கொடிக்கம்பம் நட்ட சிறுவன் பலி: ஒப்பந்ததாரர் கைது!

politics

விழுப்புரத்தில் திமுக கட்சி கொடிக்கம்பம் நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் வழக்கில் பந்தல் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியில் திமுக நிர்வாகி பொன்குமார் என்பவரின் இல்லத் திருமண விழா கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. அதில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இவரை வரவேற்பதற்காக மாம்பழப்பட்டு சாலையில் பல்வேறு இடங்களில் திமுக கொடிக்கம்பம் நடப்பட்டு அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பந்தல், அலங்காரம் பணியை ஒப்பந்ததாரர் வெங்கடேசன் மேற்கொண்டிருந்தார். கொடிக்கம்பம் நடும் பணியில் விழுப்புரம் ரஹீம் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகன் தினேஷ் (12) என்ற சிறுவனும் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். சிறுவன் நட்ட கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுவன், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டரில், “பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது.

திமுகவினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். இனி எந்த உயிரும் போகக் கூடாது. சிறுவனை இழந்த குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிறுவனை வேலைக்கு அமர்த்தியதற்காக பந்தல் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் நேற்று (ஆகஸ்ட் 24) மாலை கைது செய்தனர்.

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மீது அஜாக்கிரதையாக வேலையில் ஈடுபடுத்தி இறப்பு ஏற்படுத்துதல் மற்றும் கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்பு வெங்கடேசன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *