ரூ.237 கோடி: காண்டிராக்டருக்கு கடன் கொடுத்த சசிகலா

politics

பணமதிப்பழிப்பு காலகட்டத்தில் 237 கோடி ரூபாய் மதிப்பு இழந்த ரூபாய் நோட்டுக்களை அரசு ஒப்பந்ததாரருக்கு சசிகலா கடனாக அளித்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா பணமதிப்பழிப்பு காலகட்டத்தில் மதிப்பு நீக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி இரண்டு மால்கள், ஒரு சர்க்கரை ஆலை, 50 காற்றாலைகள், ஒரு பேப்பர் மில், ஒரு மென்பொருள் நிறுவனம் என 1674.50 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் வாங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும், எப்படி சொத்துக்கள் வாங்கப்பட்டன என்பது குறித்தும், அதற்கு எவ்வாறு பணம் செலுத்தப்பட்டது என்பது குறித்த விற்பனையாளர்களின் வாக்குமூலத்தையும் தாக்கல் செய்திருந்தனர்.

வருமான வரி அறிக்கையின்படி, அரசு ஒப்பந்ததாரர் ஒருவருக்கு ரூ.237 கோடி வரை சசிகலா கடனாக வழங்கியது தெரியவந்துள்ளது.

அறிக்கையில், 2017 நவம்பர் 9ஆம் தேதி அதிமுகவின் அப்போதைய அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கையால் எழுதப்பட்ட குறிப்புகள் அடங்கிய துண்டுக் காகிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், பல்வேறு நபர்களுக்கு அளிக்கப்பட்ட பண விவரங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த காகிதம் சசிகலாவின் நெருங்கிய உறவினரான வி.எஸ்.சிவக்குமாருக்கு சொந்தமானது எனத் தெரிவித்தார். மேலும், தி.நகரிலுள்ள ஹரிசந்தனா எஸ்டேட்டின் இயக்குனராக சிவக்குமார் இருந்துவந்தார் என்றும், ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நமது எம்.ஜி.ஆர் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து கணக்கு வழக்குகளை சரிபார்த்துச் செல்வார் என்றும் பாலாஜி கூறினார். அடுத்தடுத்த விசாரணையில், 237 கோடி ரூபாய் மதிப்பு இழந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக 7.5 கோடி ரூபாய் கமிஷனாக வழங்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையின்போது அந்த காகிதத் தாளில் எழுதியது தான்தான் என சிவக்குமார் ஒப்புக்கொண்டதாகவும், பணப்பரிமாற்றம் தொடர்பான முழுத் தகவல்களை விரிவாக விளக்கினார் என்றும் வருமான வரி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு சசிகலா என்னை வரச் சொன்னார். பிறகு தமிழ்நாடு அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்கும் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தின் டி.எஸ்.குமாரசாமியிடம், 240 கோடி பழைய ரூபாய் நோட்டுக்களை அளித்து, புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றித் தர பேச்சுவார்த்தை நடத்தும்படி கூறினார். அவருடைய அறிவுறுத்தலின்படி, குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஒரு வருடத்திற்குள் 240 கோடி ரூபாயை புதிய நோட்டுக்களாக மாற்றித் தர வேண்டும் அல்லது வருடத்திற்கு 6 சதவிகித வட்டி தர வேண்டும் என்று அதில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, டிசம்பர் 29ஆம் தேதியன்று 101 கோடி ரூபாயும், டிசம்பர் 30ஆம் தேதி மற்றொரு 136 கோடி ரூபாயும் குமாரசாமியின் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

240 கோடி ரூபாய் தருவதாகத்தான் முதல் டீல் பேசப்பட்டது என்றும், ஆனால் 237 கோடி ரூபாய் மட்டும்தான் வழங்கப்பட்டது எனவும் குமாரசாமி தெரிவித்தார். ஆகவே, 237 கோடி ரூபாய்க்கு மட்டும் புதிய நோட்டுக்கள் வழங்க வேண்டும் அல்லது வட்டி செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த வாக்குமூலங்கள் கிடைத்தபிறகுதான் கிறிஸ்டி பிரைடுகிராம் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் ஜூலை 5, 2018 அன்று வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜூலை 7ஆம் தேதி குமாரசாமியின் உறவினர் திருப்பதியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில், மதிப்பு இழந்த ரூபாய் நோட்டுக்களை திருச்செங்கோட்டிற்கு கொண்டுவர உதவி செய்ததை ஒப்புக்கொண்டார்.

“சிவக்குமாரிடமிருந்து பணத்தைப் பெற்று பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் திருச்செங்கோடு கொண்டுசெல்லுமாறு தனக்கு போனில் குமாரசாமி அறிவுறுத்தினார். பின்னர் எனக்கு அழைத்த சிவக்குமார், இரண்டு டெம்போ 407 வாகனங்களை ஏற்பாடு செய்யுமாறும், டிசம்பர் 28 நள்ளிரவு 12 மணிக்கு தன்னை சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

எனினும், நான் அவரிடம் சென்னையில் வாகனங்களை ஏற்பாடு செய்ய முடியாது, ரகசியத்தின் முக்கியத்துவம் கருதி திருச்செங்கோட்டிலிருந்து ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினேன். வேறு வழியில்லை என்பதால் அவரும் ஒப்புக்கொண்டார். பின்னர் திருச்செங்கோட்டிலுள்ள எனது சகோதரர் வாலீஸ்வரன் என்கிற தங்கத்தை அழைத்து, இரண்டு வாகனங்களையும், நம்பிக்கை வாய்ந்த இரண்டு டிரைவர்களையும் அனுப்பச் சொன்னேன். அவரும் இரண்டு டாடா-407 வாகனங்களை அனுப்பிவைத்தார். அது அதிகாலை 5.30 மணிக்கு சென்னையை வந்தடைந்தது. அதன்பிறகு சிவக்குமாரின் அறிவுரைப்படி, தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி அருகில் வாகனத்தை பார்க் செய்தோம். ஒன்றன்பின் ஒன்றாக வாகனத்தில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்டன. அதன்பிறகு திருச்செங்கோடு புறப்பட்டோம். எங்களது வாகனங்களை சென்னையின் புறநகர் பகுதிவரை பாதுகாத்து அழைத்துவந்தனர்” என்று திருப்பதி தெரிவித்துள்ளார். இவ்வாறு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுதவிர ஜெயா பப்ளிகேஷன் சார்பில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள்களுக்கு விளம்பரங்கள் வெளியிடுவதன் மூலம் பல கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டது வருமான வரி அறிக்கையின் மூலமாகத் தெரியவந்தது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *