~7500 ஸ்மார்ட் வகுப்புகள், கணினி பாட கட்டணம் ரத்து!

politics

நடப்பு நிதி ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.36,895.89 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித்துறைக்குத் தமிழக அரசு ஒதுக்கியது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை இன்று சட்டப்பேரவையில் நடந்தது.

இதில், பள்ளிக்கல்வித்துறை சேவைகள் கணினி மயமாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

2022 – 23 ஆம் கல்வியாண்டு தொடங்கி 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும். முதற்கட்டமாக நடப்பாண்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7500 ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும்.

2713 நடுநிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் 210 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதன் மூலம் பத்து லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்.

பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், கழிவறைகளை, தூய்மை செய்தல் இரவு காவல் பணியினை மேற்கொள்ளுதல் போன்ற சேவைகள் வெளிப்பணியமர்த்துதல் வாயிலாகச் செயல்படுத்தப்படும். அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, படிக்க, எழுத மற்றும் புரிந்துகொள்ளும் திறனை மேம்படுத்த 6,250 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

100 மாணவர்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் அனைத்து தேவைகளையும், வசதிகளையும் உள்ளடக்கிய முழுமையான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக நடப்பாண்டில் 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் அறிஞர்கள், தலைவர்கள், விளையாட்டு, வீரர்கள் பல்துறை சாதனையாளர்கள் அறிவியலறிஞர்கள் படித்த பள்ளிகளும் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் அவற்றின் தனிச்சிறப்பு மாறாமல் புதுப்பிக்கப்படும்.

நூற்றாண்டு காணும் பள்ளிகளைச் சிறப்பிக்கும் வகையில் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும். இப்பள்ளி நூலகங்களில் உள்ள அரிய நூல்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின் உருவாக்கம் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படும். இத்திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தமிழர் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், கீழடி சிவகளை உள்ளிட்ட தொல்லியல் தளங்கள் குறித்த தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வண்ணம் தொல்லியல் துறை வாயிலாக ஆர்வமுடைய ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் செயல்படுத்தப்படும்.

ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்திற்காக 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப்பாடமாக பயிலும் மாணவர்களிடம் நடப்பு கல்வி ஆண்டிலிருந்து ரூ.200 தனி கட்டணமாக வசூலிக்கப்படுவது முழுவதுமாக ரத்து செய்யப்படும். இதனால் ஆண்டுதோறும் மூன்று லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள். இதற்கு ஆகும் செலவினமான ரூ. 6 கோடியை அரசு ஏற்கும்.

பல்வகை குறைபாடு காரணமாகப் பள்ளிக்கு வர இயலாத 10 ஆயிரத்து 146 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கி அவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்த ரூ.8.11 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாதாந்திர பெற்றோர் கூட்டம் நடத்தப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வுகளைத் திட்டமிட்ட கால அட்டவணைப்படி விரைந்து நடத்திடவும், போட்டித்தேர்வு நடைபெறாத காலங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலும் அரசுப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் நூலக சேவை கிடைக்கப்பெறாத இடங்களில் 15 லட்சம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் ரூ.56.25 லட்சம் மதிப்பீட்டில் நூலக நண்பர்கள் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழக அரசு பொது நூலகங்களை நாடிவரும் வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வு மாணவர்கள் பயன்பெறும் வகையில் 352 நூலகங்களில் இலவச வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்படும். 75 ஆயிரம் வாசகர்கள் பயன்பெறும் வகையில் ரூ.24.40 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும்.

பள்ளி கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் மற்றும் பொது வாசகர்களிடையே தமிழ் கலை மற்றும் பண்பாட்டு ஆர்வத்தை வளர்க்கும் வகையில் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட பல்வேறு அறிஞர்களின் படைப்புகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20 நூல்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெளியிடப்படும்.

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 4.80 லட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *