Hகைதாவாரா ராஜேந்திர பாலாஜி?

Published On:

| By Balaji

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்ஜாமீன் கேட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த போது, ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

[விருதுநகரைச் சேர்ந்த ரவீந்திரன் மற்றும் விஜய நல்லதம்பி ஆகியோர் இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தனித்தனியாக புகார் அளித்தனர்.](https://minnambalam.com/politics/2021/11/18/30/Money-laundering-case-Rajendra-Balaji-seeks-pre-bail)

இந்தப் புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராம் முத்துப்பாண்டி ஆகியோர் மீது கடந்த நவம்பர் 17ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீசார் கைது செய்துவிடுவார்கள் என்பதால், ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த நவம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி பெயரை தவறாக பயன்படுத்திய விஜய் நல்லதம்பி என்பவர்தான் குற்றவாளி. ஆனால்,அவரை காவல்துறை பாதுகாக்கிறது. போலீஸ் விசாரணைக்கு ராஜேந்திர பாலாஜி முழு ஒத்துழைப்பு வழங்கத் தயார். அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் வாதிட்டார்.

காவல்துறை தரப்பில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் இதுவரை 23 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது, அவருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி முன் ஜாமீன் மனு மீதான உத்தரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் ராஜேந்திர பாலாஜி எந்நேரமும் கைதாக வாய்ப்புள்ளது.

அதே சமயத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share