எஸ்.என். சாஹு
பாபாசாகிப் அம்பேத்கரின் 131ஆவது பிறந்த தினத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்தோலன் ஜீவி எனும் சொற்றொடரை உருவாக்கித் தனது மதிப்பைக் குறைத்துக்கொண்டார்.
போராட்டம் செய்வதன் மூலம் வாழ்வாதாரம் தேடுபவர்கள் எனப் பிரதமர் இதற்கு விளக்கம் அளித்தார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு கூறினார். மிகுந்த காழ்ப்புடனும் தரக்குறைவான தன்மையுடன் பயன்படுத்தப்பட்ட இந்த வாசகம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் இந்திய விவசாயிகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஆதரவு அளிப்பவர்களை நோக்கிப் பயன்படுத்தப்பட்டது. மக்களையும், வேளாண்மையோடு தொடர்புடையவர்களையும் கலந்தாலோசிக்காமல் அவரது அரசு கொண்டுவந்த சட்டங்கள், கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் அனைத்து தரப்பினர் மீதான காழ்ப்புடன் இதை அவர் கூறினார்.
“இந்தியாவில், ஆந்தோலன் ஜீவி எனும் புதிய சமூகம் தற்போது தோன்றியிருக்கிறது. வழக்கறிஞர்கள் போராட்டம், மாணவர்கள் அல்லது தொழிலாளர்கள் போராட்டம் என எந்த போராட்டத்திலும் இவர்களை பார்க்கலாம். வெளிப்படையாக அல்லது மறைமுகமாக இவர்கள் சென்று விடுவார்கள். இவர்களால் போராட்டம் இல்லாமல் இருக்க முடியாது. தொடர்ச்சியாக போராட்டத்திற்கான காரணங்களை தேடிக்கொண்டிருப்பார்கள். எல்லா இடங்களுக்கும் சென்று, மக்களை தவறாக வழிநடத்த பெரிய கொள்கை நிலைப்பாட்டை அளிக்கும் இவர்களை நாம் அடையாளம் காண வேண்டும். அவர்களிடம் இருந்து தேசம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆந்தோலன் ஜீவிகள் ஒட்டுண்ணிகள் போன்றவர்கள்” என்று மோடி கூறியிருந்தார்.
இந்தியப் பிரதமரிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகள், மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் வழிநடத்திய இந்தியாவின் மகத்தான போராட்ட இயக்கத்தின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் முன் நிற்பவர்களை, போராட்டக்கார்களுக்கு தலைமை தாங்குபவர்களை இழிவுபடுத்துவதன் மூலம், அரசு மேற்கொள்ளும் நியாயமற்ற முடிவுகளுக்கு எதிராக மட்டும் அல்லாமல், சமத்துவமின்மைக்கும் அநியாயத்திற்கும் எதிராக மக்களை போராட ஊக்கம் அளிக்கும் காந்தி, அம்பேத்கரின் பாரம்பரியத்தை அவமானப்படுத்தியுள்ளார்.
ஆந்தோலன் ஜீவி எனும் வாசகம் அம்பேத்கரை அவமதிப்பதாக அமைகிறது. அவரது முக்கிய முழக்கங்களில் ஒன்று கற்பி, போராடு, ஒன்றுபடு என்பதாகும். இந்த மூன்று துடிப்பான வார்த்தைகளை 1942 அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் மாநாட்டில் அவர் எடுத்துரைத்தார். 79 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியப் பிரதமர், போராட்டத்தை மறுக்கும் விதமாக, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை ஆந்தோலன் ஜீவி என்பதன் மூலம் அம்பேத்கரையே மறுத்துள்ளார்.
பேராசிரியர்கள் ழான் ட்ரேஸி, அமர்தியா சென் ஆகியோர் தங்களது ஆன் அன்சர்ட்டன் குளோரி: இந்தியா அண்ட் இட்ஸ் கான்ஸ்டிடியூஷன் புத்தகத்தில், புதிய இந்தியா எனும் தலைப்பிலான அத்தியாயத்தில், கற்பி, போராடு, ஒன்றுபடு வாசகத்தைப் பலமுறை மேற்கோள் காட்டியுள்ளனர்.
“சமூக நோக்கிலும் பொருளாதார நோக்கிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய அம்பேத்கர், கற்பி, போராடு, ஒன்றுபடு என்பதில் நம்பிக்கை இழப்பதற்கு பதில் அதை முன்னெடுப்பதற்கான காரணம் இருப்பதாக நம்பினார்” என்று குறிப்பிடுகின்றனர்.
எனவே, போராட்டக்கார்களை ஆந்தோலன் ஜீவி என இழிவுபடுத்தியதன் மூலம், பிரதமர், ஜனநாயகம் ஆழமாகி, நல்ல நிர்வாகம் மேம்படுத்துவதற்கான முக்கியத் தூணான பொதுச் சிந்தனையை உள்ளடக்கிய கற்பி, போராடு, ஒன்றுபடு என்னும் கருத்தாக்கத்தை கேலி செய்துள்ளார்.
அம்பேத்கரின் கற்பி, போராடு, ஒன்றுபடு என்னும் அழைப்பு, ஜனநாயகத்தில் மட்டும் சாத்தியம். அது இல்லாத இடங்களில் அல்ல என்று இந்தப் பேராசிரியர்கள் எழுதியுள்ளனர்.
“ஆனால், அம்பேத்கர் குறிப்பிட்டது போல, போராட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு நல்ல மற்றும் தகவல் சார்ந்த காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டும். இங்கு அவருடைய முதல் அழைப்பான கற்பி முக்கியமாகிறது. தகவல் சார்ந்த பொது செயல்பாட்டிற்கான அம்பேத்கரின் அழைப்பு ஊக்கம் அளிக்கிறது. புதிய இந்தியாவைக் கண்டறிவது அல்ல முக்கியம், அதை உருவாக்க பங்களிப்பதே” என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புத்தகத்திற்கு பிரிட்டனின் டெலிகிராப் நாளிதழில் மதிப்புரை எழுதிய அலெக்ஸ் வான் டுன்சுல்மன்,“சுதந்திர போராட்ட காலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அம்பேத்கரின் கற்பி, போராடு, ஒன்றுபடு எனும் குரலுக்கான மாபெரும் அழைப்பாக” இது அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மோடி உருவாக்க நினக்கும் புதிய இந்தியாவில் போராட்டமே இல்லை. எதிர்ப்பு மற்றும் போராட்டங்கள் அரசின் மாபெரும் சக்தியை எதிர்கொள்ள நேர்ந்து, பல எதிர்ப்பாளர்கள், போராட்டக்கார்கள் தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அம்பேத்கர் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் எவரும் ஆந்தோலன் ஜீவி என கருதப்பட்டு, கேலிக்கும், கிண்டலுக்கும், குற்ற நடவடிக்கைக்கும் உள்ளாகலாம். நவம்பர் 29ஐ அரசியல் சாசன தினமாக கொண்டாடும் மோடி அரசு, அம்பேத்கரின் வாசகத்தை மறுப்பது மிகவும் சோகமாகும்.
சுதந்திர இந்தியாவில் சிவில் போராட்டம் அல்லது ஒத்துழையாமைக்குப் போதுமான இடம் வேண்டும் என மகாத்மாவும் பரிந்துரைத்துள்ளார்.
ஆனால், மக்கள் போராட்டம் மூலம் கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கும் போது ஆந்தோலன் ஜீவி என இழிவுபடுத்தப்படுகின்றனர்.
எனவே அம்பேத்கரின் கற்பி, போராடு, ஒன்றுபடு முழக்கத்திற்கு உண்மையாக இருப்பது மிகவும் பொருத்தமாகும். இதுதான் அம்பேத்கருக்கான உண்மையான மரியாதையாக அமையும்.
*
கட்டுரையாளர் எஸ்.என். சாஹு முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு பத்திரிகை செயலராக இருந்தவர்.
இந்தக் கட்டுரை கடந்த ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளின்போது முதலில் வெளியிடப்பட்டது.
*
நன்றி: தி வயர்
தமிழில்: சைபர் சிம்மன்
.