சினிமா ஸ்பெஷல்: முரண்பட்டு நிற்கும் திரையுலகம்!

public

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் வருடத்துக்குச் சராசரியாக 200 திரைப்படங்கள் வெளியாவது வழக்கமாகிவிட்டது. வெளியாகும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருகிறதோ இல்லையோ, சினிமாவைச் சுற்றி மிகப் பெரிய வியாபார சூதாட்டம் உள்ளது. அதேபோல் அரசுக்கும் சினிமா படங்கள் திரையிடுவதன் மூலம் வரி வருவாய் கிடைத்து வருகிறது. எனவே, பொழுதுபோக்கை மையமாக வைத்து இயங்கும் வியாபாரத்தில் சினிமாவும் முக்கிய இடத்தில் இருக்கிறது.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் தயாரிப்பாளர்கள் போதிய லாபம் இன்றி நஷ்டமடைந்து வருகின்றனர். இது அவர்களைப் பல வழிகளில் யோசிக்க வைத்திருக்கிறது. சினிமா டிஜிட்டல் யுகத்துக்கு மாறியதால் திரையிடல் செலவு குறைந்திருக்கிறது. அதேநேரம், டிஜிட்டல் நிறுவனங்கள் தங்களிடம் அதிக தொகை வசூலிக்கின்றனர் என்று கூறி மார்ச் 1 முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் புதுப் படங்கள் வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் தொடர்ந்து மூன்று வாரங்கள் புதுப் படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்தது இல்லை. மார்ச் 16 முதல் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளையும் நிறுத்தியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். அதாவது தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் முடியும் வரை படப்பிடிப்பை நடத்துவது இல்லை என்று கூறியுள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்குத் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (FEFSI) தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களின் இந்தப் போராட்டம் நியாயமானது. தங்களின் உரிமையை மீட்டெடுக்கப் போராடுகிறார்கள். எனவே, பெப்சி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும்” என்கிறார்.

பெப்சி சங்கத்தில் நாற்பதாயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். படப்பிடிப்புக்குச் சென்றால்தான் அவர்களுக்கு வருமானம். இந்த வேலைநிறுத்தம் குறித்து பெப்சி உறுப்பினர்களிடம் கேட்டபோது, “இது சரியான போராட்டம்தான். இந்தப் போராட்டம் ஒரு மாதம் நடந்தால் எங்களால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், ஒரு மாதத்தைத் தாண்டினால் அது எங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும். நாங்கள் சினிமா தொழிலாளிகள் என்பதால் வேறு வேலைகள் தெரியாது” என்று கூறுகிறார்கள்.

இந்த வேலைநிறுத்தம் குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் குறிப்பிடுகையில், “எங்களுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. சினிமா சார்ந்த எந்த ஒரு விஷயமும் இங்கு முறையாக இல்லாமல் உள்ளது. டிஜிட்டல் நிறுவனங்கள் அதிக தொகை வசூலிக்கின்றனர். அதிலும் VPF கட்டணம் என்பது இனியும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. திரையரங்க டிக்கெட் கட்டணம் முறைப்படுத்தப்படாமல் உள்ளது. அதைக் கணினி மயமாக்க வேண்டும். கணினி டிக்கெட் முறை கொண்டுவந்தால் ஒரு படத்துக்கு எவ்வளவு வசூல் வருகிறது என்று தெரியும். இதன்மூலம் போலி பாக்ஸ் ஆஃபீஸ் தகவல் இருக்காது. அதை வைத்துக்கொண்டு நடிகர்களும் சம்பளத்தை உயர்த்த முடியாது. அப்படியே உயர்த்திக்கேட்டாலும், இவ்வளவுதான் வசூல் வந்துள்ளது, நீங்கள் கேட்கும் தொகையைச் சம்பளமாக எப்படி கொடுக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கேட்க முடியும். இதுபோல திரைத் துறையில் தயாரிப்பாளர்களுக்கு உள்ள அனைத்துப் பிரச்சினைகள் தீரும் வரை வேலைநிறுத்தம் தொடரும்” என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் மார்ச் 16 முதல் திரையரங்கை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தத்தால் புதிய திரைப்படங்கள் வெளியாகாமல் புறநகர்ப் பகுதியில் உள்ள பல திரையரங்கங்கள் செயல்படாமல் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்,

1. மாநில அரசு நிர்ணயம் செய்துள்ள 8% கேளிக்கை வரியை நீக்க வேண்டும்.

2. திரையரங்குகளைப் பராமரிப்பதற்கான தொகையை ஆந்திரா போன்று ரூபாய் 1ல் இருந்து 5 ரூபாயாக உயர்த்த வேண்டும்,

3. அதிக இருக்கைகள் கொண்ட திரையரங்குகளின் சீட் எண்ணிக்கையைக் குறைக்க அனுமதி தர வேண்டும்,

4. திரையரங்குகளுக்கு வருடத்துக்கு ஒரு முறை உரிமம் புதுப்பிக்கும் விதியை மாற்றி மூன்று வருடத்துக்கு ஒருமுறை புதுப்பித்தல் என்ற முறையைக் கொண்டு வர வேண்டும்

இதற்கு உடனடியாக அரசு ஆணைப் பிறப்பிக்க தமிழக அரசை வலியுறுத்தி திரையரங்குகளை மூடி மார்ச் 16 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத காரணத்தால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழக அரசை எதிர்ப்பது எங்கள் நோக்கம் இல்லை” என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோகிணி ஆர்.பன்னீர்செல்வம்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகள் மூடப்படவில்லை. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் எனக் கூறிக் கொள்ளும் அபிராமி ராமநாதன், “தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் திரையரங்குகளுக்குப் புதிய திரைப்படங்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு இந்தி, ஆங்கில திரைப்படங்கள் இருக்கின்றன. இதைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள். இதனால் நாங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. ஆனால், இதுபோன்ற திரைப்படங்களை அவர்கள் திரையிட்டால் ரசிகர்கள் வர மாட்டார்கள். இதனால் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் வேலைநிறுத்தத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் மாநில அரசுக்கு எதிரானது என்று சொல்லப்பட்டாலும், அது தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிரானது என்று சினிமா துறையில் கூறுகின்றனர். அதாவது கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் புதிய திரைப்படங்கள் இல்லாமல் தியேட்டர்களில் வசூல் குறைந்துவிட்டது. அதனால் சாதாரணமான கோரிக்கைகளைக் காரணம் காட்டி தியேட்டர்களை மூடியுள்ளனர்.

தொழில் நடத்த படைப்புகளைத் தரும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்காமல் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு அபிராமி ராமநாதன் போன்றோர் சாதகமாக நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டுகின்றனர் தயாரிப்பாளர்கள். மொத்தத்தில் தமிழ் திரைப்படத் துறையில் திரையிடல், தயாரிப்பு என இரண்டும் முடங்கி விட்டது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இருவரது நோக்கம் சினிமா தொழில் நஷ்டம் இன்றி லாபகரமாக இருக்க வேண்டும் என்பது தான்.

தயாரிப்பாளர்களின் படங்களை நம்பித்தான் தியேட்டர்கள் உள்ளன. இந்தப் படைப்புகளை தியேட்டர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இடைத் தரகு வேலை செய்யும் டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டண உயர்வுதான் தமிழ்த் திரைப்படத் துறையில் வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெறக் காரணம் என்பது இரு தரப்புக்கும் தெரியும். படங்கள் இல்லையென்றால் தியேட்டர்கள் இயங்க முடியாது. தியேட்டர்கள் இயங்கவில்லை என்றால் டிஜிட்டல் நிறுவனங்கள் இயங்க முடியாது. தியேட்டர் உரிமையாளர்களும், படத் தயாரிப்பாளர்களும் இணைந்து டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்தால் இந்தத் தொழில் முடக்கத்தைத் தவிர்த்திருக்க முடியும்.

தங்கள் தனிமனித கெளரவம், சுயநலம் சார்ந்த செயல்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என்கிற இரு பெரும் முதலீட்டாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் பேசினால் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ் சினிமா திரையிடலை கட்டுப்படுத்த முனையும் சர்வாதிகார போக்கை முறியடித்து ஜனநாயகப்படுத்த முடியும். சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களா?

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *