இந்தியாவின் இறையாண்மையை காவிக் கொடியால் மறைக்காதே!- சென்னை பேரணி

public

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அழைப்பு விடுத்திருந்த கண்டனப் பேரணி இன்று (டிசம்பர் 23) காலை திட்டமிட்டபடி தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தமிழ்மொழிக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போராட்ட தியாகிகளான தாளமுத்து, நடராஜன் ஆகியோர் பெயர்களில் அமைந்த எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் இருந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை பேரணி நடைபெறும் என்று ஏற்கனவே திமுக அறிவித்திருந்தது. நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் மதுரையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவுக்காக சென்றார். அங்கிருந்து மாலை திரும்பும் முன், ஆர்.எஸ்.பாரதிக்கு போன் செய்து, ‘நாளை பேரணிக்கு அனுமதி குறித்து போலீசிடம் இருந்து ஏதும் தகவல் வந்திருக்கிறதா?’ என்று கேட்டார். இதுவரை தகவல் இல்லை என்று பாரதி சொன்னதும், ‘அவர்கள் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நாம் பேரணி நடத்துகிறோம். இரவு வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

நேற்று இரவு ஸ்டாலின் சென்னை வந்தவர் பேரணி ஏற்பாடுகள் பற்றி விசாரிப்பதற்காக நேராக அறிவாலயத்துக்கு வந்துவிட்டார். அறிவாலயம் செல்வதற்குள் சென்னை மாவட்டச் செயலாளர்களிடம் ஏற்பாடுகளை விசாரித்து அறிந்துகொண்டார். இதற்கிடையில்தான் பேரணிக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்ற ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் செய்யப்பட்டிருப்பது குறித்தும்,அதற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்த தகவலும் வெளியானது.

நேற்று இரவிலிருந்தே மாவட்டச் செயலாளர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் பேரணி புறப்பட்டு நிறைவு செய்யும் வரையிலான இடத்தைப் பார்வையிட்டு, மேடை அமைப்புகளையும் ஆய்வு செய்தனர். இரவிலிருந்தே ஏராளமான தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் சென்னையில் குவிந்தனர். காலை ஏழு மணியில் இருந்தே அவர்கள் பேரணி இடத்துக்கு வந்து சேர ஆரம்பித்துவிட்டனர். அண்ணாசாலை, எழும்பூரில் இதனால் போக்குவரத்து மாற்றப்பட்டது.

தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டு அதிலிருந்து பேரணி தொடங்க ஏற்பாடானது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திமுக பேரணியைக் கண்காணிக்க ட்ரோன்களையும் அவர்கள் பயன்படுத்தினர். தலைவர்களை வரவேற்று மேடை அருகே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமரவைத்துக் கொண்டிருந்தார் சேகர்பாபு. மா.சுப்பிரமணியன் மைக்கை பிடித்து தொண்டர்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்களை செய்துகொண்டிருந்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் அழகிரி, திக தலைவர் கி.வீரமணி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ தலைவர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தவாக தலைவர் வேல்முருகன், சிபிஎம் பாலகிருஷ்ணன், முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, கொமதேக ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் காலை 9.45 மணியளவில் பேரணி நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார்.

ஸ்டாலின், சிதம்பரம், வைகோ உள்ளிட்ட தலைவர்களுடன் பேரணி குறித்த நேரத்தில் தொடங்கியது. திமுகவின் அனைத்து அணிகள், தோழமைக் கட்சிகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்ட பேரணியின் முன்னால் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கையில் பதாகைகளுடன் நடந்துவந்தனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை அடைய சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் ஆனது.

பேரணி நிறைவுற்ற இடத்தில் சுமார் 11.30 க்கு வந்தடைந்த தலைவர்கள் அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினர். அப்போது திமுகவுக்கே உரிய ஸ்டைலில் முழக்கங்கள் முன் வைக்கப்பட்டன.

’இந்தியாவின் இறையாண்மையை காவிக் கொடியால் மறைக்காதே… ’

’உரிமை கொடு உரிமை கொடு ஒட்டுமொத்த அகதிக்கெல்லாம் இந்தியர் என்ற உரிமைகொடு’

’மாற்றாதே மாற்றாதே.. இந்திய நாடு சமத்துவ நாடு இந்து நாடாய் மாற்றாதே…’

’வேண்டும் வேண்டும் சட்டம் வேண்டும் அனைவருக்கும் பொதுவான குடியுரிமை சட்டம் வேண்டும் ’

’மத்திய அரசின் துரோகத்துக்கு எடப்பாடியே துணை போகாதே…’

இந்த முழக்கங்களை ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முன்கையை உயர்த்தி மீண்டும் முழங்கினர்.

முழக்கமிட்டு முடித்த பின் ஸ்டாலின் உரையாற்றினார்.

“இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனப் பேரணியை நம்முடைய கூட்டணி, தோழமை, பொது அமைப்புகள், பொது மக்கள் ஒத்துழைப்போடு இந்த பேரணி நடைபெற்றிருக்கிறது. இது பேரணி அல்ல, போர் அணி. இதில் பங்கேற்று உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கக் கூடிய ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்பாட்டம், பேரணியோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த கொடிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால் கூட்டணிக் கட்சிகளையும், அரசியல் கட்சிகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மீண்டும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

நேற்றைக்கு நீதிமன்றம் சென்று பேரணியை தடுக்கத் திட்டமிட்டது ஆளுங்கட்சி. ஆனால் நீதிமன்றம் தலையிட்டு தடையில்லை என்று தெரிவித்துவிட்டது. எனவே ஆளுங்கட்சிக்கும் நன்றி. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கும் நன்றி. எல்லாருக்கும் நன்றி. எப்படி அமைதியாய் பேரணி யில் பங்கேற்றீர்களோ அதேபோல் அமைதியாய் கலைந்து செல்ல வேண்டுகிறோம்” என்று கூறி முடித்தார் ஸ்டாலின்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *