சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி சர்வதேச அளவில் புகழ் பெற்றது என்று கூறினார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.31,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விழாவில் வணக்கம் எனத் தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்ற பாடலையும் மேற்கொள் காட்டி பேசினார்.
“தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், சர்வதேச புகழ் வாய்ந்தது. அதுபோன்று சென்னையிலிருந்து கனடா வரை, மதுரையிலிருந்து மலேசியா வரை, நாமக்கல்லிலிருந்து நியூயார்க் வரை, சேலத்திலிருந்து தென்னாப்பிரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன” என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசிய பிரதமர், “இலங்கை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அங்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்று நீங்கள் அக்கறை செலுத்தி வருகிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன். நெருங்கிய அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்குகிறது” என்றார்.
**-பிரியா**