அமமுகவுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை: மௌனம் கலைத்த தினகரன்

politics

சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் படுதோல்வி, தனிப்பட்ட முறையில் கோவில்பட்டி தொகுதியில் தனக்கு ஏற்பட்ட தோல்வி ஆகியவற்றால் நீண்ட கால அரசியல் மௌனத்தில் இருந்த டிடிவி தினகரன், திடீரென தற்போது மேகதாது அணைக்கட்டுக்கு எதிராக ஆகஸ்டு 6 ஆம் தேதி தஞ்சையில் பெரிய ஆர்பாட்டத்தை நேற்று (ஜூலை 25) அறிவித்துள்ளார்.

அமமுகவின் தோல்விக்குப் பின் அக்கட்சியின் பல மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அமமுகவின் செய்தித் தொடர்பாளர் தாம்பரம் நாராயணனும் அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் டிடிவி தினகரனுக்கு எழுதிய கடிதத்தில்,

“அமமுகவில் பல்வேறு பொறுப்புகளில் தாங்களே பாராட்டும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டேன். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தாங்கள் கடைப்பிடிக்கும் நீண்ட மௌனமும், செயலற்ற நிலையும் என்னைப் போன்ற தீவிரமான செயல்பாடு உடையவர்களுக்கு ஏற்புடையது அல்ல. எனவே, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

மற்ற பலரும் அரசல் புரசலாக சொல்லிவந்த தகவலை தினகரனுக்கே கடிதம் எழுதி உடைத்துச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார் தாம்பரம் நாராயணன்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் சசிகலா தினகரனை அழைத்து, “நான் எப்போதும் சொல்லிவந்ததையே இப்போதும் சொல்கிறேன். அதிமுகதான் நமது கட்சி. இரட்டை இலைதான் நமது சின்னம். அதனால் இந்த அமமுக பணிகளை எல்லாம் அப்படியே வை என்று கூறியிருக்கிறார். அதனடிப்படையில்தான் தினகரன் கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார். வழக்கமாகவே அவர் நிர்வாகிகளுடன் பேசுவது அரிது. அதிலும் தோல்விக்குப் பிறகும் சசிகலாவின் அறிவுரைக்குப் பிறகும் மேலும் அமைதியாகிவிட்டார். இந்த இடைவேளையில்தான் அமமுகவில் இருந்து பழனியப்பன் உள்ளிட்ட முக்கியமான பலரும் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில்தான் திடீரென தஞ்சை மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆர்பாட்டம் நடத்த வேண்டும், நானே வருகிறேன் என்று தினகரன் சொன்னது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தஞ்சாவூரில் இருந்தும் சில நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்த நிலையில்தான் தினகரனின் இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு வந்திருக்கிறது. இது என்ன பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை” என்கிறார்கள் அமமுக நிர்வாகிகளே.

அமமுக ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் மேகதாது அணைத்திட்டத்துக்கு எதிராக தினகரன் கலந்துகொள்ளும் இந்த ஆர்ப்பாட்டம், அவரது அடுத்தடுத்த அரசியல் பயணம் பற்றிய கேள்விகளுக்கு பதிலாக அமையும்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *