ரெட்பிக்ஸ் ஊடகத்தின் உரிமையாளரும், ஆசிரியருமான பெலிக்ஸ் ஜெரால்டுக்கு மே 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (மே 17) உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட்பிக்ஸ் ஊடகத்தின் உரிமையாளரும், ஆசிரியருமான பெலிக்ஸ் ஜெரால்டை கடந்த மே 10-ஆம் தேதி டெல்லியில் வைத்து திருச்சி போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர் திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மே 27-வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டு அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், கோவையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பெண் போலீசார் பாதுகாப்புடன் திருச்சி சிறையில் இருந்து கோவைக்கு பெலிக்ஸ் அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5-ல் நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பெலிக்ஸ் ஜெரால்டை மே 31-ஆம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், பெலிக்ஸ் ஜெரால்டு மீதான குற்ற வழக்குகளை திரும்ப பெற்று அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பெலிக்ஸ் மனைவி ஜேன் ஆஸ்டின் முதல்வர் தனிப்பிரிவில் நேற்று (மே 16) புகாரளித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
“என்னுடைய மனுவை முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரி ராம் பிரதீப்பிடம் கொடுத்துவிட்டு 10 நிமிடங்கள் பேசினேன். ‘சார் இந்த மனுவை முதல்வரிடம் தெரியப்படுத்துங்கள்’ என்று அவரிடம் கோரிக்கை வைத்தேன். என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்.
திருச்சி சிறையில் இருக்கும் எனது கணவரை மூன்று வழக்கறிஞர்கள் சென்று பார்த்தார்கள். கணவரின் அறிவுறுத்தலின் பேரில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் மன்னிப்பு வீடியோவும், ரெட் பிக்ஸ் எக்ஸ் வலைதளத்தில் மன்னிப்பு கடிதமும் போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ஆம் தேதி சவுக்கு சங்கர் பேசிய வீடியோவை பொதுப்பார்வையில் இருந்து விலக்கி பிரைவேட் செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த படத்தில் டூயட்… கரகாட்டக்காரன் 2 வருமா?: சுவாரஸ்யம் பகிர்ந்த ராமராஜன்
எம்.ஜி.ஆர் பாடும், ‘மலரே மௌனமா…’ வைரமுத்து பகிர்ந்த சுவாரஸ்ய வீடியோ