விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

விளையாட்டு

2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி ஐயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

அயர்லாந்தில் உள்ள டப்லின் நகரில் கடந்த மே 10 அன்று தொடங்கிய இந்த டி20 தொடரின் முதல் போட்டியில், அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில், 2வது போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

இந்நிலையில், இந்த தொடரை தீர்மானிக்கும் 3வது போட்டி மே 14 அன்று நடைபெற்றது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் லார்கன் டக்கர் 41 பந்துகளில் 73 ரன்கள் விளாசியிருந்தார்.

பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த தொடரையும் 2-1 என கைப்பற்றியது. இப்போட்டியில், பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 5 சிக்ஸ், 6 ஃபோர்களுடன் 42 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்தார்.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமுறை 50-க்கும் அதிகமான ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார்.

பாபர் அசாம் இதுவரை 3 சதம், 36 அரைசதம் என 39 முறை 50-க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளார். விராட் கோலி 1 சதம், 37 அரைசதம் என 38 முறை 50-க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளார். இந்த பட்டியலில், ரோகித் சர்மா 3வது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 5 சதம், 29 அரைசதம் என 34 முறை 50-க்கும் அதிகமான ரன்களை சேர்த்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் தற்போது வரை 3,955 ரன்கள் குவித்துள்ள பாபர் அசாம், அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில், 4,037 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், 3,974 ரன்களுடன் ரோகித் சர்மா 2வது இடத்திலும் உள்ளனர்.

இதுமட்டுமின்றி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஃபோர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை 423 ஃபோர்களை அடித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் பாகிஸ்தான் விளையாட உள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர், மே 22 அன்று துவங்கி மே 30 அன்று நிறைவடைய உள்ளது.

2024 டி20 உலகக்கோப்பை ஜூன் 2 அன்று துவங்கவுள்ளது. இந்த தொடரில், ஜூன் 6 அன்று, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி யுனைடெட் ஸ்டேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சாதித்த திருநங்கை மாணவி: கெளரவித்த கனிமொழி!

கேமரா உலகின் புதிய அரசன் – யார் இவன்?

+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *