ஆணையத்தின் விசாரணைக்குத் தடை: சசிகலா தரப்பு அதிருப்தி!

public

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், விசாரணை நீண்டுகொண்டே செல்லும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான விசாரணையில் அப்பல்லோ மருத்துவர்களை விசாரிக்க சிறப்பு மருத்துவர்கள் குழுவை நியமிக்க வேண்டுமெனவும், அதுவரை ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் அப்பல்லோ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மருத்துவர்கள் குழு அமைப்பது தொடர்பாக அடுத்த 4 வாரத்துக்குள் பதில்மனு தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு சசிகலா தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் நேற்று (ஏப்ரல் 26) செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டதால் இன்று எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. மே 10ஆம் தேதியிலிருந்து ஜூலை 1ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை என்பதால் வழக்கும் தள்ளிப்போகும். அதுவரை ஆணையத்தின் விசாரணையும் எதுவும் நடைபெறாது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “ஆணையத்தின் விசாரணை முடியப் போகிறது, உண்மை தெரியப்போகிறது. பன்னீர்செல்வம் எதற்காக விசாரணை கோரினார், சசிகலா பணிகள் என்னென்ன என்பது ஒருநாள் வெளிப்படப் போகிறது என்று சொல்லிவந்தேன். தற்போது விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் அதெல்லாம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரத்தையும் பகிர்ந்துகொண்டார்.

“28.02.2019 அன்று பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் இறுதியாக சம்மன் அனுப்பியது. அன்று இரட்டை இலை வழக்கின் தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வர இருந்ததால் நான் கேட்டுக்கொண்டதன் பேரில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவர் வரவில்லை. இந்த இடைக்காலத் தடை பன்னீர்செல்வத்துக்கே சாதகமாக இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரையும் விசாரித்ததாக குறிப்பிட்ட ராஜா செந்தூர் பாண்டியன், “பன்னீர்செல்வத்தைத்தான் முதலில் விசாரித்திருக்க வேண்டும். ரிச்சர்ட் பீலே வீடியோ கான்பரன்ஸ் விசாரணைக்கு தயாராக இருந்தார் ஏன் அழைக்கவில்லை” என்றும் கேள்வி எழுப்பினார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *