மோடி ஆதரவு, நிதீஷ் எதிர்ப்பு: பாஸ்வான் கட்சியின் விசித்திர நிலைப்பாடு!

politics

பிகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடத் தயாராகிவிட்டது மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி.

பிகார் சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் 28 தொடங்கி நவம்பர் வரை மூன்று கட்டங்களாக நடக்கிறது. இதற்காக முதல்வர் நித்திஷ்குமாரை மீண்டும் முன்னிறுத்தி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலை சந்திக்கிறது.

இதில் முக்கிய அங்கம் வகிக்கும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தங்களுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்பதால் தனித்துப் போட்டியிடத் தயாராகிறது.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை எல்.ஜே.பி. தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் அக்டோபர் 1 ஆம் தேதி சந்தித்தார். அப்போது பாஜக தலைவர்களிடம், ”பாஜகவும் லோக் ஜனசக்தியும் ஒருவரை ஒருவர் எதிர்க்க வேண்டாம். தேர்தலுக்குப் பின் தேவைப்பட்டால் பாஜகவின் முதல்வரை ஆதரிப்போம். ஆனால் நிதீஷை எங்களால் விட முடியாது. எனவே தனித்துப் போட்டியிட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

கட்சித் தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் கடுமையாக நோய்வாய்ப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் லோக் ஜனசக்தி கட்சி தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதாகவும், ஆனால் பிகாரில் தனித்துப் போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி மோடி எங்கள் எதிரியில்லை.ஆனால் நித்திஷை விடமாட்டோம் என்ற முழக்கத்தைக் கையிலெடுத்திருக்கிறது லோக்ஜனசக்தி.

2015 சட்டமன்றத் தேர்தலில், 42 இடங்களில் போட்டியிட்ட பாஸ்வான் கட்சி, 4.83% வாக்குகள் பெற்று, இரண்டு இடங்களை மட்டுமே வென்றது. இந்த நிலையில், “வரும் தேர்தலில் நாங்கள் 143 இடங்களுக்கு போட்டியிட இருக்கிறோம். அதனால்எங்கள் வாக்குப் பங்கு இயல்பாகவே உயரும். நாங்கள் இனி 5% கட்சியாக இருக்க மாட்டோம்” என்கிறார்கள் பாஸ்வான் கட்சியினர்.

ஒருவேளை பாஜகதான் நித்தீஷுக்கு செக் வைக்க பாஸ்வானை பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகமும் பிகார் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *