அதிமுகவில் நீடித்து வந்த நீண்ட இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக கடந்த 28ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோருடன் அமைச்சர்களும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதியான இன்று காலை 9.30 மணியளவில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை முன்னிட்டு அவ்வை சண்முகம் சாலை முழுக்க ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர்.
கூட்டம் ஆரம்பித்தவுடன் பேசிய கே.பி.முனுசாமி, “ஜெயலலிதாவின் நல்லாசியோடு வரலாற்று சிறப்பு மிக்க நன்நாளில் 2021 சட்டமன்றத் தேர்தல் அதிமுக கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளரை அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் அறிவிப்பார்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இறுதியாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், “ஆட்சியும் கட்சியும் தொண்டர்கள் கையில்தான் இருக்க வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் கனவு தற்போது நனவாகிக்கொண்டிருக்கிறது. அந்த வழியில் நாம் வெகு சிறப்பாக செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வழிகாட்டு குழுவினரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது என முடிவு செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அறிவிப்பு வெளியான உடனேயே முழக்கங்கள் எழுப்பியும், சாலைகளில் பட்டாசு வெடித்தும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
**எழில்**
�,”