}ஒட்டுக் கேட்பு: மீண்டும் வெடிக்கும் உலக பூதம்!

Published On:

| By Balaji

இந்தியாவின் பத்திரிகையாளர்கள் உட்பட உலகின் பல பத்திரிகையாளர்களது போன்கள் இஸ்ரேலிய நிறுவனத்தால் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பதாக தி கார்டியன் வெளியிட்ட செய்தி அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

என்.எஸ்.ஓ. என்பது ஓர் இஸ்ரேலிய நிறுவனம். இது ஸ்பைவேர் அதாவது ஒட்டுக்கேட்கும் சாஃப்ட்வேர்கள் தயாரித்து பல அரசுகளுக்கு விற்பனை செய்துகொண்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் ஸ்பைவேர் மூலம் இந்தியாவின் பல பத்திரிகையாளர்களின் அன்றாட தகவல் பரிமாற்றங்கள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கின்றன என்று கார்டியன் நேற்று (ஜூலை 18) செய்தி வெளியிட்டது.

இந்தியாவின் பைனான்சியல் டைம்ஸின் இதழின் ஆசிரியர் ரூலா கலாஃப் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள 180 க்கும் மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள், புலனாய்வு நிருபர்கள் என்எஸ்ஓ குழுமத்தின் அரசாங்க வாடிக்கையாளர்கள் என்ற அளவில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செய்தித்தாளின் வரலாற்றில் முதல் பெண் ஆசிரியராக ரூலா கலாஃப் பதவியேற்றார். அவர் டெபுடி எடிட்டராக இருந்தபோதிலிருந்தே அவரது போன் ஒட்டுக் கேட்கப்படுவது தொடங்கிவிட்டது. என்எஸ்ஓவின் வாடிக்கையாளர்களால் கண்காணிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்களின் கசிந்த பட்டியலில் அவரது எண் சேர்க்கப்பட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல், சி.என்.என், நியூயார்க் டைம்ஸ், அல் ஜசீரா, பிரான்ஸ் 24, ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா, மீடியாபார்ட், எல் பாஸ், அசோசியேட்டட் பிரஸ், லு மொன்ட், ப்ளூம்பெர்க், ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ், எகனாமிஸ்ட், ராய்ட்டர்ஸ் மற்றும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகிய ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள், நிருபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உலகம் முழுதும் அதிர வைத்துள்ளது.

இந்த செய்திக்கான உலகின் பல அரசுகளின் கருத்து கேட்டபோது இந்தியா அதை திட்டவட்டமாக மறுத்ததையும் கார்டியன் செய்தியாக வெளியிட்டுள்ளது.

“இந்தியா ஒரு வலுவான ஜனநாயகம். அதன் அனைத்து குடிமக்களுக்கும் தனியுரிமைக்கான உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக உறுதிசெய்ய உறுதிபூண்டுள்ளது. இந்த உறுதிப்பாட்டின் முன்னேற்றத்தில், தனிநபர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கும், சமூக ஊடக தளங்களின் பயனர்களை மேம்படுத்துவதற்கும், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதா 2019 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திரமான பேச்சுக்கான அடிப்படை உரிமை என்பது இந்தியாவின் ஜனநாயக அமைப்பின் அடிப்படையாகும். திறந்த உரையாடலின் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தகவலறிந்த குடிமகனை அடைய நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்.

ஒட்டுகேட்கப்படுவது தொடர்பான தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விகளுக்கான பதில்களை வைத்து ஊடகங்களால் புகாரளிக்கப்பட்டுள்ளது, அரசாங்க நிறுவனங்கள் இடைமறிப்புக்கு நன்கு நிறுவப்பட்ட நெறிமுறையைக் கொண்டுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இதில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்று தேசிய நலன் உள்ளிட்ட தெளிவான காரணங்களுக்காக மட்டுமே இது மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் ஒரு நன்கு நிறுவப்பட்ட நடைமுறை உள்ளது. இதன் மூலம் தேசிய பாதுகாப்பின் நோக்கத்திற்காக, குறிப்பாக எந்தவொரு பொது அவசரநிலை அல்லது பொது பாதுகாப்பின் நலனுக்காக, மையம் மற்றும் மாநிலங்களில் உள்ள ஏஜென்சிகளால் மின்னணு தகவல்தொடர்புக்கு சட்டபூர்வமான குறுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது”என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய ஸ்பைவேர் நிறுவனமான என் எஸ் ஓ, ‘கார்டியன் செய்தியில் கூறப்பட்ட தவறான கூற்றுக்களை உறுதியாக மறுக்கிறோம். அவற்றில் பல உறுதிப்படுத்தப்படாத கோட்பாடுகள், அவை உங்கள் ஆதாரங்களின் நம்பகத்தன்மை மற்றும் உங்கள் கதையின் அடிப்படையைப் பற்றி கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன” என்று கூறியுள்ளது.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share