தமிழகத்துக்கு 12 அமைச்சர்கள் போதும்: கி.வீரமணி யோசனை!

politics

அமைச்சர்களின் எண்ணிக்கையை 12ஆக குறைக்கலாம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போதிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஊரடங்கின் காரணமாக தொழில் வளர்ச்சி முற்றிலும் தடைபட்டுள்ளதோடு, பொருளாதாரமும் கடுமையாக முடங்கியுள்ளது. இதனை சரிசெய்ய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும் சில நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கையில், “செவிலியர்கள் கல்லூரி, மருத்துவக் கல்லூரி இடங்களில், நீட் தேர்வு போன்ற முறைகளைத் தவிர்த்து, நுழைவுத் தேர்வுகள், மாணவர் சேர்ப்பு ஆகியவற்றை அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கு விடுவதன்மூலம் – கொரோனா போன்ற தொற்றுகள் – பொது நோய்கள் தடுப்புக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் அடிக்கட்டுமானம் வலுப்பெறவும் செய்ய முடியும். மத்திய அரசுடன் போராடியாவது விலக்குப் பெற முயற்சிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கி.வீரமணி, “எல்லாவற்றையும்விட முக்கியம் ‘சிக்கனக் கோடரி’ என்ற ஒரு சொற்றொடர் முக்கியம் (Austerity measures). முதலில் அது அமைச்சரவையிலிருந்து தொடங்கவேண்டும். 35 அமைச்சர்களுக்குப் பதில் 12 பேர் போதுமே. இதனால் பல வகையில் நிதிச் செலவு பலவும் கூட (பி.ஏ.,க்கள், காவலர்கள், வீடுகள்) குறையும் வாய்ப்பு ஏற்படும். அரசு அதிகாரிகள் இனிவரும் காலங்களில் பயணங்களை மேற்கொள்ள கட்டுப் பாடுகள் தேவை. மேல் வகுப்புகள் தரு வதைக் குறைக்கலாம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பல விசாரணை ஆணையங்களும், புதிய நியமனங்களும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஜெயலலிதா மரணம்பற்றி ஆராயும் ஆணையத்தால் என்ன பயன்? இப்போது அது செயல்படாத நிலையில், அதனை முடித்து வைக்கலாம். (Wind up all the Unnecessary Commissions) அரசு இலாக்காகளைக் குறைப்பதுபற்றி யும் ஒரு சீர்மை ஏற்படுத்த, ஒரு சிறு குழு அமைத்து உடனடியாக அதன் பரிந்துரைகளுடன், தேவையற்று பெருகிய துறை களைக் குறைத்து, அதில் பணிபுரிகிறவர் களை மற்ற பணிகளுக்குப் பயன்படுத்தி – வெளியே அனுப்பாமல் செய்யலாம்” என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *