~சமூகப் பிரச்சினைகளை ஒழிக்க ஐ.நா.வின் இலக்குகள்

public

உலகை மாற்றக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அரசுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உலகத் தலைவர்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபை சில இலக்குகள் மற்றும் செயல்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் உலகில் நிலவும் சமூகப் பிரச்சினைகளைக் களைய, செயல்படுத்தப்பட வேண்டிய 17 இலக்குகளை ஐ.நா. அறிமுகம் செய்துள்ளது. முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 8 இலக்குகளின் விரிவாக்கப்பட்ட வடிவமாக இது உள்ளது.

உலகின் தற்போதைய வறுமை நிலை, 1990ம் ஆண்டில் நிலவியதைவிட பாதியாகக் குறைந்துள்ளது. இதுவொரு குறிப்பிடத்தக்க சாதனை என்றபோதிலும், வளரும் நாடுகளில் வாழும் ஐந்தில் ஒருவரின் சராசரி தினசரி வருமானம் இந்திய மதிப்பில் ரூ.80ஐ விடக் குறைவாக உள்ளது. மேலும், லட்சக்கணக்கானோர் இதைவிடச் சற்றே அதிகம் சம்பாதிக்கின்றனர். எனவேதான் வறுமையை ஒழிப்பதை ஐ.நா. முதல் இலக்காக நிர்ணயித்துள்ளது.

வருமானம் மற்றும் வருவாய்க்கான வழிகளின்றி வறுமையால் வாழ்க்கைத்தரமே பாதிக்கப்படுகிறது. பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்படைவதோடு மட்டுமின்றி, கல்வி போன்ற அடிப்படை வசதிகளை அடைவதிலும் பின்னடைவு ஏற்படுகிறது. தன்னிறைவான வேலைகள் ஏற்படுத்தப்படுவதோடு, சமூகச் சமச்சீர் நிலை உருவாவதே சரியான பொருளாதார வளர்ச்சியாக இருக்கும்.

இன்றைய நிலையில், உலகில் 83.6 கோடிப்பேர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசியா மற்றும் சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள நாடுகளில் உள்ளவர்கள் மிக அதிகமாக வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய மற்றும் அரசியல் குழப்பம் அதிகமான நாடுகளில் வறுமையின் விகிதம் அதிகம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலகில் உள்ள ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைகளில், வறுமை காரணமாக ஏழு பேரில் ஒரு குழந்தையின் உயரம் சராசரியைவிட குறைவாகக் காணப்படுகிறது.

2030ம் ஆண்டுக்குள் வளரும் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் தற்போது நிலவும் வறுமைநிலையை பாதியாகக் குறைக்க, ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் உதவிகளோடு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது.

பசி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, மேம்படுத்தப்பட்ட சரிவிகித உணவு மற்றும் வேளாண் முன்னேற்றத்தை இரண்டாவது இலக்காக ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ளது. 79.5 கோடிப்பேர் தினசரி உண்ண வழியில்லாது, பசியோடு உறங்கச்செல்வதாக ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலக மக்கள் தொகையோடு ஒப்பிட்டால், ஒன்பதில் ஒருவர் போதிய உணவின்றிப் பசியோடு இருக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், 2050ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 200 கோடியாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் பசியால் வாடும் 12.9 சதவிகிதம்பேர், வளரும் நாடுகளில் வசிக்கிறார்கள். பசியால் பாதிக்கப்பட்டவர்களில் உலகின் மூன்றில் ஒருபங்கு மக்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் 45 சதவிகிதக் குழந்தைகள் அதாவது, ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள 31 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உயிரிழக்கின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *