அறிவிக்கப்படாத வேட்பாளர் பட்டியல்: காரைக்குடியில் சீமான்?

politics

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு,ஏழு மாதங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் முக்கிய கட்சிகள் மட்டுமல்லாமல் அவற்றைச் சார்ந்த சிறிய கட்சிகள் பலவும் யாரோடு கூட்டணி, எத்தனை இடங்கள், எந்தெந்த இடங்கள் என்பதில் குழப்பத்தோடே வியூகங்களை அமைத்து வருகின்றன.

இந்த நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தேர்தல் பணியை அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் மூலம் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் பல தொகுதிகளில் இவர்தான் வேட்பாளர் என்று சமூக தளங்களிலும், தொகுதிக் களத்திலும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

இவ்வாறு வேட்பாளராக களம் இறங்கி வரும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் சிலரிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம்.

பொதுவாகவே தேர்தல்களை சந்திப்பதில் மற்ற கட்சித் தலைவர்களை விட சீமான் தெளிவாக இருக்கிறார். ஏனெனில் கூட்டணி என்ற சமரசப் போக்கில் எங்களுக்கு துளியும் ஆர்வமில்லை.

மேலும் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் சிறந்து களமாடுபவர்கள் யார் யார் என்பது சீமானுக்கு தெரியும். மற்ற கட்சிகளைப் போல இந்த தொகுதிக்கு இவரை வேட்பாளராக ஆக்கலாம் என்று தலைமைக்கு சிபாரிசு செய்ய வேண்டிய அவசியம் இங்கே இல்லை. ஒவ்வொரு தொகுதி செயலாளர் முதல் ஒன்றிய நகர நிர்வாகிகள் வரை தனிப்பட்ட முறையில் சீமானுக்கு அறிமுகம் உண்டு.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் தனக்கு அறிதலும் புரிதலும் இருப்பதால் வேட்பாளர்களை தேர்வு செய்வது சீமானுக்கு எளிதாகிறது. அந்த வகையில்தான் தன்னை சந்திக்கும் நிர்வாகிகளிடம், ‘நீ தான்டா தம்பி வேட்பாளர். வேலைய பாருடா ’என்று தொகுதி பெயரைச்சொல்லி அன்புச் சர்வாதிகாரத்தோடு சீமான் சில நாட்களுக்கு முன்பே உத்தரவிட்டு விட்டார்.

அதன் அடிப்படையில்தான் பல்வேறு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் பெரும் பிரகடனம் எதுவுமில்லாமல் அமைதியாக அதே நேரம் உறுதியாக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். ஒருவேளை இந்த முடிவில் மாற்றம் இருந்தாலும் அது ஒரு சில தொகுதிகளுக்கான தாக மட்டுமே இருக்கும்”என்கிறார்கள்.

2011 தேர்தலில் 1 சதவீதம் வாக்குகள் வாங்கிய சீமான் 2016 தேர்தலில் 3.8 சதவீதம் வாக்குகளை பெற்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மோடியா ராகுலா என்ற கேள்விக்கு இடையே கமலஹாசன், டிடிவி தினகரன் போன்ற போட்டிகளுக்கு இடையே 4 சதவீத வாக்குகளைப் பெற்றார் சீமான். இவரைப்போலவே நான்கு சதவீதம் வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கும் தினகரனுக்கும் இன்னமும் தேர்தல் நிலைப்பாடு பற்றிய தெளிவு இல்லாத நிலையில், சீமான் இப்பொழுதே அறிவிக்கப்படாத வேட்பாளர் பட்டியலோடு களம் இறங்கிவிட்டார்.

மேலும் இந்தப் பட்டியலில் 117 தம்பிகள், 117 தங்கைகள் இவர்களில் அண்ணன் சீமான் காரைக்குடியில் களம் காண்கிறார் என்றும் நாம் தமிழர் கட்சியினர் கூற ஆரம்பித்துவிட்டார்கள். காரைக்குடி சீமானின் சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள தொகுதியாகும்.

இதுகுறித்து விசாரித்தபோது, “ இந்தத் தேர்தலில் சீமானை காரைக்குடி தொகுதியில் போட்டியிட சொல்லி பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். இன்று (அக்டோபர் 15) நடக்கும் நாம் தமிழர் தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டு முடிவெடுக்கப்படலாம்” என்கிறார்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்.

**-ஆரா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *