கீழடி அகழ்வாய்வு தொடர வேண்டும்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

public

தமிழர்களின் தொன்மையான வரலாற்றை தெரிந்து கொள்ளவும், அக்கால மக்களின் வாழ்வு எப்படி இருந்தது என்பதற்கான சான்றாகவும் இருந்தது மதுரை அருகே நடந்த கீழடி அகழ்வாய்வு. ஆனால் அந்த ஆய்வை முடித்துக் கொள்வதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்து பணிகளையும் நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மாவுக்கு அகழ்வாராய்ச்சியை தொடர வேண்டும் என்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் தமிழாக்கம் இதுதான்

அன்புடையீர் வணக்கம் !

தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க, பழமையான பகுதிகளில் ஒன்றான, மதுரை – சிவகங்கை மாவட்டங்களுக்கு எல்லையாக இருக்கக்கூடிய சிலைமான் என்ற பகுதிக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்று வந்த அகழ்வாய்வுப் பணிகளை நிறுத்த, மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு எடுத்துள்ள துரதிருஷ்டவசமான முடிவை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் சார்பில் இப்பகுதியில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளில் இருந்து கிடைத்துள்ள பழமையான சான்றுகளின் மூலம், தமிழர்களின் நாகரிகம், வாழ்வியல் வரலாறு ஆகியவை 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக கருதப்படும் முக்கியத்துவம் வாய்ந்த சங்க கால நாகரிகச் சின்னமாக, கீழடி இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், வைகை நதிப்படுகையை ஒட்டியுள்ள, தேனி முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் 6வது அகழ்வாய்வுப் பிரிவு, கீழடியில் மேற்கொண்ட ஆய்வில், பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய கிணறுகள், சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள், பானையோடுகள் மற்றும் மண்பாண்டப் பொருட்கள், எலும்புகளால் ஆன ஆபரணங்கள் உள்ளிட்ட பலவித பழங்கால ஆபரணங்கள், இரும்பாலான குத்தீட்டிகள் உள்ளிட்ட ஆயுதங்கள், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பீங்கான் ஓடுகள் ஆகிய குறிப்பிடத்தக்க, முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான சான்றுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தின் பண்டைய கால, உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் மாநில மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்வதை தடுத்து நிறுத்தவும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை திடீரென நிறுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதேநேரத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் இதுபோன்ற அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித தடங்கலும் இன்றி தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

தொல்லியல் துறையால் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை தமிழக மக்கள் கடுமையாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இந்த முடிவு அவர்களை பெரும் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கி இருக்கின்றது. மேலும், பழம்பெரும் தமிழகத்தின் உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வரும் கீழடி அகழ்வாய்வை சீர்குலைக்கும் முயற்சியில், மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகமும் தமிழக மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழுவின் இதுபோன்ற ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற முடிவுகளால், தமிழக மக்களின் உணர்வுகள் எந்தவகையிலும் காயப்படக்கூடாது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்.

ஆகவே, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழகத்தின் தொல் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், மதிப்புமிக்க பழங்கால நாகரிகத்தையும் கண்டறிய, கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளவும், அதற்குத் தேவையான நிதியை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யவும், மத்திய தொல்லியல் ஆலோசனைக்குழு அனுமதியளிக்க உடனே நடவடிக்கை வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படி நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், தமிழக மக்கள் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையை என்றைக்கும் நினைவுகூர்வார்கள் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *