சிறப்புக் கட்டுரை: நசுக்கப்படும் ஜவுளித் துறையினர்!

public

நூர் முகமது

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இந்தியாவின் ஜவுளித் துறையில் பணியிழப்புகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. வரிக் குறைபாடு விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாலும், ரீஃபண்ட் தொகையை வழங்குவதில் அரசு தாமதித்து வருவதால் மூலதனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாலும், ஏற்றுமதி இன்னும் நெருக்கடியிலேயே உள்ளது. இதனால் அடுத்த சில மாதங்களுக்கு இந்திய ஜவுளித் துறையில் பணியிழப்புகள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

2017-18ஆம் ஆண்டில் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு 3.83 விழுக்காடு (டாலர் மதிப்பில்) சரிவடைந்துள்ளது. பொருட்களின் விலை உயர்ந்ததால் ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. இதனால் ஜவுளி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது.

சீனாவின் தொழிற்சாலைகளில் ஊதியம் அதிகரித்துள்ளதால் அங்கு தயாரிப்புகளின் விலை குறைந்துள்ளது. சீனாவின் போட்டித் தன்மை கண்ட சரிவை இந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்திய ஏற்றுமதியாளர்களால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்தியாவுக்குப் பதிலாக வங்கதேசம், வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகள் வாய்ப்பைப் பயன்படுத்திப் பலன்களை அனுபவித்துக் கொண்டன.

2017ஆம் ஆண்டு ஜூலை முதல் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய 4,000 கோடி ரூபாய் ரீஃபண்ட் தொகையில் வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் மூலதனத்துக்காக உள்ளூர் வங்கிகளில் குறுகிய காலக் கடன் பெற்று அதற்கான வட்டியையும் வழங்கி வருகின்றனர். இதனால் ஏற்றுமதியாளர்களின் போட்டித் தன்மையில் தாக்கம் ஏற்படுகிறது.

தனது நிறுவனத்துக்கு இன்னும் 2.5 கோடி ரூபாய் ரீஃபண்ட் தொகை வழங்கப்பட வேண்டும் என்று குருகிராமைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் ஆண்டுக்கு 42 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்டி வந்தவர். ஜிஎஸ்டி அமலான பிறகு ஜவுளிப் பொருட்களுக்கான வரி குறைபாடு விகிதம் 11.2 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்றால் ஜவுளித் துறையில் பணியிழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்று அந்த ஏற்றுமதியாளர் கூறினார்.

வரி குறைபாடு விகிதம் குறைக்கப்பட்டதற்காக நாடு முழுவதிலும் எதிர்ப்புகள் எழுந்ததால், கடந்த டிசம்பர் மாதத்தில் வர்த்தக அமைச்சகம் இந்திய சரக்கு ஏற்றுமதித் திட்டத்தின் கீழ் சலுகைகளை 2 விழுக்காடு உயர்த்தியது. எனினும் தொழில் செய்வதற்கான செலவுகள் ஜிஎஸ்டிக்கு முன்பிருந்ததை விட ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஜவுளி ஏற்றுமதியாளர்களின் செலவுகள் 5 முதல் 6 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ஹெச்.கே.எல்.மகு தெரிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற முக்கியச் சந்தைகளுக்கு வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகள் வரியில்லாமல் சரக்குகளை அனுப்பி வருகின்றன. ஆனால், இந்தியாவில் வரி விதிக்கப்படுவதால் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா போன்ற முக்கியச் சந்தைகளில் நம்முடைய போட்டித் தன்மை பலவீனமடைந்துள்ளது என்று மகு தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஊதியமும், உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளதால் அந்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி கடந்த சில வருடங்களாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. ஆனால், சீனா தந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அதன் பலன்களை இந்தியாவால் அனுபவிக்க முடியவில்லை என்று மகு கூறியுள்ளார். இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி சரிவைச் சந்தித்து வருவதன் விளைவாக திருப்பூர் ஜவுளித் தொழிலின் செயல்பாடுகள் கடந்த எட்டு மாதங்களில் 15 விழுக்காடு சரிவடைந்துள்ளது என்று மகு கூறுகிறார்.

ஜவுளித் துறையிடம் ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்கும் திறன் உள்ளது. ஆனால், நிதியமைச்சகத்தின் ஆதரவு இல்லாத காரணத்தால் நரேந்திர மோடியின் வேலை உருவாக்கத் திட்டம் தோல்வியடைந்து வருவதாக மகு தெரிவித்துள்ளார். எனினும், ஜவுளித் துறை அமைச்சகத்திடமிருந்து ஜவுளித் தொழிலுக்கு முழு ஆதரவு கிடைப்பதாக அவர் கூறினார்.

ஜூன் 30ஆம் தேதியுடன் காலாவதியாகும் இந்திய சரக்கு ஏற்றுமதித் திட்டம் குறித்து உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. இத்திட்டம் நீட்டிக்கப்படவில்லை என்றால் ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதலான சிக்கல்கள் ஏற்படும். இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து நிலைத்தன்மை இல்லாததால் புதிய ஆர்டர்களை எடுக்க ஏற்றுமதியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இத்திட்டம் காலாவதியானால் பணத்தை இழக்கக்கூடும் என்று ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர்.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்திய சரக்கு ஏற்றுமதித் திட்டத்தை நீட்டிக்க அரசிடம் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது. எனினும் இதுகுறித்து அரசு இன்னும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை.

சர்வதேச ஜவுளிப் பொருட்கள் இறக்குமதியின் மதிப்பு 2016ஆம் ஆண்டில் 475 பில்லியன் டாலராகவும், 2017ஆம் ஆண்டில் 432 பில்லியன் டாலராகவும் சரிவடைந்துள்ளது. இந்தச் சரிவால் உள்நாட்டுத் தொழில் வருத்தத்தில் உள்ளது. சர்வதேச ஆடை வர்த்தகம் சிக்கல்களைச் சந்தித்து வரும் இவ்வேளையில், உள்நாட்டுத் தொழிலை மேம்படுத்த அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று ஜவுளித் துறையினர் கருதுகின்றனர்.

புதிய வரி முறை மற்றும் ஏற்றுமதிச் சலுகைகள் முறைக்கு மாற்றம் அடைந்துள்ளதால் ஜவுளித் துறையில் ரொக்கப் பண இருப்புக்கான சவால்கள் எழுந்துள்ளன. மேலும், சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் அழுத்தம், அச்சுறுத்தும் வர்த்தக ஒப்பந்தங்கள், வெளிநாட்டு பண நகர்வு போன்றவை கூடுதல் சவால்களாக உள்ளன.

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் நிச்சயமற்ற தன்மை உருவாகிவருவதும் ஒரு சிக்கலாக எழுந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்கு 2014ஆம் நிதியாண்டில் 12 விழுக்காட்டிலிருந்து 2017ஆம் ஆண்டில் 23 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பத்து மாதங்களில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பப்பட்ட இந்திய ஆடைகளின் ஏற்றுமதி மதிப்பு அதற்கு முந்தைய ஆண்டை விட 56 விழுக்காடு வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், அதற்குப் பின்னர் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பப்பட்ட இந்திய ஆடைகளின் ஏற்றுமதி மதிப்பு வேகமாகச் சரிவடைந்து 45 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எனவே ஜவுளித் துறையைக் காப்பாற்ற ஏற்றுமதி குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும்.

**நன்றி:** [தி வயர்](https://thewire.in/economy/squeezed-domestically-and-globally-indias-garment-exports-are-being-stretched-thin)

**தமிழில்:** அ.விக்னேஷ்

**நேற்றைய கட்டுரை:** [தூத்துக்குடி – போராட்டமும் படுகொலையும்!](https://minnambalam.com/k/2018/05/31/32)

**மின்னஞ்சல் முகவரி**: [feedback@minnambalam.com](mailto:feedback@minnambalam.com)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *