முதல் ’தகைசால் தமிழர்’ விருது பெறும் என்.சங்கரய்யா

politics

தமிழ்நாடு அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட தகைசால் தமிழர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று(ஜூலை 28) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும் இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்ய ஒரு குழுவை அமைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும் சுதந்திரப் போராளியாகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15ல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால அரசியல்வாதியான என்.சங்கரய்யா சமீபத்தில் நூற்றாண்டு விழாவை கொண்டாடினார். கல்லூரி காலத்தில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றவர். இவர் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர். 1957,1962ஆம் நடைபெற்ற இந்திய தேர்தல்களில் மதுரைக் கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டாலும், 1967ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1982 – 1991வரை விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *