ஆதீனம் பட்டினப் பிரவேசம் – நல்ல முடிவு எட்டப்படும்: சேகர்பாபு

politics

தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.

ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்துகொண்டு நகர்வலம் வருவது பட்டின பிரவேசம் என்று அழைக்கப்படும். இதுபோன்று மனிதனை மனிதனே சுமப்பது மனித மாண்புக்கு எதிரானது என்று திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்த மாத இறுதியில் தருமபுர ஆதீனம் சார்பில் பட்டினப்பிரவேசம் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்குத் தடை கேட்டு திராவிடர் கழகத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்த மனுவின் படி பட்டினப் பிரவேசம் நிகழ்வில் தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டார் கோட்டாட்சியர் பாலாஜி.

இந்த உத்தரவை எதிர்த்து பல்லக்கில் சுமக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கக் கேட்டு ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

காலம் காலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி குருவுக்கு நாங்கள் அளிக்கும் மரியாதை. அதை மாற்றக் கூடாது என்று அதில் வலியுறுத்தியிருந்தனர்.

பட்டின பிரவேசத்துக்குத் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அளித்த பேட்டியில், “சைவத்தையும் தமிழையும் பாதுகாக்கும் தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்தப் பாரம்பரியத்தை நடத்தக்கூடாது என்று கூறுவது வருத்தமளிக்கிறது. கலைஞர் ஆட்சியில் கூட இந்நிகழ்வு நடைபெற்றது. தற்போது ஏன் இதற்குத் தடை விதிக்க வேண்டும். ஆளுநர் வருகை தந்தது தான் இந்த நிகழ்ச்சி ரத்தானதுக்கு ஒரு காரணமாகும்.

உயிரைக் கொடுத்தாவது தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரதேசத்தை நடத்துவோம். இந்தப் பிரவேசத்தை முதல்வரே நேரில் வந்து தலைமை தாங்கி நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியை நடத்த முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறேன். நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் சட்டப்பேரவையில் இன்று (மே 4) இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் அவர் பேசுகையில், “தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற வேண்டும்” என்று பக்தர்கள் விரும்புகின்றனர். இந்நிகழ்ச்சியில் மரியாதை குறைவு என எதுவும் கிடையாது என்று கூறினார்.

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், பட்டின பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து விளக்கமளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “பட்டினப் பிரவேசம் குறித்து ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தப்பட்டது. பல்லக்கில் தூக்கும் நிகழ்வு மே 22ஆம் தேதி அன்று தான் நடைபெறும். எனவே, கால அவகாசம் உள்ளதால், தருமபுரம் ஆதீனத்துடன் தமிழக முதல்வர் பேசி, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். தருமபுர பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்படும்” என்று கூறினார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *