பிரதமர் நியூஸ் 18 ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் முஸ்லீம்களுக்கு எதிராக நான் பேசவில்லை என்று குறிப்பிட்டிருப்பது அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.
முஸ்லீம்களை அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் என்றும் ஊடுருவல்காரர்கள் என்றும் நீங்கள் மேடையில் பேசினீர்களே என்று அந்த பேட்டியில் கேட்கப்பட்டது. உடனே மோடியின் முகம் மாறுகிறது. ”இதை கேட்கும்போது எனக்கு ஷாக்காக இருக்கிறது. அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களைப் பற்றி பேசும்போது, அது முஸ்லீம்களை மட்டுமே குறிப்பதாக உங்களுக்கு யார் சொன்னது? ஏன் முஸ்லீம்கள் குறித்து இவ்வளவு ஓரவஞ்சனையாக இருக்கிறீர்கள்? நாட்டில் உள்ள ஏழைக் குடும்பங்களிலும் இதே நிலைதான் இருக்கிறது. அவர்களும் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். நான் முஸ்லீம் என்றும் சொல்லவில்லை, இந்து என்றும் சொல்லவில்லை” என்று தான் பேசியதற்கு ஒரு அர்த்தத்தினை எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் கூறியிருக்கிறார். மேலும் இந்து-முஸ்லீம் என்று பிரித்துப் பார்த்தால் நான் பொது வாழ்க்கையில் இருப்பதற்கே தகுதியானவன் இல்லை என்றும் பேசியுள்ளார்.
இவ்வளவு விவரமாக மோடி பேசியிருப்பதால், அவர் இந்த தேர்தல் பிரச்சாரங்களில் என்னென்ன பேசினார், முஸ்லீம்கள் குறித்து என்னவெல்லாம் பேசினார் என்பதைப் பார்ப்போம்.
என்ன பேசினார் மோடி?
ஏப்ரல் 21 ஆம் தேதி ராஜஸ்தானில் மோடி பிரச்சாரம் செய்தபோது, ”முன்பு காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, இந்த நாட்டின் சொத்துகள் மீது முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உள்ளதென்று அவர்கள் சொன்னார்கள். இதன் அர்த்தம் என்ன, உங்கள் சொத்துக்களையெல்லாம் எடுத்து அவர்கள் யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களிடம் கொடுப்பார்கள். ஊடுருவல்காரர்களிடம் கொடுப்பார்கள்”. இதுதான் மோடி பேசியதன் ஒரிஜினல் வெர்சன். உங்கள் சொத்துக்கள் என்று மோடி இந்துக்களைத் தான் சொல்கிறார் என்பதையும், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்கள் என்று முஸ்லீம்களைத் தான் குறிப்பிடுகிறார் என்பதையும், மோடி வார்த்தை விளையாட்டுகளை விளையாடுகிறார் என்பதையும் யார் வேண்டுமானாலும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
கீழ்காணும் இணைப்பில் அந்த வீடியோவை நீங்கள் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=7LWA-rP5TKw&t=1723s
அதன்பிறகு ராஜஸ்தானில் ஏப்ரல் 23 ஆம் தேதி இதே கருத்துகளை மீண்டும் பேசினார்.
முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு…
முதல்கட்டத் தேர்தல் வரை, பிரச்சாரங்களில் இப்படிப்பட்ட கருத்துகளை மோடி வெளிப்படையாக முன்வைக்கவில்லை. ஆனால் முதல் கட்டத் தேர்தல் முடிந்த இரண்டாம் நாளில் இருந்து அவரது பிரச்சாரங்களில் முஸ்லீம்கள் குறித்த விடயங்கள் அதிகமாக இடம்பெறத் தொடங்கியது. முதல் கட்டத் தேர்தலின் வாக்குப்பதிவு பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்ற தகவல் அவருக்கு கிடைத்திருப்பதால் தான், அடுத்தடுத்தகட்ட தேர்தல்களில் அவர் பிரச்சாரத்தினை முற்றிலுமாக மதவாதத்தினை மையப்படுத்தி திருப்பியுள்ளார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
400 சீட்டுகள் வெற்றி பெறுவோம் என்றும், மோடியின் கேரண்டி என்றும் பேசிக் கொண்டிருந்த மோடி, எல்லா கூட்டங்களிலும் முஸ்லீம்கள் குறித்தும், அவர்களின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும் பேச ஆரம்பித்தார்.
உயிரோடு இருக்கும் வரை முஸ்லீம் இடஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டேன்
ஏப்ரல் 24 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி, கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டவிரோதமாக மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்குவதாகப் பேசினார். ”ஒரே அறிவிப்பின் மூலம், எல்லா முஸ்லீம் சமூகத்தினரும் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்குள் சேர்க்கப்பட்டுவிட்டனர். ஓபிசி இட ஒதுக்கீட்டின் ஒரு பெரிய பகுதியைப் பறித்து மதத்தின் அடிப்படையில் கொடுத்துவிட்டது காங்கிரஸ் கட்சி” என்று பேசினார்.
ஏப்ரல் 30 ஆம் தேதி தெலுங்கானாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ”நான் உயிரோடு இருக்கும்வரை என்ன நடந்தாலும் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு பிரித்துக் கொடுக்க அனுமதிக்க மாட்டேன்” என்று பேசினார்.
முஸ்லீம்களுக்கு மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறதா?
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது அவர்களின் சமூக பொருளாதார நிலை பின்தங்கியிருப்பதால் தான் என்பதைத் திரித்து மதத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக மோடி பேசினார்.
இதன் மூலம் ஓபிசி இட ஒதுக்கீடு முஸ்லீம்களால் பறிக்கப்படுகிறது என்ற ஆபத்தான கருத்து மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது.
ஆனால் உண்மை என்னவென்றால், 1962 ஆம் ஆண்டு முஸ்லீம்களின் சமூக பொருளாதார நிலை குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட நாகனா கெளடா ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் முஸ்லீம்களின் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஓபிசி பிரிவில் இணைக்கப்பட்டனர். அதன்பிறகு 1994 ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேவே கவுடா ஆட்சியின்போது, எல்லா முஸ்லீம் பிரிவினரும் ஓபிசி பிரிவிற்குள் கொண்டுவரப்பட்டு, 4% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தற்போது பாஜக கூட்டணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சத்தீஸ்கர், மற்றும் உத்திரப் பிரதேசத்தில் மேற்கொண்ட பல பிரச்சாரக் கூட்டங்களிலும் மோடி ஓபிசி இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டு முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படுகிறது என்ற கருத்தை மீண்டும் மீண்டும் பேசினார். இதன்மூலம் ஓபிசி மக்களிடம் முஸ்லீம்கள் குறித்த ஒரு அச்ச உணர்வு விதைக்கப்பட்டது.
காங்கிரஸ் வந்தால் கிரிக்கெட் அணியில் சிறுபான்மையினர்
மே 7 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ”விளையாட்டில் கூட சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுப்பதே காங்கிரசின் நோக்கம். எனவே இனிமேல் கிரிக்கெட் அணியில் கூட யார் உள்ளே இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பதை மதத்தின் அடிப்படையில் அவர்களே முடிவு செய்வார்கள்” என்று பேசினார்.
ஆனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறதென்றால், ”சிறுபான்மையினருக்கு எந்த பாகுபாடும் இல்லாமல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, விளையாட்டு மற்றும் கலாச்சார செயல்பாடுகள் என அனைத்திலும் அவர்களுக்கான நியாயமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வோம்” என்று குறிப்பிட்டது.
சிறுபான்மையினருக்கு நியாயமான வாய்ப்புகள் கிடைக்க உறுதி செய்வோம் என்று குறிப்பிட்டிருந்ததைத் தான் மோடி கிரிக்கெட் அணியில் மத ரீதியில் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என சிறுபான்மையினர் குறித்து இந்துக்களுக்கு அச்சம் எழும் வகையில் மாற்றிப் பேசினார்.
இதனை கீழ்காணும் காணொளி இணைப்பில் நீங்கள் பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=fF6RtGwgMt8&t=2058s
கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோ
மிக முக்கியமாக கர்நாடக பாஜக ஒரு வீடியோ ஒன்றை அதன் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது. ஒரு கூடு ஒன்றில் SC, ST, OBC என்று எழுதப்பட்ட 3 முட்டைகள் இருக்கின்றன. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவும் முஸ்லீம் என்று எழுதப்பட்ட முட்டை ஒன்றை அக்கூட்டில் வைக்கிறார்கள்.
அதில் ஒரு பறவைக்கு நிதியை உணவாக அளிக்கிறார் ராகுல் காந்தி. அந்த பறவை முஸ்லீம் என்று எழுதப்பட்ட முட்டையிலிருந்து வெளிவருகிறது. அதன் தலையில் ஒரு குல்லா போடப்பட்டிருக்கிறது. அந்த முஸ்லீம் முட்டையிலிருந்து வந்த பறவை, மற்ற மூன்று முட்டைகளிலிருந்து வந்த பறவைக் குஞ்சுகளை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது.
SC, ST, OBC இடஒதுக்கீட்டை முஸ்லீம்களுக்கு கொடுத்து அதன்மூலம் இந்த மூன்று பிரிவு மக்களின் இடஒதுக்கீட்டையும் காங்கிரஸ் பறிக்கப் போகிறது என்ற மதவெறுப்பைத் தூண்டும் காணொளியை இவ்வாறாக கர்நாடக பாஜக வெளியிட்டிருந்தது. பல புகார்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் கர்நாடகவில் அனைத்து தொகுதிகளுக்கான தேர்தலும் முடியும் நாளன்று (மே 7, 2024) இந்த வீடியோவை நீக்குமாறு எக்ஸ் தளத்திற்கு அறிவுறுத்தியது.
ராமர் கோயிலுக்கு பூட்டா?
மே 7 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, பாஜகவிற்கு பாராளுமன்றத்தில் 400க்கும் அதிகமான இடங்கள் தேவை. அப்போதுதான் பாபர் மசூதி விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சி ராமர் கோயிலுக்கு பூட்டு போடாமல் தடுக்க முடியும் என்று பேசினார். மேலும் காங்கிரஸ் கட்சி ஓட்டு ஜிகாத் அறிவித்திருப்பதாகவும், முஸ்லீம்கள் பாஜகவிற்கு எதிராக ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்பதாகவும் கூறிவிட்டு, இந்த ஓட்டு ஜிகாத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று கூட்டத்தைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
நம்ப முடியாத மோடியின் ஷாக்
இப்படி நாம் மேலே குறிப்பிட்ட அனைத்தும் மோடி இந்த தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய விடயங்கள் தான். இந்த பேச்சுகளின் முக்கிய சாரம்சமாகவே முஸ்லீம்களை இந்துக்களிடமிருந்தும் இந்த மண்ணிலிருந்தும் அந்நியப்படுத்திக் காண்பிக்கும் தன்மை தான் இருக்கிறது. இந்து-முஸ்லீம் என்று பிரித்துப் பேசுவதே மோடி பிரச்சாரத்தின் பிரதான அங்கமாக கடந்த சில வாரங்களாக இருந்து வருகிறது.
இத்தனையையும் பேசிவிட்டு நான் முஸ்லீம்களுக்கு எதிராகப் பேசினேனா என்று மோடி ஷாக் ஆவது நம்பத்தகுந்ததாக இல்லை என்பதே உண்மை. மோடி இந்த தேர்தலில் பேசிய அனைத்தும் ஆவணமாக இருக்கிறது. இவைதான் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். தான் ஒரு பிரதமர் என்பதை உணர்ந்து, தேர்தலுக்காக மதவாதத்தினை ஒரு கருவியாக பயன்படுத்துவதையும், சிறுபான்மையினரை அந்நியப்படுத்துவதையும் அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது விருப்பம் கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பு. தேர்தல் ஆணையம் இத்தனை நாட்களாக இப்படிப்பட்ட வாதங்களை தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி அனுமதித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அனைவரிடமும் இருக்கும் பதில் கிடைக்காத கேள்வியாக இருக்கிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Fact Check: முஸ்லீம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்கிறார்களா? மோடி சொல்வது உண்மையா?
யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?
உபா வழக்கு: நியூஸ் கிளிக் நிறுவனர் விடுதலை… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருச்சி அழைத்துச் செல்லப்படும் சவுக்கு சங்கர்
பயமா இருக்கா குமாரு? பதட்டமா இருக்கா குமாரு? ஐயோ, எல்லாம் பறிபோகப் போகுதேனு ஆதங்கமா இருக்கா குமாரு?