�முதலிடத்தில் ரவீந்திரநாத், கடைசியில் அன்புமணி: தாக்கப்பட்டதா பத்திரிகை அலுவலகம்!

politics

தமிழக எம்.பி.க்களின் நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இரு அவைகளுக்கான இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

17ஆவது மக்களவைத் தேர்தல் நடந்துமுடிந்து எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இதுவரை இரண்டு முறை நாடாளுமன்ற அமர்வு கூடியுள்ளது. இந்தக் காலகட்டங்களில் எம்.பி.க்களின் வருகைப் பதிவு, பங்கேற்ற விவாதங்கள் குறித்த விவரங்கள் இரு அவைகளுக்குமான இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதில் இரண்டு அமர்வுகளில் தமிழக மக்களவை எம்.பி.க்களின் வருகை சராசரி தேசிய சராசரியை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. மாநிலங்களவை எம்.பி.க்களின் நிலையும் இதுதான். வருகைப் பதிவைப் பொறுத்தவரை அனைத்து உறுப்பினர்களையும் விட பாமக மாநிலங்களவை எம்.பி அன்புமணி ராமதாஸின் வருகைப் பதிவு மிகவும் மோசமானதாக இருக்கிறது. அவர் 15 சதவிகித நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இதுவரை இரண்டு விவாதங்களில் மட்டுமே அன்புமணி கலந்துகொண்டுள்ளார். அதில் எந்தவித கேள்வியையும் எழுப்பியதில்லை. அதோடு, எந்தவொரு தனிநபர் மசோதாவையும் அவர் கொண்டுவரவில்லை.

மக்களவையைப் பொறுத்தவரை அரக்கோணம் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் 46 சதவிகித நாட்கள் மட்டும் வருகை தந்து கடைசி இடத்தில் உள்ளார்.

மக்களவையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பி.க்களில் தருமபுரி செந்தில்குமார், தென்காசி தனுஷ்குமார், திண்டுக்கல் எம்.பி வேலுசாமி ஆகியோர் 100 சதவிகித நாட்கள் அவைக்கு வருகை தந்துள்ளனர். 9 எம்.பி.க்கள் 90 சதவிகிதத்துக்கு மேல் அவைக்கு வந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள மக்களவை உறுப்பினர்களில் 26 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், அவைக்கு வருவதில் வெகுவாக ஆர்வம் காட்டுகின்றனர்.

**ரவீந்திரநாத் முதலிடம்**

ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், தமிழகத்திலுள்ள அனைத்து எம்.பி.க்களை விடவும் அதிகமான விவாதங்களில் பங்கெடுத்துள்ளார். அவர் பங்கெடுத்த விவாதங்களின் எண்ணிக்கை 42. எனினும், ரவீந்திரநாத் குமார் 79 சதவிகித நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார். இது தமிழகம் மற்றும் தேசிய அளவிலான சராசரியை விட மிகவும் குறைவாக உள்ளது. “அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார்தான். ஆகவே, அவருக்கு அனைத்து விவாதங்களிலும் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது” என்று கூறுகிறார் அதிமுக முன்னாள் எம்.பி.

**டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகம் மீது தாக்குதல்**

அன்புமணியின் நாடாளுமன்றச் செயல்பாடுகள் மோசமாக உள்ளன என்று செய்தி வெளியிட்டதால் ஆத்திரமடைந்த பாமகவினர் நேற்று சென்னையில் உள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்குள் நுழைந்து பிரச்சினையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மாற்றத்துக்கான ஊடகவியலாளர்கள் மையம், “நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியான இந்த அதிகாரபூர்வத் தகவலின் அடிப்படையில், அன்புமணி ராமதாஸ் குறித்த செய்தி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது. முழுக்க, முழுக்க அதிகாரபூர்வமான தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. உண்மைக்குப் புறம்பான எந்தத் தகவலும் இதில் இடம்பெறவில்லை.

இருந்தபோதும், பாமகவைச் சேர்ந்த சிலர், நேற்று (25.12.2019) சென்னையில் உள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை மிரட்டியுள்ளனர். பாமகவினர் பத்திரிகையாளர்களை மிரட்டுவது இது புதிதல்ல. கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘இனி இந்தக் கேள்வியைக் கேட்டால் மரத்தை எல்லாம் வெட்ட மாட்டோம், இப்படி கேள்வி கேட்கிற ஆளை வெட்டி போட்டுட்டு அப்புறம் போராட்டம் பண்றோம்’ என்று பகிரங்கமாகவே மிரட்டிப் பேசினார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது பாமகவினர் இதுபோன்ற ஒரு அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டதுடன், பத்திரிகையாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாமகவினர் மீது கொலை முயற்சி உட்பட, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இதனை பாமக முற்றிலும் மறுத்துள்ளது. இதுதொடர்பாக பாமக தரப்பு அளித்த விளக்கத்தில், அன்புமணி ராமதாஸுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தி பரப்பிய டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தின், அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் சிவகுமார் மற்றும் சக பணியாளரான ஜெயா மேனன் அவர்களின் அழைப்பின் பேரில் நேரில் சென்று அவர்கள் வெளியிட்ட செய்திக்கான விளக்கம் கோரப்பட்டது. அவர்களின் அலுவலக கான்பிரன்ஸ் அறையில் அமர்ந்து அவர்களிடம் அவர்கள் வெளியிட்ட அவதூறு செய்திக்கான விளக்கத்தையும், அதற்கான நமது தரப்பு பதிலையும் நமது கட்சியின் செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி விளக்கமாக பேசினார். அப்போது இந்த நிகழ்வுக்கு தொடர்பில்லாத சிலர் அந்த அறையில் நுழைந்து அவரிடம் விளக்கத்தை வேறு திசைக்கு மாற்ற முயற்சித்து, அவரை வெளியேறும்படி கூறினார்.அதற்கு நான் அவர்களின் அழைப்பின் பேரில் வந்துள்ளேன் என்றும் , நீங்கள் உங்கள் அலுவலக சக பணியாளரிடம் கேளுங்கள் என்று கூறினார். அதற்கு ஜெயா மேனன் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கிறோம் , ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறி சக ஊழியர்களை அந்த அறையை விட்டு வெளியேற்றினார்.

இதுகுறித்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் பேசுகிறோம் என்றும் கூறினார். இந்த அனைத்தும் வீடியோ பதிவாக உள்ளது.தேவைப்படும் ஊடகவியாளர்களுக்கு தர தயாராக உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுதொடர்பாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பிலிருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *