா சமாதியிலிருந்து மாதவன் பேட்டி கொடுத்ததை வீட்டில் இருந்தபடி டி.வி.யில் பார்த்திருக்கிறார் தீபா. அந்த சமயத்தில் கட்சி நிர்வாகிகள் பலரும் தீபா வீட்டில் இருந்தார்கள். எல்லோரையும் உடனே அங்கிருந்து கிளம்பவும் சொல்லிவிட்டாராம். இன்றும்கூட அந்த அப்செட்டில் இருந்து தீபா இன்னும் மீளவில்லை. காலையில் இருந்தே ஏராளமான நிர்வாகிகள் வீட்டுக்கு வந்தபோதும், தீபா யாரையும் சந்திக்கவில்லை. கணவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று டிஸ்கஷனில் இருக்கிறாராம்! இதற்கிடையில், நாளை பிரமாண்டமாக கூட்டத்தைக் கூட்டி மீண்டும் ஒரு பிரஸ்மீட் வைக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறார் மாதவன். அதற்கான ஏற்பாடுகளை மாதவன் கட்சி மூத்த நிர்வாகி கோபிநாத் செய்து வருகிறார்’’ என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப்.

அத்துடன், “மாதவனை இயக்குவது மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் என்றும் ஒரு பேச்சு உலவுகிறதே?” என்ற கேள்வியை கமெண்ட்டில் போட்டது.

அதற்கு பதிலை ரிப்ளைசில் போட்டது ஃபேஸ்புக். “தீபா பேரவையை தொடங்குவதற்குமுன்பே மன்னார்குடி பிரமுகர் ஒருவர் மூலமாக மாதவனுக்கு தூது விடப்பட்டிருக்கிறது. ‘நீங்களும் எங்களோடு வந்துடுங்க. உங்களுக்குத் தேவையானதை செஞ்சு கொடுக்குறோம்’ என்று பேசியிருக்கிறார்கள். ஆனால் தீபா அதற்குச் சம்மதிக்கவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரை சந்திக்கவிடாமல் தடுத்தவர் சசிகலாதான். அந்தக் கோபம் இன்னும் தீபாவுக்கு இருக்கிறது. ‘அத்தையை மட்டும் நான் பார்த்திருந்தால், அவங்க இருக்கும்போதே என்னை வாரிசாக அறிவிச்சு இருப்பாங்க. அதைக் கெடுத்ததே சசிகலாதான். இனி, எதுக்கு நான் அவங்களோட சேரணும். எந்தக் காலத்துலயும் அது நடக்காது’ என்று தீபா சொல்லியிருக்கிறார். மாதவனை வைத்து பல மூவ்களை செய்து பார்த்திருக்கிறது மன்னார்குடி டீம். அது எதுவும் சக்சஸ் ஆகவில்லை. இப்போது மன்னார்குடி டீம்தான் மாதவனை இயக்குகிறது என்றும் சொல்கிறார்கள். மாதவனை புதிய கட்சி தொடங்கச் சொல்லித் தூண்டியதும் மன்னார்குடி டீம்தான் என்றும் சிலர் சொல்கிறார்கள். எது எப்படியோ, நல்லா இருந்த குடும்பம் இப்போ பிரிந்து நிற்கிறது!’ என்று முடிந்தது அந்த பதில்.

அதற்கும் லைக் போட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *