லெனினியத்திடமிருந்து சாதியவாதிகளை விரட்டியடிப்போம்!

politics

சாலமன்

லெனின் வெறும் பெயர் மட்டும் தானா? இல்லை, இல்லவே இல்லை. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வர்க்கப் போரில், ஒடுக்கப்பட்டோருக்கும் ஒடுக்குவோருக்குமான ஜனநாயகப் போரில், அரசுகளுக்கிடையிலான லாபவெறிப் போரை எதிர்த்து அரசுக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரில், உழைப்போருக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாக நின்று நடத்தும் தத்துவப் போரில் லெனின் எனும் வார்த்தையைக் கடக்காத எழுத்துகள் கிடையாது! லெனின் எனும் விடுதலைக் குறியீட்டை உயர்த்திப் பிடிக்காத பதாகைகள் கிடையாது. லெனினியம் எனும் சித்தாந்தத்தை இதயத்தில் பொறித்துக்கொண்டு இயங்காத விடுதலை இயக்கங்கள் கிடையாது.

ஏடறிந்த வரலாற்றில் நிகழ்ந்தேறிய வர்க்கப் போராட்டங்களை, தத்துவ முரண்களை எடுத்து வர்க்கப் போராட்டங்களை, தத்துவ முரண்களை இயக்கிய உற்பத்தி முறையைத் தொகுத்து, தொகுத்ததை பண்டம், பணம், மூலதனம் இவற்றுக்கு அடிப்படையான உழைப்பு என்பதனை வரலாற்று வழியில் பகுத்து, பொதுவுடைமை சமூகத்தைப் படைக்க, அந்தப் படைப்பாற்றலுக்கு உந்து விசையாக விளங்கும் தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்திப் பிடித்த மார்க்ஸாலும் ஏங்கெல்சாலும் ஆன மார்க்ஸியத்தை முழுவதுமாக உள்வாங்கி அதற்கு மேலும் மெருகூட்டி தான் வாழ்ந்த ரஷ்யாவில் நடைமுறைப்படுத்திய தத்துவச் செயலே லெனினியம்.

மார்க்ஸியத்தை வறட்டுச் சூத்திரமாக அல்லாமல் இயங்கியல் வழியில் வளர்த்தெடுக்கும் தத்துவமே லெனினியம். மார்க்ஸியம் அடித்தளம் என்றால் லெனினியம் கட்டுமானம். இத்தகைய அடித்தளத்தின் மீதான கட்டுமானத்தை அந்தந்த அரச எல்லை, அல்லது சில அரசுகளுக்கு உட்பட்ட சற்று விரிந்த எல்லையில் உழைப்போரைக் கொண்டு கட்டியெழுப்புவதே நம் ஒரே பணி. இத்தகைய பணியின் வடிவத்தை அந்தந்த அரச சமூக சூழல்களே தீர்மானிக்கும். அத்தகைய சமூகக் கட்டுமானப் பணியில் திரிபுவாதங்களும், அராஜகவாதங்களும், சீர்திருத்தவாதங்களும், அதிதீவிரவாதம் எனும் ‘இளம் பருவ கோளாறுகளும்’ எதிர்படவே செய்யும். அத்தகைய எதிர்படல்களை உழைக்கும் வர்க்கத்தின் எஃகுறுதி மிக்க அமைப்பினால் அம்பலப்படுத்தி, அழித்தொழித்து தத்துவ வழியிலும் செயல் வழியிலும் முன்னேறுவதே லெனினியத்தின் அரிச்சுவடியாகும். இத்தகைய அரிச்சுவடிகூட புரிந்துகொள்ள முடியாமல், இந்தியாவில் லெனினியத்தின் பெயரில் பல இடதுசாரிக் குழுக்கள் இயங்குகிறது. அவை இந்தியாவை வரையறுப்பதிலேயே ஒரு நூற்றாண்டுக் காலம் முக்கி முனகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் இயங்குதலில் மகத்தான தியாகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதே நேரத்தில் அதன் மறுமுனையில் திரிபு, துரோகம், சீர்திருத்தம், அராஜகம், அதி தீவிரம் ஆகியவையும் கொட்டிக் கிடக்கின்றன.

இங்கே இந்தியச் சமூகம் சாதியச் சமூகமாக இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வதிலேயே ஒரு நூற்றாண்டுக் காலம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இந்திய சமூகம் சாதியச் சமூகம்தான். இத்தகைய சாதியச் சமூகம்தான் இந்திய ஜனநாயகத்திற்கான முட்டுக்கட்டை என கூறிய மகத்தான தலைவர்களையெல்லாம் இத்தகைய இயக்கங்கள் இவர்களுக்குத் தெரிந்த சிலவகையான தத்துவப் பெயர்களை ஒன்றைச் சூட்டிப் புறக்கணித்து வந்திருக்கின்றன. அத்தகைய புறக்கணிப்புக்கு அதிகமாக உள்ளாக்கப்பட்டவர் அண்ணல் அம்பேத்கர் மட்டுமே. அண்ணல் அம்பேத்கருக்கு இவர்கள் கொடுத்திருக்கும் பட்டம் ‘சீர்திருத்தவாதி’! இப்படி அந்த மகத்தான புரட்சியாளரைக் கொச்சையான சாதிவெறியன்கூட இழிவு செய்ய முடியாது. ஆனால் லெனினியத்தின் பெயரால் இயங்கக் கூடியவர்கள் இதை செய்து வருகிறார்கள். ஒட்டுமொத்த மக்களையும் சுரண்டும் அரசு என்ற அமைப்பு முறையை அப்படியே வைத்துக்கொண்டு அதில் சில சீர்திருத்தங்கள் மட்டுமே போதும், மற்றபடி அரசு என்கின்ற வடிவம் இருக்கட்டுமே என வாதிட்ட ஐரோப்பிய வகைப்பட்ட அரச சீர்திருத்தக் கருத்துகளை அப்படியே வெட்டி அம்பேத்கரின் பெயரின் மீது ஒட்டி விடுகிறார்கள். ஏனெனில் இவர்கள் சுரண்டல் அமைப்பு முறை பற்றிய விளங்கிக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கும் அல்லது சாதி உணர்வுகளுக்கும் ஆட்படுகிறார்கள்.

சீர்திருத்தவாதம் என்றால் என்ன? மக்களைச் சுரண்டும் ஒரு சுரண்டல் அமைப்பு முறையைக் கேள்விக்கு உட்படுத்தாமல் அந்த அமைப்பு முறையை நியாயப்படுத்தி அதில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்வதே சீர்திருத்தம் ஆகும். இந்தச் சீர்திருத்தவாதம் ஐரோப்பிய நாடுகளில், இன்னும் பல உலக நாடுகளில் அரசுக்கும் மக்களுக்குமானதாக பலர் முன் வைத்தார்கள். ஆனால் இங்கே அண்ணல் அம்பேத்கர் முன் வைத்த சீர்திருத்தம் என்பது மக்களிடையே நிலவும் சாதிய அமைப்பு முறையை அல்லது சுரண்டல் வடிவத்தை அழித்தொழித்து மக்களை சமத்துவமாக மாற்றும் நிலையையே சீர்திருத்தம் என்கிறார். அப்பொருளிலேயே அதை அண்ணல் பயன்படுத்தவும் செய்கிறார். அரசு எனும் சுரண்டல் அமைப்பைச் சீர்திருத்துவது என்பது வேறு. சாதி எனும் சுரண்டல் அமைப்பை உடைத்து மக்களைச் சீர்திருத்துவது என்பது வேறு. இங்கு சாதியமைப்பை உடைத்து மக்களைச் சீர்திருத்த முயற்சி செய்தவர்களைப் புரட்சியாளர்கள் என்றே இனம் காணுதல் வேண்டும். அதேபோல சாதியமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு, மக்களை சாதியின் பேரால் பிரிந்து கிடப்பதை அங்கீகரித்துக்கொண்டே தீண்டுதலை மட்டும் (உறவு வழிப்பட்டு அல்ல, புற மண முறையால் அல்ல) அதாவது தொடுதல் வழிபட்டதை அங்கீகரிப்பவர்கள்தான் ஐரோப்பிய பொருளில் சீர்திருத்தவாதிகள். அதாவது இந்தியப் பொருளில் எதிர்ப்புரட்சி அல்லது புரட்சிக்கு எதிரான சக்திகள். அத்தகையப் பணியை இந்தியாவில் செய்ய முயற்சி செய்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவார். அவர்தான் சாதிய அமைப்பு முறையை, சனாதன அமைப்பு முறையை நியாயப்படுத்தி அதனுள்ளே தீண்டாமை மட்டும் கூடாது என்றவர். அவரின் அடியொற்றியே இன்றைக்கு லெனினியத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் தீண்டாமையை மட்டும் கேள்விக்குட்படுத்தி சாதி அமைப்பு முறையைக் கேள்விக்கு உட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். உண்மையில் இவர்கள்தான் இந்தியாவின் எதிர்ப்புரட்சிகர அல்லது இந்தியப் புரட்சிக்கு எதிரானவர்கள் ஆவர்.

“சமுதாயச் சலுகையை நியாயப்படுத்தும் வகையில், முதலாளித்துவம் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில், சுரண்டல் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில் அரசு பற்றிய போதனை பணி புரிகிறது’’ என்பதாக லெனின் கூறுவார். அதே வார்த்தையை இந்தியாவுக்குப் பொருத்திப் பார்த்தால் இங்கே சமுதாயச் சலுகையை நியாயப்படுத்தும் வகையில், சாதியம் இருப்பதை நியாயப்படுத்தும் வகையில், அரசு பற்றிய போதனை இருக்கிறது. ஏனெனில் இந்தியாவில் அரசு இயந்திரம் என்பது முதலாளிகளுக்கானதாக மட்டுமல்ல. உலகத் தொழில் முதலாளிகளோடு தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்ட பார்ப்பன, பனியாக்கள் கோலோச்சும் சாதிய இயந்திரமாகவும் இருக்கிறது. இன்னும் மூலதனத்தில் வளர்ந்து வரும் பல சாதியக் குழுக்களை உள்வாங்கக் கூடிய சாதிய இயந்திரமாகவும் இயங்குகிறது.

ஏழை, பணக்காரன்… அதாவது வர்க்கங்கள் மட்டுமே இருக்கிறது என்று நினைப்போருக்கு முதலாளித்துவத்துக்கான அரச இயந்திரம் கண்ணுக்குத் தெரிகிறது. சாதியின் பெயரால் ஒடுக்குபவன், சாதியின் பெயரால் ஒடுக்கப்படுபவன் இருக்கிறார்கள் என்று கருதுவோருக்கு இந்த இயந்திரம் முதலாளித்துவத்துக்கு மட்டுமானதாக இல்லாமல் அதனோடு சேர்ந்து இயங்குகிற சாதியத்துக்கானதாகவும் தெரிகிறது. அதனால்தான் “என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று – பிராமணியம். இரண்டு- முதலாளித்துவம்” என 1938 பிப்ரவரி 12, 13 தேதிகளில் மன்மத் நகரில் நடைபெற்ற ரயில்வேயில் பணிபுரிந்த ஒடுக்கப்பட்ட தொழிலாளர் மாநாட்டின் தலைமையுரையில் அண்ணல் அம்பேத்கர் கூறினார். அதே மாநாட்டில் இன்னும் துல்லியமாக அவர் பார்ப்பனியத்தை வரையறுக்கும்போது, “நாம் கணக்குத் தீர்க்க வேண்டிய எதிரி பார்ப்பனியம் என்று நாம் சொல்லும்போது அதை யாரும் தவறாக புரிந்துக்கொள்ளக் கூடாது. ஒரு சாதி என்ற முறையில் பார்ப்பனர்கள் பெற்றுள்ள அதிகாரம், சலுகைகள், நலன்கள் ஆகிய இவற்றைப் பார்ப்பனியம் என நான் கருதவில்லை. இந்த அர்த்தத்தில் பார்ப்பனியம் எனும் சொல்லை நான் பயன்படுத்தவும் இல்லை. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படை உணர்வை மறுப்பதுதான் பார்ப்பனியம் என்பதே எனது புரிதல்” என்றார்.

பிரெஞ்சு அரசன் பதினாறாம் லூயியும் அவனது மனைவி மரீ அண்டோனெட்டும் 1792ஆம் ஆண்டு பிரெஞ்சு மக்களால் அல்லது பிரெஞ்சு மக்கள் பங்கெடுத்த முதலாளித்துவப் புரட்சியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டபோது எழுந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் முழக்கத்தை எந்திரகதியாகப் புரிந்துகொள்ளும் இந்தியாவின் கொச்சையான அல்லது போலியான லெனினியவாதிகளுக்கு பார்ப்பனியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக அண்ணல் கூறிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் புரியாது. அதோடு லெனின் வழிகாட்டலில், தொழிலாளர், விவசாயிகள் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ரஷ்யப் புரட்சியைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் கூறும்போது “ரஷ்யாவில் பொதுவுடைமை சர்வாதிகாரம் மிகச் சிறப்பான சாதனைகள் புரிந்திருப்பதாக பெருமையாகக் கூறப்படுகிறது. இதை மறுக்க முடியாது. அதனால்தான் ரஷ்ய சர்வாதிகாரம் எல்லா பிற்பட்ட நாடுகளுக்கும் நல்லது என்று கூறுகிறேன்… நாம் ரஷ்யப் புரட்சியை வரவேற்கிறோம் ஏனெனில் சமத்துவத்தை ஏற்படுத்துவது அதன் நோக்கமாக உள்ளது” என்கிறார். ஆனால், அப்படிக் கூறிய புரட்சியாளரை இந்தியாவின் போலி லெனினியவாதிகள் ‘சீர்திருத்தவாதி’ எனும் ஐரோப்பியவாத கொச்சையான பொருளில் அடைக்க நினைக்கிறார்கள்.

ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக உழைத்த மகத்தான மனிதரை ஒரு சாதிக்குள் உள்ளடக்கிப் பார்க்கும் சாமானியனின் பார்வை எப்படியோ அப்படித்தான் மார்க்ஸிய தத்துவார்த்த ரீதியில் குறைவாக மதிப்பிடப்படும் ‘சீர்திருத்தவாதி’ எனும் பொருளில் அம்பேத்கரை அடைக்க நினைக்கும் முயற்சியும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு அத்தகையக் கட்சி ஒரு சுயேட்சைத் தன்மையில்லாமல் காங்கிரஸின் குடையின் கீழ் இயங்குவதாக முடிவெடுத்து மூன்றாம் அகிலத்தில் எம்.என்.ராய் மூலமாக அறிக்கை சமர்ப்பிக்க முயற்சி மேற்கொண்டபோது அம்முயற்சியை அம்பலப்படுத்தி எம்.என்.ராய் அவர்களை லெனின் மூன்றாம் அகிலத்திலிருந்து வெளியேற்றினார். அப்படி லெனினால் வெளியேற்றப்பட்டவரால்தான் இங்கே கம்யூனிஸ்ட் கட்சியே தொடங்கப்பட்டது என்பது வரலாறு. பிற்காலத்தில் அம்பேத்கர் எம்.என்.ராயை விமர்சிக்கும்போது “நிறையப் பேருக்கு திரு.எம்.என்.ராய் ஒரு புதிர். எனக்கும் அப்படித்தான். ஒரு கம்யூனிஸ்ட் தொழிலாளர்களுக்குத் தனி அரசியல் அமைப்புக் கூடாதென்கிறார். எத்தகைய மோசமான முரண்பாடு இது! இந்த கருத்து நிலையைக் கேள்விப்பட்டால் ,கல்லறையில் இருக்கும் லெனின் கூட புரண்டு படுப்பார்” என்கிறார். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு எம்.என்.ராய் மூன்றாம் அகிலத்திலிருந்து லெனினால் வெளியேற்றப்பட்டது தெரியாமலேயே அவரை அதே காரணத்துக்காக விமர்சித்தது சுவாரஸ்யமான தற்செயல் அல்லது அரசியல் ஒற்றுமைதான். எம்.என்.ராய் வகையறாக்கள் காங்கிரஸின் கீழ் இயங்கிக்கொண்டு இருந்தபோதுதான் “காங்கிரஸும் காந்தியும் தீண்டத்தகாதவர்களின் தலை மீது தொங்கும் கூர் வாள்” என்பதாக அண்ணல் வரையறுத்தார்.

இன்றும்கூட பல போலி லெனினியவாதிகள் பி.ஜே.பி பூச்சாண்டி காட்டி காங்கிரஸை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் வேளையில், 1943ஆம் ஆண்டு செப்டம்பர் 8 முதல் 17 வரை அகில இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதிநாள் உரையில் “தொழிலாளர்கள் இந்துமகா சபை (பி.ஜே.பி.யின் தாய் கட்சி) மற்றும் காங்கிரஸ் போன்ற வகுப்புவாத அல்லது முதலாளித்துவக் கட்சியிலிருந்து விலகி இருக்க வேண்டும். காங்கிரஸ் அல்லது இந்து மகா சபையோ, இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடி வரும் கட்சிகள் என்பதற்காக அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சியின் கூட்டணியினராக இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை. தொழிலாளர்களே தங்களது சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி இந்த இரு நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகா சபையின் உடும்புப் பிடியிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த முறையில் போராட முடியும். அதே நேரம் தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை எல்லாம்விட முக்கியமாக, இந்திய அரசியலில் நடைபெற்று வரும் பகுத்தறிவற்ற தன்மைகளுக்கு அது முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்றார். இந்தியாவின் தொழிலாளர்களைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்துகள் லெனினியத்திலிருந்து ஓர் அங்குலமாவது விலகுகிறது என இந்தியாவின் போலி லெனினியவாதிகள் சுட்டிக் காட்ட முடியுமா?

“அதிகாரத்துக்காக பாட்டாளி வர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் இல்லை” என்று லெனின் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக ஒரு நூற்றாண்டுக் காலம் முதலாளித்துவக் கட்சிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து அவற்றுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிற போலி லெனினியவாதிகளால் எப்படி அண்ணல் அம்பேத்கரையோ, சாதிய அமைப்பையோ புரிந்துகொள்ள முடியும்?

“உற்பத்திக் குவிப்பும் அதிலிருந்து ஏகபோகம் முழுவதும் வங்கிகள் தொழில் துறையுடன் இணைதலும் அல்லது ஒன்று கலத்தலும் மொத்தத்தில் இதுதான் நிதி மூலதன உதயத்தின் வரலாறு; இதுதான் நிதிமூலதனம் அல்லது ஏகாதிபத்தியம் என்ற கருத்தின் உள்ளடக்கம்” என ஏகாதிபத்தியத்தை வரையறுத்துதான் மார்க்ஸியத்தை மேலும் வளர்த்தெடுத்தார் லெனின். உலக மக்களின் உதிரத்தை உண்டு கொழிக்கும் ஏகாதிபத்தியத்தை இந்தியாவில் எதிர்த்திட “ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஒரு ஐக்கிய முன்னணி தேவை” என அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். அவருடைய வார்த்தைகளிலேயே கூறுவதெனில் “ஏகாதிபத்தியத்தை பொது எதிரியாக நடத்த வேண்டுமெனில், எல்லா வகுப்புகளும் தங்களின் நலன்களை மறந்து ஒரே குடையின் கீழ் திரள வேண்டும். ஒரு பொது எதிர்ப்பு முன்னணியைக் கொண்டுதான் ஏகாதிபத்தியத்தோடு போரிட முடியும். அதற்காக எல்லா அமைப்புகளையும் கலைத்து விட வேண்டும் என்று சொல்லவில்லை; இணைத்து விட வேண்டும் என்றும் சொல்லவில்லை, ஒரு பொது முன்னணி இருந்தால் போதும்” என்கிறார்.

ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போரிட ஐக்கியத்தை விரும்பிய அண்ணலைப் புறக்கணிக்கும் இந்திய போலி லெனினியவாதிகள் எப்படிப்பட்டவர்கள்? “இயந்திரங்களும் நவீன நாகரிகமும் பல தீமைகளைத் தோற்றுவித்துள்ளன என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால், அந்த தீமைகளுக்கு இயந்திரங்களும் நவீன நாகரிகங்களும் காரணமல்ல. தனிச் சொத்துரிமையும் சொந்த சுயநல ஆதாயங்களில் நாட்டம் கொள்வதையுமே புனிதமானவையாக மீறவொண்ணாதவையாக ஆக்கியுள்ள சமூக அமைப்பே இந்த தீமைகளுக்கெல்லாம் காரணம்.

இயந்திரங்களும் நாகரிகமும் ஒவ்வொருவரையும் பயனடையச் செய்யவில்லை என்றால் இதற்கான பரிகாரம் இயந்திரங்களையும் நாகரிகத்தையும் கண்டனம் செய்வதில் அடங்கியிருக்கவில்லை; மாறாக இவற்றின் பலன்களை ஒருசிலர் மட்டுமே அபகரித்துக் கொண்டுவிடாமல், அந்தப் பலன்களை எல்லோருக்குமே கிட்டச் செய்யும் வகையில் சமுதாயத்தை மாற்றி அமைப்பதில்தான் அந்த பரிகாரம் பொதிந்துள்ளது” என்று தனிச் சொத்துடமைக்கு எதிராக பேசியிருக்கும் அண்ணலை லெனினியத்துக்கு எதிராக நிறுத்துபவர்களுக்கு சாதியச் சிந்தனைத் தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

போலி லெனினியவாதிகளுக்கு சாதி சுகத்தை அனுபவித்துக் கொண்டே ஏகாதிபத்தியத்தை விரட்ட வேண்டும் என்கிற அவா இருக்கிறது. அந்த அவாவின் வெளிப்பாடே அண்ணல் அம்பேத்கரை லெனினியத்துக்கு எதிராக நிறுத்துவது. உலகத்தின் மகத்தான தலைவர்களின் தத்துவத்தையும் சிந்தனைகளையும் இணைப்பதில் போலி லெனினியவாதிகளின் சாதிய நலனே தடையாக இருக்கிறது. இந்தியாவில் மார்க்ஸிய லெனினியம் எனும் சமூக விஞ்ஞானம் வரையறுக்கும் ஜனநாயகம் மலர வேண்டும் என்றால் அது அண்ணல் அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்க வேண்டும்! ஏனெனில் இது வர்க்கச் சமூகங்களை மட்டும் உள்ளடக்கிய ஐரோப்பா அல்ல. சாதிச் சமூகங்களை உள்ளடக்கிய இந்தியா. இங்கே லெனினியம் வெல்ல வேண்டுமென்றால் சனாதனத்துக்கு எதிராகப் போராடிய புத்தரையும் அண்ணலையும் உள்வாங்க வேண்டும். லெனினியத்திடமிருந்து சாதியவாதிகளை விரட்டியாக வேண்டும்.

**கட்டுரையாளர் குறிப்பு**

சாலமன்,

அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி.

(கட்டுரையாளர் இளம் செயற்பாட்டாளர் திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இளமையில், இருபத்தைந்து ஆண்டுகளாகவே, புரட்சிகர அரசியலால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவர். கடந்த பத்தாண்டுகளாகப் போராட்டக்களத்தில் நிற்பவர். நிறைய புத்தகங்களைப் படித்து, நடைமுறைக்கான, தத்துவப் பார்வையை விதைப்பவர். போராட்டம், கைது, சிறை என வாழ்க்கையை வகுத்துக்கொண்டுள்ளவர். பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். லெனின் பிறந்த நாளில், நக்சல்பாரி இயக்கத்தைத் தோற்றுவித்த தோழர் சாருமஜும்தார் உருவாக்கிய, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஆதரவில், வளர்ந்த தோழர் சாலமன், லெனினியம் பற்றிய தனது மெருகூட்டப்பட்ட” வழிகாட்டல் கட்டுரையை வரைந்துள்ளார்.)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *