என்ன செய்தீர்கள்?சீனியர்களுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!

politics

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தனித்து போட்டியிடுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாஜகவுக்கான வாக்கு வங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை சில நேரடியான கறார் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கட்சியில் தற்போது சீனியர் தலைவர்களாக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயரை குறிப்பிடாமல் அவர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கடிதம் எழுதியுள்ளார் அண்ணாமலை.
தினந்தோறும் அவர் எழுதும் கடித வரிசையில் நேற்று (பிப்ரவரி2) எழுதிய கடிதத்தில்…
“உள்ளாட்சித் தேர்தல் என்பது வழக்கமான சட்டமன்ற பொது தேர்தலுக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கும் முற்றிலும் மாறுபட்டது. நாட்டைக் காக்க நடத்தப்படுவது சட்டமன்ற, பாராளுமன்ற பொதுத் தேர்தல்கள். நம் வீட்டையும் தெருவையும் காக்க நடத்தப்படுவது உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள்.

சமீபத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில், ஆளும் கட்சியாக திமுக இருந்த போதும், அதிமுக பாஜக கூட்டணி பல இடங்களில் ஆளும் திமுகவின் அத்துமீறல்களை எல்லாம் எதிர்த்து பெருவாரியாக வெற்றி பெற்றது.

அந்த வெற்றியும், பெற்ற வாக்குகளும் இரண்டு கட்சித் தொண்டர்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது, என்பதை மறுக்க முடியாது. பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கட்சியை வளர்த்தெடுக்கவும், தாமரை சின்னத்தை இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், உள்ளாட்சித் தேர்தல்களில் பரவலாக அதிக தொகுதியில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்

ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்தாலும், இனிவரும் காலங்களில் நாங்கள் இணைந்து செயல்பட முடிவெடுத்து இருந்தாலும், கட்சியின் நலன் கருதி, தொண்டர்களுக்கு நல்ல வாய்ப்பினை நல்கி உற்சாகப்படுத்துவதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் நலன் கருதி, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, தனியாக களம் இறங்குவது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் நாம் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் நட்புள்ளம் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், நம் கட்சியின் நலம் கருதி, அடிப்படை நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்ய, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுவதாக முடிவெடுத்துள்ளது”என்று கூறியுள்ள அண்ணாமலை தொடர்ந்து,
“நம் தேசிய தலைவர்களின் நல்லாசியுடன் இந்த முடிவினை உறுதியாகவும், இறுதியாகவும் நாம் எடுக்க மிக முக்கிய காரணம், உற்சாகத்துடன் வேலை பார்க்க உத்தரவாதம் அளித்த உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தல்…. கட்சிக்கான தேர்தல் இல்லை. இது முற்றிலும் தொண்டர்களுக்கான தேர்தல்.

இது நாள் வரை நான் கட்சியில் அதைச் செய்திருக்கிறேன், இதைச் செய்திருக்கிறேன் என்று சொல்லிய ஒவ்வொருவரும் தங்கள் சேவைகளின் தொண்டுகளின் உழைப்பின் பயன்களை ஓட்டுக்களாக மாற்ற வேண்டிய மிக முக்கியமான தொண்டர்களின் தேர்தல்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது நாள் வரையில் கட்சியில் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்றவர்கள் அதை ஓட்டு களாக மாற்றவேண்டும் என்று அண்ணாமலை தன் கடிதத்தில் கூறியிருப்பது சீனியர்களை நோக்கி நேரடியாக விட்டிருக்கும் எச்சரிக்கை என்கிறார்கள் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்.
**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *