ஓரணியில் முஸ்லிம் கட்சிகள்:   உலமா சபையின் அறிவிப்பு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021 ஏப்ரல் மே மாதங்களில் எதிர்பார்க்கப்படும் நிலையில்… அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்ற  குரல் எழுந்துள்ளது.

தமிழ் நாட்டில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பெரும்பான்மை நிர்வாகிகளை முஸ்லிம்களாகவே கொண்டுள்ளன. இவற்றின் மக்கள் பிரதிநிதிகள் இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள்.  அந்த அடிப்படையில் இவை முஸ்லிம் கட்சிகளாகவே அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகின்றன.

இப்போது இக் கட்சிகளில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் இருக்கின்றன. மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தற்போது இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற எம்எல்ஏவாக இருக்கிறார். எஸ்டிபிஐ கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்திருந்தது.

இந்த சூழலில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முஸ்லிம்கள் ஓரணியாக நின்று எதிர்கொள்ள வேண்டும்  என்ற முன்னெடுப்பை  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து இன்று (அக்டோபர் 11) இந்த அமைப்பின் தலைவர் அன்வர் பாஷா உலவி வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் ஓரணியாக நின்று எதிர் கொள்ள வேண்டும், சமுதாயத்தின் வாக்குகள் சிதறக்கூடாது, இதற்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் இயக்கங்களையும் ஓரணியில் திரட்ட வேண்டும் என்று ஜமாஅத்துல் உலமா சபையிடம் ஆன்றோர், கல்வியாளர்கள், சமுதாய பிரமுகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி மதுரையில் நடந்த. மாநில ஜமாஅத்துல் உலமா செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மாநில நிர்வாகக் குழுவுக்கு செயல்படும் முழு அதிகாரம் அளித்துள்ளது. எனவே தேர்தலில் சமுதாய ஒற்றுமை குறித்து உரிய நேரத்தில் தகுந்த முடிவுகளை ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாக குழு  அறிவிக்கும். காலம் கனியும் முன் எடுக்கும் முயற்சிகள் பயன் தராது என்பதால் நிதானமாக இருக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கும் அன்வர் பாதுஷா உலவி,

” கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சிகள் குறித்து தவறான புரிதல்களுக்கும், பரப்பப்படும் உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கும் உரிய விளக்கத்தை தேவைப்படும் சமயத்தில் ஜமாஅத்துல் உலமா சபை வெளியிடும்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜமாஅத்துல் உலமா சபையின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் கட்சிகளையும் முஸ்லிம் அமைப்புகளையும் ஓரணியில் திரட்டுவது என்பது…  பெரும்பான்மை வாதம் என்று வாதிடுபவர்களுக்கு  மிகப்பெரிய சாதகமான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று முஸ்லிம் சமுதாயத்துக்குள்ளேயே குரல்கள் கேட்கின்றன.

 அதேநேரம் முஸ்லிம் கட்சிகளுக்கு உள்ளேயே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் ஓரணியில் செல்வது என்பது நடைமுறையில் சாத்தியமா என்ற விவாதங்களும் உலமா சபையின் அறிவிப்பை ஒட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

**ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share