CSK vs RCB: 2024 ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே தற்போதுவரை பிளே-ஆஃப் சுற்றில் தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன.
ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்நிலையில், பிளே-ஆஃப் சுற்றில் மீதமுள்ள 2 இடங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் கடுமையாக போட்டி போட்டுக்கொள்கின்றன.
இவர்களில் டெல்லி மற்றும் லக்னோ ஆகிய அணிகள் தங்கள் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், அவர்களின் நெட் ரன்-ரேட் நெகடிவ்வாக உள்ளதால், இந்த அணிகள் முதல் 4 இடங்களுக்குள் நுழைவது மிகக் கடினமே.
தற்போது 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத், தனக்கு மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே, அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
பிளே-ஆஃப் சுற்றுக்கான ‘வாழ்வா? சாவா?’ ஆட்டத்தில், வரும் மே 18 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொள்ள உள்ளன.
பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய, 2 அணிகளுமே இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய நாளில் அங்கு மழை பெய்ய 72% வரை வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை மையங்கள் கணித்துள்ளன.
ஒருவேளை, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி மழை பெய்து, கொல்கத்தா vs குஜராத் ஆட்டம் போல அன்றைய ஆட்டமும் ரத்தானால், சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய 2 அணிகளுக்கு தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்படும்.
அப்படி நடக்கும் பட்சத்தில், 13 புள்ளிகளுடன் பெங்களூரு அணி பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிடும். மறுபுறத்தில், 15 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சீஸ் பால்ஸ்!
ஹெல்த் டிப்ஸ்: வெயிலில் போய்விட்டு வீடு திரும்பியதும் இதெல்லாம் செய்யாதீர்கள்!
என்னென்ன சொல்றாரு பாருங்க: அப்டேட் குமாரு
ஆன்மீகத்திற்கு எதிரானவனா நான்? – மேடையில் கொந்தளித்த மிஷ்கின்