திமுகவில் இருக்கும் முக்கியஸ்தர்கள் பலர் ஆன்மீக ஈடுபாட்டுடன் நெற்றி நிறைய விபூதி குங்குமத்துடன் இருக்கும் படங்களை வெளியிட்டு, ஜூனியர் விகடன் ஒரு கேள்வி பதில் வெளியிட்டிருந்தது. அதில், ‘வெங்கட் நாராயணா சாலையில் இருக்கும் திருப்பதி கோயிலுக்கு இடம் போதவில்லை என்று எங்கெங்கோ அலைகிறார்கள். திமுகவிடம் கேட்டால் அறிவாலயத்திலேயே இடம் கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது’ என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி இன்று (ஜூலை 9) முரசொலியில் ஒரு விளக்கம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் 1998 ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ, திமுக தலைவர் கலைஞரிடம் எடுத்த பேட்டியின் ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறார்கள்.
கடவுள் பற்றி சோ எழுப்பிய கேள்விக்கு, “ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். கடவுள் இல்லை என்பதை பெரியார் ஒரு இயக்கமாகவே நடத்தினார். அண்ணாவைப் பொறுத்தவரையிலும் அவரை ஒட்டி என்னைப் பொறுத்தவரையிலும் இந்தக் கருத்தை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்த விரும்பவில்லை. **எங்களைப் பொறுத்தவரை அண்ணா அவர்கள் திமுகவை ஆரம்பித்த பிறகு கடவுள் இல்லை என்ற வாதத்தை நாங்கள் முன் வைப்பதில்லை**” என்று கலைஞர் பதில் அளித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது முரசொலி.
முரசொலியின் இந்த விளக்கத்தை ஒட்டி திமுகவின் ஐடி விங் மாநில செயலாளரும் மதுரை சட்டமன்ற உறுப்பினருமான பழனிவேல் தியாகராஜன் தனது சமூக தளப் பதிவில், **“கடவுள் மறுப்பு ஒன்று மட்டுமே பெரியாரின் கொள்கை அல்ல. கொள்கை வழியில் தந்தை பெரியாரின் பேரன் நான். என்றாலும் நீதிக்கட்சியின் மூத்த தலைவராக பணியாற்றி, சபரிமலை அய்யப்பன் சிலையை தானமாக தந்த பி.டி.இராஜன் அவர்களின் பேரனும் நான்.** பலமுறை விளக்கமளித்தும் இந்த விமர்சனம் தொடர்வது வேடிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக இந்துக்களுக்கு எதிரி என்று பாஜகவினரும் பிற அமைப்பினரும் சமூக தளங்களில் திமுக மீது புகார்களை அடுக்கி வரும் நிலையில், அக்கட்சியின் ஐடி விங் செயலாளர் இக்கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
**-வேந்தன்**�,