முதல்வர் -முருகன் சந்திப்பு: கூட்டணி பற்றி பேச்சு!

Published On:

| By Balaji

�தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜகவின் தமிழக தலைவர் முருகன் இன்று (அக்டோபர் 9) மாலை 6.30 மணி அளவில் சென்னையிலுள்ள முதல்வரின் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதை ஒட்டி அதிமுகவின் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக ஆகியவற்றிடம் இருந்து உடனடியாக வாழ்த்துச் செய்திகள் மரபுரீதியாக வரவில்லை.

இந்நிலையில் இன்று பகல் கமலாலயத்தில் வெற்றிவேல் யாத்திரை அறிவிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் செய்தியாளரிடம் பேசிய முருகன், “எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி நிலவரம் பற்றி சொல்ல முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுகவின் அன்வர்ராஜா, அமைச்சர் ஓ எஸ் மணியன் போன்றோர் கூட்டணிகள் பற்றி வெவ்வேறான கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்துவரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share