கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களுக்கோ கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கோ செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
மாஸ்க் அணிவதன் மூலமும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலமும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கலாம் என்று மத்திய மாநில அரசுகள் எச்சரித்து வருகின்றன.
தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. எனினும் பெரும்பாலானோர் மாஸ்க் இல்லாமல் வெளியில் செல்வதைக் காணமுடிகிறது.
இந்த சூழலில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் மாஸ்க் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்தார்.
அதன்படி சாலையில் செல்லும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் தலைமையில் மொத்தம் 8 குழுக்களாகப் பிரிந்து மாஸ்க் மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நான்கு மணி நேரத்தில் 50 ஆயிரம் மாஸ்க்குகள் வழங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த நான்கு மணி நேர இறுதியில் 67, 500 மாஸ்க்குகள் வினியோகிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதுபோன்று முககவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழகத்தில் 38 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்தாமல் உள்ளனர். வரும் 10ஆம் தேதி 31ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
**-பிரியா**