சிறப்புக் கட்டுரை: கருணாநிதியின் நெஞ்சில் தைத்த முள்!

public

h4>விவேக் கணநாதன்

கருணாநிதி தன் அரசியல் வாழ்க்கையில் தொடர் குற்றச்சாட்டாக எழுப்பிய விஷயம், ஊடகங்கள் திமுகவுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பதாகும். நெருக்கடி நிலை காலத்தின்போது மத்திய அரசின் அகில இந்திய வானொலி திமுகவுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், ஆதாரமற்ற வதந்திகளைச் செய்திகளாகப் பரப்புவதாகவும் கருணாநிதி குற்றம்சாட்டினார். எம்.ஜி.ஆர். ஆட்சியிலிருந்த காலத்திலும், 13 ஆண்டுக்குப் பிறகு 1989இல் ஆட்சிக்கு வந்தபோதும் திமுக குறித்த பொய் பரப்புரையைப் பத்திரிகைகள் மேற்கொள்வதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார் கருணாநிதி. அன்றைக்குக் கருணாநிதியின் கையிலிருந்தது முரசொலியும் அவரது பேச்சும்தான்.

பொது ஊடகத்தின் கருத்துருவாக்கம், சித்தாந்தப் பிரச்சாரங்களின் மீது செலுத்தும் ஆதிக்கத்தின் விளைவுகள் குறித்து கருணாநிதிக்கு நன்கு தெரிந்திருந்தது. அதனால்தான், தன்னுடைய ஆட்சித் திறன், நிர்வாக நடவடிக்கைகள், கட்சி நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு பாராட்டுச் செய்தி பொது ஊடகங்களில் வெளியானாலும், அதைத் தன் அறிக்கைகளிலும், முரசொலியிலும் குறிப்பிட்டு, அதன் வழியே தன் கருத்தை வலியுறுத்திக்கொள்ளும் வழக்கம் கருணாநிதியிடம் இருந்தது.

மாநில சுயாட்சி முழக்கங்களை முன்வைக்கிறபோது ஓரிடத்தில், “ஒரு மாநில அரசுக்கு ஊடகங்களைத் தொடங்கி நடத்தும் உரிமையை அரசியலமைப்பு சாசனம் வழங்கவில்லை. இதனால், அவசர கதியில் நாட்டு மக்களுக்கு ஓர் உரையை ஆற்ற வேண்டும் என்றாலும், ஒரு மாநில முதலமைச்சர், அகில இந்திய வானொலியின் மண்டல நிலையத்தில் மேலாளராகப் பணியில் இருக்கும் ஒருவரிடம் அனுமதி பெறக் காத்திருக்க வேண்டியுள்ளது” என்கிறார் கருணாநிதி.

**மகத்தான பிரச்சாரகர்**

கருணாநிதி வளர்ந்த காலம் என்பது பிரச்சார யுகம். திராவிட இயக்கத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும்கூட சுயாதீன – பிரச்சார ஊடகங்கள் ஆற்றிய பங்கு என்பது தனித்த ஆய்வுகள் செய்யத்தக்க அளவுக்குப் பிரமிக்கத்தக்கது. அந்த அளவுக்குப் பல பத்திரிகைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. திராவிட இயக்க ஆய்வாளரான திருநாவுக்கரசு தன் வாழ்க்கையில் மட்டுமே 400க்கும் மேற்பட்ட பத்திரிகைகளைப் பார்த்திருப்பதாகத் தெரிவிக்கிறார். பத்திரிகைகளுக்குத் தேவைப்படும் மூலதனம், வாசகப் பரப்பு போன்றவை பற்றிய புரிதல்கள் இல்லாமலேயே பல பத்திரிகைகள் அன்று தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு அடிப்படைக் காரணம் அன்றைக்குத் தேவைப்பட்ட தொடர் பிரச்சாரம், சுயமாகத் தங்கள் கருத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற சித்தாந்தவாதிகளின் தீவிரம். தகவல் தொடர்பு வசதிகள் ஏதும் இல்லாத அக்காலத்தில் தங்களுக்குக் கிடைத்த அத்தனை வழிகளிலும் பரப்புரை செய்வதையே இயக்க அரசியலியர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒரு பிரச்சாரகராகத்தான் தன் அரசியல் வாழ்க்கையையே கருணாநிதி தொடங்கினார். 1949இல் திமுக தொடங்கப்படும்போது, திமுகவின் பிரச்சாரக் குழு உறுப்பினராகத்தான் கருணாநிதி நியமிக்கப்பட்டார். பிரச்சாரத்தின் வலிமை, தேவை இரண்டையும் நன்கு உணர்ந்தவர் கருணாநிதி. அதுதான் அவரை எல்லாக் காலத்திற்குமான மகத்தான பிரச்சாரகராக வளர்த்தது.

எதிர்மறை விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சித்தாந்த நோக்கிலேயே எதிர்கொண்டு, அதை ஒரு சமூகப் பிரச்சினையாக்கிப் பேசும் கருணாநிதியின் உத்திதான், அவரைத் தவிர்க்கவே முடியாத நிலையான அரசியல் சக்தியாக்கியது. வெற்றி தோல்வி இரண்டையும் தனது சித்தாந்தத்திற்கானதாகவே கருணாநிதி பேசினார்; பிரச்சாரம் செய்தார்; மக்களிடம், தொண்டர்களிடமும் அதைக் கொண்டு சேர்த்தார். அதுதான் அவரையும், அவர் தாங்கிய சித்தாந்தத்தையும் தாங்கிப்பிடித்தது.

**இணைய ஊடகத்தில் திமுகவின் பின்னடைவு**

பொது ஊடகங்களின் போக்கின் மீது இன்றைக்கும் திமுக விமர்சனங்களை முன்வைக்கிறது. அதேநேரம், சுயாதீனமாகப் பயன்படுத்தவல்ல இணையம், சமூக வலைதளம் போன்றவற்றைப் பயன்படுத்துவதிலும் பிரச்சார உத்திகளை வகுப்பதிலும் திமுக தோற்றுக்கொண்டிருக்கிறது.

தொண்ணூறுகளில் தொடங்கிய தாராளமயமாக்கம், அதன் விளைவுகளால் அரும்பிய புதிய தலைமுறையின் எழுச்சி தொடங்கியபோது கருணாநிதியின் சித்தாந்த அரசியல் பொதுவெளியில் விலக்கம் அடையத் துவங்கிவிட்டது. மாறியிருந்த கட்சி அரசியல், சமூக – பொருளாதாரக் காரணிகளுக்கும் அரசின் திட்டங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றிய புரிதல் முறிவு, சமூக இயக்கத்துக்கும் அரசியல் இயக்கத்துக்கும் இடையில் விழுந்த வெட்டு எனப் பலவற்றை இதற்குக் காரணமாகச் சொல்லலாம். திராவிட இயக்கம் மட்டுமில்லாமல் மொத்தமாகச் சீர்திருத்த மரபு இயக்கங்கள் பலவும் இந்தக் காலத்தில் தேய்மானம் அடைந்தன.

புத்தாயிரத்தின் தொடக்கக் காலத்தில் எழுச்சி பெற்றுவந்த சமூக உணர்வுகளையும் ஒரு புதிய தலைமுறையையும் கையாள்வதின் தோல்வி என இதை வரையறுக்கலாம். இந்த இடத்தில் பொதுச் சமூக ஊடகங்களாக உருவாகிய தனியார் ஊடகங்கள், அவை விரும்பிய அரசியல், செய்திப் புலத்தில் நடந்த பிரச்சார ஊழல் போன்றவற்றைக் கடந்து சீர்திருத்த மரபில் இயங்கும் அமைப்புகளுக்குள் நடந்த தோல்விகளை அலசுவது இங்கு முக்கியமானது.

எதையும் மிக நேரடியாகவும், மிக எளிமையாகவும் அறிந்துகொள்ள விரும்பிய மெய்யறு யுகத்தின் தலைமுறையின் (Post- Truth generation) உருவாக்கம் நடந்தபோது, சீர்திருத்த மரபு இயக்கங்கள் பலவும் இந்தியாவில் ஆட்சியில் இருந்தன. ஆனால், தங்களது கொள்கைகளையும் பணிகளையும் அக்கட்சிகள் எதுவும் முறையாகக் கொண்டு சேர்க்கவில்லை.

தனிப்பட்ட கட்சியாக திமுகவின் கருத்தியல் தோல்வியும் தேர்தல் தோல்வியும் இந்தக் காலத்தில்தான் நடக்கின்றன. இரண்டுக்கும் முக்கியக் காரணம், பிரச்சாரக் களத்தில் திமுகவும் திராவிட இயக்கமும் அடைந்த மோசமான தோல்வி.

மிகக் குறிப்பாக, இந்தியாவின் பிரதான வளர்ச்சிக் காலமான, 2006 – 2011 வரையில் ஆட்சியில் இருந்த திமுக தனது திட்டங்களை, தங்களுடைய சித்தாந்த வடிவத்தோடு பிரச்சாரக் களத்தில் முன்வைக்கத் தவறிவிட்டது. வளரும் முதலாளித்துவத்துக்கும் சமூக நலத்திட்ட அரசாங்கத்துக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைத்த பல திட்டங்களை 2006 – 2011 காலகட்டத்தில் திமுக செய்திருந்தது. ஆனால், இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் திட்டம் போன்றவை ‘ஜனமயக்குத் திட்டங்கள்’ (Popular schemes) என்கிற விமர்சனம் முன்வைக்கப்பட்டபோது, இதுபோன்ற திட்டங்கள் ஒரு நலத்திட்ட அரசு முதலீடு செய்யும் மூலதனம் என்கிற சித்தாந்த ரீதியிலான விளக்கங்கள் திமுக சார்பில் கொடுக்கப்படவில்லை. மாறாக, அவை மக்கள் நலத்திட்டங்கள் என்கிற அளவிலேயே மீண்டும் மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டன.

ஒரு சமூகமாக இல்லாமல், தனிமனிதர்களைத் திருப்திப்படுத்தும் திட்டங்கள் இரண்டைச் செய்கின்றன. ஒருபுறம் அரசு ஒவ்வொரு தனிமனிதனையும் நேரடியாகச் சென்றடைவதன் மூலம் அரசு என்கிற அமைப்பின் இயக்கம் விரிவடைகிறது. இன்னொரு புறம் சமூக – பொருளாதாரப் பலன்களைத் தாண்டிய கூட்டுச் சமூக உணர்வுகளை அது தேய்க்கத் தொடங்குகிறது. அரசின் திட்டங்களால் கூட்டுச் சமூக உணர்வுபெறாமல், தனிமனித உணர்வு பெறும் மக்கள், அரசியலில் சித்தாந்த நீக்கம் அடைவது எளிதாகிறது. இதனால், கூட்டுணர்வு சார்ந்த சித்தாந்த அரசியல் பலவீனமடைந்து, விருப்ப உணர்வு சார்ந்த கவர்ச்சி அரசியல் எழுவது சுலபமாகிறது.

தனிமனிதர்களைக் குறிவைத்து அரசின் இயக்கம் விரிவடையும்போது, சமூக இயக்க உணர்வு தேய்ந்தால் அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் மிகும் அபாயம் இருக்கிறது. வளரும் ஜனநாயகத்தில் இதைத் காத்திரமான பரப்புரைகளும் முறையான விளக்கங்களும் தீர்க்க வேண்டும். திமுக இங்குதான் தோற்றது.

காரணம், திமுகவின் அமைப்புக்குள் நடந்த சித்தாந்த வீழ்ச்சி. திமுகவின் பிரதிநிதிகள் களத்தில் மக்களிடமிருந்து அந்நியப்பட்டது. இந்த இரண்டையும் ஓட்டுக்குப் பணம் போன்ற ஜனநாயகத்தின் பலவீனங்களால் திமுக சமாளித்ததே அன்றி, புதிய சூழலுக்கு ஏற்பத் தன்னை மறுகட்டமைத்துக் கொள்ளவும் மீளாய்வு செய்யவும் தவறிவிட்டது. பல லட்சம் பேரைச் சென்றடையும் தங்களது திட்டங்களின் வாயிலாகவே சித்தாந்தத்தையும் கொண்டு செல்லத் தவறிய திமுக, மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டிய பிரச்சாரக் களத்திலும் தோல்வியுற்றது. தாராளமயமாக்கம் உருவாக்கிய புதிய சூழல்களுக்கு ஏற்பத் திருத்தமைவு செய்துகொண்டிருக்க வேண்டிய கட்டத்தில், திமுக தாராளமயமாக்கத்தின் எதிர்விளைவுகளுக்குப் பலியானது. திமுகவின் பழைய சாதனைகள், சித்தாந்த வீரியம், போராட்டக் களங்கள் போன்றவற்றின் வீழ்ச்சி இந்தப் பலிபீடத்தில்தான் நடக்கிறது. தாராளமயமாக்கத்தின் நல்லீடுகளை அரசாங்கத்தின் உறுப்புகளில் சேர்த்துக்கொண்ட திமுக, கட்சி அமைப்புக்குள்ளும், மக்களை நேரடியாக அணுக வேண்டிய பிரச்சாரக் களத்திலும் அவற்றைச் செய்யவில்லை. இந்தத் தோல்விதான், இன்றைக்கு நடக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் திமுக தான் காரணம் என்கிற எதிர்ப் பிரச்சார உருவகத்தை எளிதாக வளர்த்திருக்கிறது.

இந்தச் சிதைவின் வலியைக் கருணாநிதி 2016 தேர்தல் காலத்தில் நன்கு உணர்ந்திருந்தார். புத்தாயிரத்தில் வளர்ச்சிபெற்று வந்த தலைமுறையைத் திராவிட இயக்கத்தின் பிரச்சாரம் நெருங்கவில்லை என்கிற சோகம் அவரிடம் இருந்தது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஆ.ராசாவும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். கருணாநிதியின் மிக நீண்ட அரசியல் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அவரது நெஞ்சில் தைத்த முள் அது!

**ஜெயலலிதாவின் மாறுபட்ட அணுகுமுறை**

தனிமனித உணர்வுகள் அரசின் திட்டங்களிலேயே வளர்க்கப்பட்ட இந்தக் காலத்தின் மறுபுறத்தில், அரசியலிலும் அதைக் கச்சிதமாகச் செய்த ஜெயலலிதா மிகப்பெரும் வெற்றிகளைக் குவித்தது கவனிக்கத்தக்கது. தனிமனித உணர்வு நிகழ்த்தும் உளவியல் விளைவுகளை ஜெயலலிதா கும்பல் மனப்பான்மையாக்கினார். ஜெயலலிதாவின் அரசியல் நிகரைத் தாண்டிய வெற்றிகளைத் தேர்தல் களத்தில் சாத்தியப்படுத்தியதற்குக் காரணம், தாராளமயமாக்கம் ஜனநாயகத்துக்குச் செய்யும் பலவீனங்களைத் தனது பிரச்சாரக் களத்திலும் ஆட்சியிலும் அவர் பயன்படுத்திக்கொண்டது. ஆதார உணர்ச்சியில்லாத கும்பலுக்குள் ஒன்றுபட்டு நிற்க உதவும் தனிமனித உதிரி உணர்வுகளை அவர் வளர்த்தார். உதிரி உணர்வுகளின் சேர்க்கைக்கான அரசியலிருப்பு முடிந்து ஜெயலலிதாவின் தோல்வி தொடங்குவதற்கு முன்பாகவே அவரது வாழ்வும் முடிந்துவிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சட்டென எழுச்சியுற்று நடந்த மெரினா போராட்டம், அதே உத்தியில் தொடர்ந்துகொண்டே இருக்கும் மக்கள் போராட்டங்களையும் ஜெயலலிதா அரசியலால் நிகழ்த்தப்பட்ட எதிர்விசையின் கூட்டுச் சேர்க்கை என்றே நாம் கொள்ளலாம்.

இன்று திமுக தன் மீள்கட்டமைப்புப் பணிகளைப் பரிசோதனை செய்துகொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு இந்தப் புரிதல் இருப்பது மிக அவசியம். ஜெயலலிதா தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக ஜனநாயகத்தின் பலவீனங்களை லாபகரமாகப் பயன்படுத்திக்கொள்ளக் காரணம் அவர் கவர்ச்சி அரசியலை ஆதாரமாகக் கொண்டதுதான். ஆனால், சித்தாந்த அரசியலை ஆதாரமாகக் கொண்ட திமுக இதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். திமுகவுக்கு ஜெயலலிதா வழி பயன்படாது. திமுக, தேர்தல் கட்சிக்கான மீள்கட்டமைப்பையும் சித்தாந்த இயக்கத்துக்கான மறுகட்டமைப்பையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியுள்ளது. உண்மையில் இது ஒரு பெரும் சுமை. ஆனால், வரலாற்றைச் சோதித்துக்கொண்டால் நீதிக்கட்சியிலிருந்து, திராவிடர் கழகமும் அதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகமும் கிளைத்த உத்தி திமுகவுக்கு இன்று பயன்படக்கூடும்.

**வழிகாட்டும் வரலாறு**

1930களின் இறுதியிலேயே நீதிக்கட்சிக்கும் பெரியாருக்குமான முரண்கள் தொடங்கிவிடுகின்றன. சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வைக் காட்டிலும், ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் உணர்வுகள்தான் பொதுமக்களிடம் அன்று மிகுந்திருந்தன. அரசியல் உணர்வுகளுக்கே அன்று நீதிக்கட்சித் தலைவர்கள் முன்னுரிமை கொடுத்தனர். ஆனால், பெரியார் சமூக உணர்வுகளுக்கே முன்னுரிமை கொடுத்தார். பணமும் செல்வாக்கும் அரசியல் ஆசையும் கொண்ட தலைவர்களுக்கும், சித்தாந்தமும் வரைவும் கொண்ட பெரியாரின் தலைமைக்கும் இடையே நடந்த போட்டி அது.

இந்த முரண்கள் வலுப்பெற்று கட்சியிலிருந்த பல முக்கியத் தலைவர்கள் விலகி, பெரியாருக்கு எதிராக நின்றபோது அவர் தனது சித்தாந்த வரைவைத் தெளிவாக்கிக்கொண்டு புதியவர்களை நோக்கி நகர்ந்தார். அண்ணாவை முன்னிறுத்தினார். பிரச்சாரத்தை முடுக்கி மாணவர்களையும் இளைஞர்களையும் கொண்டு களத்தை நகர்த்தினார். ஒருபக்கம் நீதிக்கட்சியின் மிகப்பெரும் தலைவர்கள் விலகியபோது மறுபக்கம் அடுத்த தலைமுறைக்கான பெரும் பட்டாளம் தயாராக இருந்தது. நெடுஞ்செழியன், அன்பழகன், கருணாநிதி, கே.ஏ.மதியழகன், சி.பி.சிற்றரசு, ஏ.வி.பி ஆசைத்தம்பி, கீ.வீரமணி போன்றவர்களின் வருகை இந்தக் காலத்தில்தான் நிகழ்கிறது. அடுத்த அரை நூற்றாண்டுக்கான தலைமுறையை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கொண்டுவந்து சேர்த்ததற்கு அடிப்படைக் காரணம், பிரச்சாரம்!

திராவிடர் கழகத்திலிருந்து திமுக உடைந்தபோது அண்ணாவும் இதைத்தான் செய்தார். தேர்தல் அரசியலை நோக்கி மெல்ல நகர்ந்த அண்ணா, மிகவும் நுட்பமாக, திமுகவைத் தொடங்கிய பிறகு நடத்திய போராட்டங்கள் அனைத்தையும் சமூகக் களத்தையும் அரசியல் களத்தையும் மையப்படுத்திய போராட்டங்களாக மட்டுமே வடிவமைத்தார். அதன் வழியாகத்தான் தனது சித்தாந்தத்தைக் கொண்டுசேர்த்தார். வாக்கு வங்கியோடு தொடர்புடைய, சமூகக் களத்தையும், அரசியல் களத்தையும் இணைக்கும் அத்தனை பிரச்சினைகளையும் போராட்டக் களமாக்கினார். அதன் மூலம் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

ஆனால், இன்றைக்கு இயல்பாகவே அத்தகைய களங்கள் உருவாகிவருகின்றன. ஆனால், களத்தில் திமுக அவற்றை கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது. அன்றைக்கு திமுகவை வளர்க்க பயன்படுத்தப்பட்ட உத்தி, எதிர்ப் பிரச்சாரத்தால் இன்றைக்குத் தேய்க்க உதவுகிறது.

திமுக பல தேர்தல் தோல்விகளைக் கடந்து வந்துள்ளது. ஆனால், அவற்றுக்கான காரணங்கள் வேறு; இப்போது உருவாகியிருக்கும் சூழல் வேறு. திமுகவின் நோக்கங்களுக்கும் களப் புரிதல்களுக்குமான இடைவெளி இன்று அதிகரித்திருக்கிறது. அந்த இடைவெளி ஒரு தலைமுறை இடைவெளியாகவும் இருப்பதுதான் கவனிக்கத்தக்கது. இந்த இடைவெளியை உடைக்கும் பிரச்சாரம்தான் திமுகவை அதன் காலத்தின் தேவைகளுக்கு ஏற்பத் தக்கவைக்கும். திமுக கட்சிக்குள் ஒரு புதிய கட்சியைக் கட்டமைக்க வேண்டிய நேரம் இது.

ஒருவகையில், அரை நூற்றாண்டு காலத்திற்குத் திமுகவை நிலைநிறுத்தி வைத்திருந்த கருணாநிதியின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும் பணி அது.

*(கட்டுரையாளரை தொடர்பு கொள்ள: writetovivekbharathi@gmail.com)*�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *