iடாஸ்மாக் திறப்பு : பாமகவினர் போராட்டம்!

Published On:

| By Balaji

ஊரடங்கில் மதுக்கடைகள் திறப்பை கண்டித்தும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் பாமக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கொரோனா தாக்கம் குறைந்து வருவதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் ஜூன் 14ஆம் தேதிமுதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடை திறப்பு குறித்து அறிவிப்பு வெளியானவுடனே பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தன. இதை எதிர்த்து ஜூன் 13ஆம் தேதி பாஜகவினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பாமகவினர் இன்று(ஜூன் 17) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தி.நகரில் உள்ள வீட்டு வாயிலில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் பாமகவினர் தமிழக அரசு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி, பீரை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி எம்.எல்.ஏ தலைமையில் தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் பாமகவினர் தங்கள் வீடுகளுக்கு முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை தி.நகரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தின் முன்பு, பாமக இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.மூர்த்தி, “மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று சொல்லி வரும் நிலையில் கொரோனா காலத்தில் மதுகடைகளை திறந்துள்ளனர். கடந்த ஆண்டு அதிமுக அரசு மதுக்கடைகளை திறந்த போதுபோராட்டம் நடத்திவிட்டு இன்று அவர்களே மதுக்கடைகளை திறந்துள்ளனர்.

இன்னும் 15 நாள் அமைதியாக இருந்திருக்கலாம். யாருடைய அறிவுறுத்தலையும் கேட்காமல் மதுக்கடைகளை திறந்திருக்கின்றனர். தங்களுடைய முடிவை மறுபரீசிலனை செய்து மதுக்கடைகளை மூட வேண்டும்” என கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share