|சிஏஏ: 10, 000 பேர் மீது வழக்கு, கோலமிட்டவர்கள் கைது!

Published On:

| By Balaji

சிஏஏ எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட 10,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி ஆகியவை இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்படவே நேற்று காலை ஆலந்தூர் சிமெண்ட் சாலையில் பேரணி தொடங்கியது.

பேரணியில் கலந்துகொண்ட 10,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், 650 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை கைகளில் ஏந்திக் கொண்டு, சிஏஏ, என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராக முழக்கம் இட்டபடி சென்றனர். பேரணி ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கடந்து ஆதம்பாக்கம் சுரங்கப்பாதை அருகே முடிந்தது.இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

**கோலம் போட்டவர்கள் கைது**

சென்னை பெசன்ட் நகரில் இன்று (டிசம்பர் 29) கூடிய 5 மாணவிகள், 2 இளைஞர்கள் அடங்கிய குழு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் கோலமிட்டு நூதனமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோலத்தில் சிஏஏ வேண்டாம், என்.ஆர்.சி வேண்டாம், என்.பி.ஆர் வேண்டாம் என ஆங்கிலத்தில் எழுதியிருந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறையினர், அவர்களை கைது செய்தனர்.

வாகனத்தில் ஏற மறுத்து தரையில் அமர்ந்துகொண்ட ஒரு மாணவி, “ஏன் என்னைக் கைது செய்கிறீர்கள்?” என்று கேட்டார். எனினும் கைதுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரை, பெண் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். அனைவரும் பெசன்ட் நகர் பஸ் டிப்போ அருகிலுள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதற்கு இது மேலும் ஓர் உதாரணம்.சென்னை பெசன்ட் நகரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த ஆறு பேரை எடப்பாடியின் காவல்துறை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட பயன்படுத்தத் தடைவிதிக்கும் தரங்கெட்ட ஆட்சி இது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும்.மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனிடையே சிறிது நேர விசாரணைக்குப் பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share