இரட்டை இலை சர்ச்சை : கூடுதல் அவகாசம் கோரி சசிகலா தரப்பு மனு!

public

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 8 வார காலம் அவகாசம் வழங்கவேண்டுமென்று, தலைமை தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சசிகலா, ஓ.பி.எஸ். தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் பெற்றது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலைச் சின்னத்தை யார் பெறுவது என்று சசிகலா அணிக்கும், ஓ.பி.எஸ். தரப்புக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது. அதையடுத்து, கடந்த மார்ச் 22ஆம் தேதி, தேர்தல் ஆணையம் இரு தரப்பையும் அழைத்துப் பேசி, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிவைத்தது.

மேலும் அதிமுக கட்சிப் பெயர், கொடியை பயன்படுத்தவும் இரு தரப்புக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வெவ்வேறு கட்சிப் பெயர், சின்னங்களில் போட்டியிடும்படி இரு பிரிவினருக்கும் தேர்தல் ஆணையம் ஆணையிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்தபின், ஏப்ரல் 17ஆம் தேதி மீண்டும் இரு தரப்பும் ஆஜராக வேண்டும் என்றும், அதன்பிறகே கட்சி, சின்னம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் அறிவித்தது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, சசிகலா அணி அதிமுக அம்மா என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும், ஓ.பி.எஸ். அணி அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் இரட்டை விளக்குகள் கொண்ட மின்கம்பம் சின்னத்திலும் தேர்தலை சந்தித்தன. ஆனால் பணப் பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகரில் நடக்கவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்கான முயற்சியில் அதிமுக-வின் இரு அணிகளும் தற்போது தீவிரமாகியுள்ளன.

சசிகலா அணியைப் பொருத்தவரை, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த நிர்வாகிகள் மூலம் கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர்களை தொடர்புகொண்டு பேசினர். அந்தந்த பகுதிகளில் உள்ள தொண்டர்களை சந்தித்து அவர்களிடமிருந்து ஆதரவுக் கடிதம் பெற வலியுறுத்தினர். அவ்வாறு பெறப்பட்ட கடிதங்கள், தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்போது சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஓ.பி.எஸ். அணியினர் ஏற்கெனவே பல லட்சம் பேருக்குமேல் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்.17ஆம் தேதிக்குள் இரட்டை இலைச் சின்னம் குறித்த ஆவணங்களை இரு தரப்பினரும் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு 8 வார காலம் அவகாசம் வழங்க வேண்டுமென்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *