Fமீண்டும் இ-பதிவு கட்டாயம்!

Published On:

| By Balaji

வெளிமாநிலங்களில் இருந்து விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு வருவோர்களுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் குறித்த அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸை விட 70 சதவிகிதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது ஒமிக்ரான். இந்தியாவில் மகாராஷ்டிராவில் 32 பேர், ராஜஸ்தானில் 17 பேர், டெல்லியில் 20 பேர், குஜராத்தில் 5 பேர், ஆந்திராவில், சண்டிகரில், தமிழ்நாடு,மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர், கேரளாவில் 5 பேர், கர்நாடகாவில் 8 பேர், தெலங்கானாவில் 7 பேர் என 97 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேருக்கு ஒமிக்ரானின் முந்தைய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. நோயின் பரவல் தீவிரமடைவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. சர்வதேச பயணிகள் மட்டுமில்லாமல், தற்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் சென்னை,கோவை உள்ளிட்ட விமானநிலையங்களுக்கும் புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கேரளா மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள் அனைவரும்,கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது, 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட,கொரோனா நெகடிவ் சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து தமிழ்நாடு வரும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்ய வேண்டும்.

வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்களில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் உடனடியாக சென்று பரிசோதனை செய்ய வேண்டும். இந்த உத்தரவுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச பயணிகளை பொறுத்தவரை, மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடபட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share